தமிழகத்தில் மட்டும் 4 முதல்வர்கள் ஆட்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் செங்கல்பட்டில் இன்று (செப்டம்பர் 16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,
“திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாத காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
சர்வாதிகார ஆட்சியில் மக்கள் துன்பமும், துயரமும் பட்டு வருகின்றனர். இப்போது மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள்.
இது ஒரு குடும்ப ஆட்சி. ஒரு மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் 4 முதலமைச்சர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய மருமகன், மகன், மனைவி தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்த ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் மட்டும் தான் சரியாக நடக்கிறது.
திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றும் வேலை தான் நடக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த உடன் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.
கூரை வீட்டுக்கு கூட வரி போடும் அரசாக திமுக அரசு இருக்கிறது. இப்போது உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
கலை.ரா