மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா இன்று (மே 11) காலை 10.30 மணியளவில் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
கடந்த 9 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் பரிந்துரையின்படி பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் அமைச்சராக டி. ஆர். பி. ராஜா இன்று காலை 10.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
டி. ஆர். பி. ராஜா பதவி ஏற்றப்பிறகு அவருக்கான இலாகா தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
மூன்று முறை எம்.எல்.ஏ
அமைச்சராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி. ஆர். பி. ராஜா தி.மு.க. பொருளாளரும், எம்.பியுமான டி. ஆர். பாலுவின் மகன் ஆவார்.
இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2011, 2016 மற்றும் 2021 என மூன்று முறை சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் டி ஆர் பி ராஜா.

அதிகரிக்கும் இளைய அமைச்சர்கள்
தமிழ்நாட்டில் பொதுவாக 60 வயதுக்கு அதிகமானவர்களே அமைச்சராக முடியும் என்று எழுதப்படாத விதி இருக்கும் நிலையில் தற்போதைய திமுக அமைச்சரவையில் இளைஞர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றபோது அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் இளம் வயது அமைச்சர் என்ற பெருமையை மதிவேந்தன் பெற்றார்.
தற்போது தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அவருக்கு 38 வயதே ஆகிறது.
அதேபோல் 45 வயதான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக உள்ளார்.
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு 47 வயதாகிறது. அதேபோல் கடந்த ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் 45 வயதுதான் ஆகிறது.
இந்த வரிசையில் தற்போது தற்போது அமைச்சராக 46 வயதான டிஆர்பி ராஜா பதவியேற்பதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் 50 வயதுக்கும் குறைவான அமைச்சர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கேரளாவில் பெண் மருத்துவர் கொடூர கொலை: வலுக்கும் போராட்டம்!
குஜராத்தின் குறைந்த விலை பம்ப் செட்டுகள்: தடுமாறும் கோயம்புத்தூர்!
