‘டை அடிப்பது சகஜமாகிவிட்ட இக்காலத்தில்… ‘ஹேர் டை பயன்படுத்துறீங்களா?’ என்ற தலைப்பு கொஞ்சம் அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் அதுதான் உண்மை என்கிறார், சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்.
”டை பயன்படுத்துவதால்… அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்” என்கிற அதிர்ச்சியோடு ஆரம்பித்தவர், ”தொடர்ந்து உபயோகிக்கும்போது, நம் தலைமுடியுடன் மட்டும் அது வினைபுரிவதில்லை. உடலிலும் சென்று ரத்தத்திலும் கலக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கும் செமி டெம்ப்பரரி டை; 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நீடித்திருக்கும் பெர்மனன்ட் டை; ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும் பெர்மனன்ட் டை என எல்லா டைகளுமே ரசாயன தயாரிப்பு என்பதுதான் பிரச்னையே!
டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற பல ரசாயனப் பொருட்கள்… நம் ஹார்மோன்களைச் சரியாக செயல் படவிடாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும். அலர்ஜி, உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைவது, கேன்சர், சிறுநீர்ப்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தற்போது மீசைக்கு மட்டும் டை அடிப்பதும் அதிகமாகவே இருக்கிறது. அப்படி அடிக்கும்போது சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், மீசைக்கு கீழே இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும் என்பதை மறக்கவேண்டாம்” என்று எச்சரிக்கை கொடுத்த டாக்டர், ”செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, நரையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம். எல்லாவற்றையும்விட, நரை முடியை அதன் அழகோடு ஏற்றுக்கொள்வது மிகமிகச் சிறந்தது!” என்று எளிமையான வழியைக் காட்டினார். ஆக, இனி டை அடிக்கும் முன்… யோசியுங்கள்!
