மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம் CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளதாவது: இந்திய தொழிலாளி வர்க்கம் 150 ஆண்டு காலம் போராடி பெற்ற ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்புகளை உள்ளடக்கிய 29 சட்டங்களை தொழிலுறவு சட்டத்தொகுப்பு 2020, சம்பளத் தொகுப்பு 2019, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் சட்ட தொகுப்பு 2020 மற்றும் சமூகப் பாதுகாப்பு தொகுப்பு 2020 என நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக நாடாளுமன்றத்தில்ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியது.
இந்த சட்ட தொகுப்புகள் சட்டமாக்கப்பட்டாலும் இந்திய தொழிலாளி வர்க்கம் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியதின் விளைவாக அமலாக்கத்தை ஒத்திவைத்தது மோடி அரசு. பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான குரூரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.
தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் 21.11.2025 முதல் நடைமுறைப்படுத்த நிர்வாக ரீதியிலான அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது.
மோடி அரசின் இத்தகைய செயலானது இந்திய பெரும் முதலாளிகளையும், கார்ப்பரேட்டுகளின் லாப வேட்கைக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளதாகும். இனி தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை தட்டி கேட்க முடியாத வகையில் சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை மறுக்கப்பட்டு தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்படுவார்கள்.
இதன் விளைவாக, தொழிலாளர்களின்உண்மை ஊதியம் மென்மேலும் குறைந்தும், 70 சதவிகிதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக குறைந்து, காண்ட்ராக்ட், தினக்கூலி, குறிப்பிட்ட கால வேலை முறையில் அத்துக்கூலிகளின் பெருமளவிலான வேலைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பற்ற தொழிலாளார்கள் கூட்டம் பெருகும் ஆபத்தை உண்டாக்கும். இது இந்திய சமூக, அரசியல், பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். தொழில் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து தொழிலமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தும்.
மோடி அரசின் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவகம் செய்ய தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் அமலாக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென சிபிஐ (எம்) ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை: இன்று நாடு முழுவதும் கட்டாயமாக அமலாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களின் நலனையும் மனிதநேய உரிமைகளையும் நேரடியாக புறக்கணிக்கும் முடிவாகும். உழைக்கும் மக்களை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே ஒன்றிய அரசு எடுத்திருக்கும் இந்தச் சட்டங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
8 மணி நேர வேலை நேரம் என்பது ஒரு சாதாரண விதிமுறை அல்ல; தலைமுறைகள் கடந்து நடந்த ரத்தத்தும் உயிர்தியாகங்களும் கொண்ட போராட்டங்களின் பயனாக உருவான வரலாற்றுச் சாதனை. தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமையாக இதை உறுதி செய்தவர் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். ‘தொழிலாளர் ஒரு மனிதன்; இயந்திரம் அல்ல’ என்ற அவரின் உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 8 மணி நேர வேலை நேரம் என்பது சட்டமாக கொண்டுவரப்பட்டது. அந்த உரிமையை 12 மணிநேரமாக நீட்டிக்க முயல்வது தொழிலாளரின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு.
மேலும், தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை, தொழிலாளர் வர்க்கத்தின் குரலையும் பாதுகாப்பையும் பறிக்கும் செயலாகும். இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்காக அல்ல; நாட்டின் பெருஞ்செல்வத்தை தன் வசம் வைத்துள்ள பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அம்பானிக்கும், அதானிக்கும் திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன.
உழைப்பால் தேசத்தை வளர்க்கும் மக்களின் சுவாசத்தையும், துன்பத்தையும் இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது. இந்த நாள் இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினமாகும், தொழிலாளர்களின் நலனையும், உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் இந்த சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உழைக்கும் மக்களின் வியர்வையை நாட்டின் செல்வமாக மதிக்கும் அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே எங்கள் உறுதியான நிலைபாடு.
இந்த அநீதி நீங்கும் வரை, எங்கள் குரலும், எங்கள் போராட்டமும் தொடர்ந்தும் ஒலிக்கும். தொழிலாளர்களின் உரிமை காக்கப்படும் வரை நாம் ஒருபோதும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
