ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் ஒருவருக்குக் களத்தில் வரையப்பட்ட கோடுகளுக்குள் வேகமாக ஓடி இலக்கை அடைவது மட்டுமே குறியாக இருக்கும். அந்தக் கணங்கள் பொற்காலத்தின் சிறு துளிகள். இலக்கை எட்டியபிறகு கிடைக்கும் கையொலிகளும் ஆரவாரக் கொண்டாட்டங்களும் கூட அது தரும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது. அப்படித் தன் சாதனைகளில் திருப்தியுறாத கலைஞனாகத் திரையுலகில் காட்சி தருகிற சிலரில் ஒருவர், நடிகர் நாசர். 40 years of Nassars film career
அதைவிட மிக முக்கியமானது, தனிப்பட்ட அவரது வாழ்வனுபவங்கள் தரும் தன்னம்பிக்கை. ‘விழுவோம் எழுவோம்’ என்று வாய் வலிக்க முழங்காமல் செயலில் காட்டிய மனிதராக, அதன் வழியே சாதனை படைத்தவராக, அவற்றை உற்றுநோக்கிப் போற்றுகிற முன்னுதாரணமாகத் திகழ்பவர்.
ஆரம்ப காலம்! 40 years of Nassars film career
செங்கல்பட்டு மாவட்டத்தில் நத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர் நாசர். இவரது இயற்பெயர் முகம்மது ஹனீப். இவரது பெற்றோர் பெயர் மெஹ்பூப் பாஷா – மும்தாஜ். நகைக்கடையொன்றில் பாலீஷ் செய்யும் பணியைச் செய்து வந்தவர் இவரது தந்தை. ஒரு தங்கை, மூன்று சகோதரர்கள் என்று நாசரின் குடும்பம் பெரியது.
செங்கல்பட்டில் பியூசி முடித்தபிறகு, இளங்கலை தாவரவியல் பயில தாம்பரம் எம்.சி.சி.க்கு வந்தார் நாசர். அங்கிருந்த நாடக மன்றத்தில் சேர்ந்தார். அங்கு நாடகங்களில் நடித்தபோது கிடைத்த அனுபவங்களும் பாராட்டுகளும் நடிப்புத்துறை நோக்கி அவரை உந்தியது. அதேநேரத்தில், நடுத்தரக் குடும்பத்துச் சூழல் பணி செய்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. 40 years of Nassars film career
பசி இனிக்கும்..! 40 years of Nassars film career
சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் சமையற்கலைஞராகப் பணியாற்றியிருக்கிறார் நாசர். அந்தச் சூழலும் அப்பணியில் கிடைத்த வருமானமும் அவரது குடும்பத்தை வளம் பெற வைக்கப் போதுமானது. ஆனாலும், நடிப்பின் மீதான மோகம் அவரை வாட்டியது. விளைவு, சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புத் துறையில் சேர்ந்தார். ஜி.எம்.சுந்தர், அர்ச்சனா உள்ளிட்டோர் இவரது கல்லூரி சகாக்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

அதனைத் தொடர்ந்து சென்னை பிலிம் சேம்பரிலும் இவர் நடிப்பு பயிற்சி பெற்றார். கூத்துப்பட்டறை குழுவினரோடு சேர்ந்து இயங்கியிருக்கிறார். இப்படித் தனது நடிப்பார்வத்தை கூர்மையாக்குகிற அனைத்து விஷயங்களைத் தேடித் தேடிக் கண்டடைந்திருக்கிறார். 40 years of Nassars film career
ஏற்கனவே சொன்னது போல, ஹோட்டல் வேலையில் கிடைத்த வருமானத்தைக் கைவிட்டுவிட்டு இத்தனை தேடல்களையும் மேற்கொண்டிருக்கிறார். நடிக்க வாய்ப்பு தேடிப் பல தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குனர்கள் அலுவலகங்கள் ஏறி இறங்கியிருக்கிறார்.
நிச்சயமாக, அந்த காலகட்டத்தில் நாசர் பசியுடன் திரிந்த நாட்கள் அதிகமாக இருக்கும். கே.பாலச்சந்தரின் ‘கல்யாண அகதிகள்’ படத்தில் அறிமுகமானபிறகும் கூட, அடுத்த பட வாய்ப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை. அதற்காக, அவர் காத்திருக்க வேண்டியிருந்தது.
யூகிசேது இயக்குனராக அறிமுகமான ‘கவிதை பாட நேரமில்லை’ படத்தில் நாயகனாக நடித்தபோது, தயாரிப்பு அலுவலகத்திலேயே அவர் தங்கியிருக்கிறார். என்னதான் நடிப்பு வேட்கை ஆட்டிப் படைத்தாலும், வயிற்றுப் பசியையும் தோற்றத்தில் நிறைந்த வறுமையையும் வெல்லப் போராடுவதென்பது சாதாரண விஷயமல்ல.
பின்னாட்களில் அதனை நினைவுகூர்ந்தபோது, ‘அந்த அனுபவம் இன்றும் மனதிலிருக்கிறது பசுமையாக’ என்றார். அதனால், பசியை இனிப்பாக உணரவைத்த நாட்கள் என்றும் அவற்றைச் சொல்லலாம். 40 years of Nassars film career
அது மட்டுமல்லாமல், ’தான் யார்’ என்று தன்னைத் தேடிக் கொண்டிருந்த நாட்களின்போதுதான் வாழ்க்கைத்துணையான கமீலாவையும் நாசர் சந்தித்தார். அதனால், நாசரின் வாழ்வில் அந்த காலகட்டம் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடுகிற கணங்களுக்கு நிகரானவையாக அமைந்தது எனலாம். 40 years of Nassars film career
பன்முக ஆளுமை! 40 years of Nassars film career
கவிதாலயா தயாரித்த ‘வேலைக்காரன்’ படத்தில் நாசர் வில்லனாக நடித்தார். அது, திரையுலகில் அவருக்குப் புதிய கதவினைத் திறந்து வைத்தது. தொடர்ந்து வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வரத் தொடங்கின. 40 years of Nassars film career
மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் நாயகன் கமல்ஹாசனின் மருமகனாக நடித்திருந்தார் நாசர். மிகச்சில நிமிடங்களே அவர் வரும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றன. ஆனால், அந்த பிரேம்களில் நிறைந்திருந்த ‘ஹீரோயிசத்தை’ வெகுசில திரைப்படங்களில் மட்டுமே நாம் காண முடியும். 40 years of Nassars film career
அதன்பின்னர் வந்த ‘ஆவாரம்பூ’, ‘தேவர் மகன்’, ’மகளிர் மட்டும்’, ‘பிரியங்கா’, ‘குருதிப்புனல்’ படங்களில் வில்லத்தனத்தை வெளிப்படுத்திய போதும் அந்த ஹீரோயிசம் திரையில் மிளிர்ந்தது.

1987ஆம் ஆண்டுக்குப் பிறகு நிற்க நேரமில்லாமல், திரையுலகில் ஒவ்வொரு படப்பிடிப்புக்கும் ஓடிக்கொண்டே இருந்தார் நாசர். தொண்ணூறுகளில் நடுப்பகுதியில், தனது திரை வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடிவெடுத்தார். அது தந்த இடைவெளியில் ‘அவதாரம்’ கதையை உருவாக்கினார்.
மிக கமர்ஷியலான அந்தக் கதையை நடிகர் கார்த்திக்கை நாயகனாக வைத்து இயக்க விரும்பினார் நாசர். அது நிறைவேறவில்லை. முடிவில், தானே நாயகனாக நடித்து இயக்குனராக அவதாரமெடுத்தார்.
அந்தப் பட அனுபவங்களைப் பற்றி திரையாளுமை சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில், ‘ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்த நாள் எடுக்கப்போகிற காட்சிகள் பற்றி விவாதித்துவிட்டு, படப்பிடிப்பு நடந்த சிற்றூரில் உள்ள குளத்தில் படக்குழுவினர் அனைவரும் நீந்தி மகிழ்ந்தோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ‘work while you work, play while you play’ என்ற வாசகங்கள் தான் எனக்கு நினைவில் வந்தன. அதாவது, செய்கிற காரியத்தில் நூறு சதவிகிதம் மனதைச் செலுத்தினால் மட்டுமே அது சாத்தியம். நம்மில் பலர் அதனைச் சாத்தியப்படுத்த முடியாமல் திணறி வருகிறோம். அந்த தகவலைத் தெரிந்ததும், நாசர் ஒரு ஆசிரியராகத்தான் தெரிந்தார்.

மிக கமர்ஷியலான திரைப்படத்திற்கான கதையைக் கொண்டது ‘அவதாரம்’. ஆனாலும், தான் வியந்து பணியாற்றிய இயக்குனர்களை முன்மாதிரியாகக் கொண்டு அப்படத்தின் திரைக்கதையில் யதார்த்தத்தை நிறைத்தார் நாசர். அப்படத்தின் காட்சியமைப்பில் கொஞ்சமாய் கமர்ஷியல் அம்சங்களைச் சேர்த்திருந்தால் கூட வெற்றியைச் சுவைத்திருப்பார். ஆனால், தனது திரைக்கதை ட்ரீட்மெண்ட் மீது அவர் கொண்டிருந்த பிரியம் அவரைச் செய்யாமல் விடாமல் தடுத்திருக்கும் என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.
அதன் விளைவாக, பொருளாதாரரீதியில் சில பின்னடைவுகளைச் சந்தித்தார். மீண்டும் ‘தேவதை’ என்றொரு படத்தை இயக்கினார்.
‘அருவா வேலு’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ போன்ற படங்களில் நடித்து நாயகனாகவும் அவர் தன் முகத்தை மாற்றிக்கொண்ட தருணம் அது. ஆனாலும், திரையில் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை அள்ள அவர் விரும்பவில்லை. மாறாக, தான் விரும்பிய கதைகளுக்கு காட்சி வடிவம் தர விரும்பினார். தான் ரசித்த நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு மரியாதை செலுத்தும்விதமாகத் தனது திரை பாத்திரங்கள் இருக்க வேண்டுமென்று நினைத்தார்.
அதனால்தான் ‘அவ்வை சண்முகி’யில் அவரால் பாஷாவாக நடிக்க முடிந்தது. ‘மின்சார கனவு’ படத்தில் மாற்றுத்திறனாளி குருவாகத் தோன்ற முடிந்தது. ‘ஜீன்ஸ்’ படத்தில் நாயகன் பிரசாந்தின் தந்தை, சிற்றப்பாவாக நடிக்க முடிந்தது.

ஒரேநேரத்தில் இரு வேறு படங்களில் போர்க்குணமிக்க நாயகனாகவும், தளர்ச்சியடைந்த முதியவராகவும் எப்படி நடிக்க முடியும்? மனம் அதற்கு ஒப்புமா? நாசரைத் திரையில் பார்க்கும்போது அந்த கேள்விகளே மனதில் எழாது. காரணம், அதுதான் நாசர். அந்த ‘கணக்கு வழக்கு’ பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை.
‘மாயன்’, ‘பாப்கார்ன்’ படங்களை இயக்கி, தயாரித்து பொருளாதாரரீதியில் முடங்கியபோதும், அவரிடத்தில் ‘கணக்கு வழக்கு’ பற்றிய வருத்தம் ஏதுமில்லை. மாறாக, ’அதனை ஈடுசெய்யப் போதுமான அளவுக்குத் திரையுலகில் ஓட வேண்டுமே’ என்கிற எண்ணமே அவரிடத்தில் இருந்தது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகில் அவர் அழுந்தக் கால் பதிக்க அதுவே காரணமானது. அங்கு அவருக்குப் பலவிதமான பாத்திரங்களோடு நல்ல ஊதியமும் கிடைத்தது.
சில பாடங்கள்! 40 years of Nassars film career
நடிக்க வந்து பத்தாண்டுகளில் இயக்குனர் ஆனது, அதற்கடுத்த பத்தாண்டுகளில் படங்கள் தயாரித்து கடன்பட்டது, அதன் பிறகான சில ஆண்டுகளில் கடன் தந்த மனச்சுமையை இறக்கி வைக்க மீண்டும் ஓடியது என்றிருந்தது நாசரின் திரை வாழ்க்கை.
‘போதும்டா சாமி செட்டில் ஆயிருவோம்’ என்று தளர்ச்சி தொற்றுகிற நடுத்தர வயதில் அப்படியொரு மனப்பான்மையை ஏந்தியிருந்தது நாசரின் தனித்துவம்.

அப்படியொரு சூழலில், தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் வெறுப்பை உமிழ வேண்டிய நிலைமை நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், தனது குடும்பம், தனிப்பட்ட மனத்திடம் மற்றும் இதர காரணிகளின் வழியாக அதனை வெற்றிகரமாக நாசர் முறியடித்திருப்பார் என்று நம்பலாம். ஏனென்றால், திரையுலகப் பிரபலங்கள் பலர் அவரைக் குறிப்பிடுகிற தொனியே அதனைச் சொல்லிவிடுகிறது.
இன்றும், புதுமுக இயக்குனர்களோடு சேர்ந்து பணியாற்றி வருவது அவரது ஆளுமை எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும். 40 years of Nassars film career
அது மட்டுமல்லாமல் நடிகர் என்பதைத் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், டப்பிங் கலைஞர் என்று பன்முக ஆளுமையாக இன்றும் உலா வருகிறார். பாடல்களிலும் ஒலித்திருக்கிறது நாசரின் குரல். ஆனாலும், இன்றும் எளிய மனிதராகவே வாழ்கிறார்.
இத்தனை அனுபவங்களுக்குப் பிறகும், ’உழைக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. ஒருவகையில், அதுவே அவரை ஆசுவாசப்படுத்துகிற, அமைதி கொள்ள வைக்கிற, இன்பத்தில் ஆழ்த்துகிற ஒரு வழிமுறையாகவும் இருக்கக் கூடும்.
அதனை உணர்ந்தோ என்னவோ, ’ட்ரெய்ன்’ படக்குழுவினர் நடிகர் நாசருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் அவருக்கு 67 வயது நிறைவடைந்திருக்கிறது.
ஏப்ரல் மாதம் ‘தமிழ் புத்தாண்டு’ பிறந்தால், நாசரின் திரையுலகப் பயணம் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும்.
நாசருக்கு முன்னும் பின்னும் எத்தனையோ திரைக்கலைஞர்கள் ரசிகர்களைப் பரவசப்படுத்தியிருப்பார்கள். ஆனால், நாசர் உருவாக்கிய திரைக்கணங்கள் அவர்கள் தந்த அனுபவங்களைப் போலிருக்காது. அவ்வளவு ஏன், வருங்காலக் கலைஞர்களும் கூட அவரது பணியை மீளாக்கம் செய்ய முடியாது.
தனித்துவமான கலைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய சிறப்பு வாய்க்கும். அந்த வகையில், சாதனைகளை நினைவில் தேக்கிக்கொண்டு தேங்கி விடாதவராக, அடுத்த கணத்தின் ஆச்சர்யத்தைத் தேடி வாழ்வோட்டத்தில் ஓடிக் கொண்டிருப்பவராகத் திகழ்கிறார் நாசர். ஒரு பாதையை முன்னமைத்துச் செல்கிறார்..!