டிஜிட்டல் திண்ணை: சிறைக்குள் சுதாகரன் போடும் புதுத் திட்டம்!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் பரப்பன அக்ரஹாரா சிறையைக் காட்டியது.

“சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் இப்போது நான்கு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் அதிகமாக செய்திகளில் அடிபடுவது சசிகலாதான். அவர் ஜெயலலிதாவின் உடன்பிறவாத தோழியாக இருந்து அவருக்கு அடுத்து அதிமுகவின் அரசியல் வாரிசாக தலைப்பட்டவர்.

சசிகலா எப்போது வெளியே வருவார், அவர் அதிமுகவில் சேருவாரா, அதிமுகவைக் கைப்பற்றுவாரா என்றெல்லாம் கேள்விகளும் விவாதங்களும் எழுந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையே சசிகலாவை டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு உறவினர்கள், வழக்கறிஞர்கள் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள். இவர்கள் அப்படியே சிறையில் இருக்கும் இளவரசி, சுதாகரன் ஆகியோரையும் சந்திப்பார்கள்.

சசிகலாவும், இளவரசியும் பெண்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்களைச் சந்திக்கும் பலர் சுதாகரனைச் சந்திப்பதில்லை. ஏனெனில் சுதாகரனிடம் பேச பலருக்கும் விஷயம் ஏதும் இருப்பதில்லை. சசிகலாவைச் சந்திக்கும் உறவினர்களில் சிலர் மட்டுமே சுதாகரனையும் போனால் போகிறது என்று சந்தித்துவிட்டு வருகிறார்கள். இதனால் வேதனையில் இருக்கிறார் அவர். ‘என்னை மட்டும் தனிமைப்படுத்துறாங்களே…’ என்று புலம்பி வருகிறார்.

அண்மையில் தன்னை சந்திக்க சில வழக்கறிஞர்களை வரச் சொல்லியிருக்கிறார் சுதாகரன். அவர்களிடம் சுதாகரன் பேசும் விஷயங்கள் பெரும் பரபரப்புக்கு வித்திடக் கூடியதாக அமைந்திருக்கின்றன. ஜெவின் சொத்துகள் எங்களுக்கே சேர வேண்டும் என்று அவரது அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் கூறி வருகிறார்கள். இதற்கான சட்ட ரீதியான முயற்சிகளிலும் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். அதேநேரம் சொத்துக் குவிப்பு வழக்குக்கு வெளியே ஜெவுக்கு என்னென்ன சொத்துகள் இருக்கின்றன, அவை யார் பெயரில் இருக்கின்றன என்பதெல்லாம் ஒரு கன்னித்தீவு கதை போல தொடர்கிறது.

இந்த நிலையில் சில வாரங்களாகவே சுதாகரன் தனது வழக்கறிஞர்களிடம், ‘ஜெயலலிதா என்னை வளர்ப்பு மகனாக அறிவித்தார். அப்புறம் தேர்தல் தோல்விக்குப் பிறகு கோபத்துல சில முடிவெடுத்தாரே தவிர, நான் அவரோட வளர்ப்பு மகன் இல்லைன்னு கிடையாது. அதனால ஜெயலலிதாவோட சொத்துகள் என்னைதான் சேரும்னு சட்ட ரீதியாக முயற்சி எடுக்க முடியுமா’ என்று ஆலோசித்திருக்கிறார். வழக்கறிஞர்களும் இதுபற்றி தீவிரமாக விவாதித்து வருகிறார்கள்.

95இல் சுதாகரனை தனது வளர்ப்பு மகனாக அறிவித்து மிக மிக ஆடம்பரமாகத் திருமணம் நடத்தி வைத்தார் ஜெயலலிதா. இதுதான் சொத்துக் குவிப்பு வழக்குக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மீதான ஊழல் முத்திரைக்கும் இந்த ஆடம்பரத் திருமணமே முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. தேர்தல் தோல்விக்குப் பிறகு சுதாகரன் எனது வளர்ப்பு மகன் இல்லை என்று 96இல் ஜெயலலிதாவே அறிவித்தார். ஆனால், விஷயம் என்னவென்றால் ஜெயலலிதா சுதாகரனை வளர்ப்பு மகனாக வரித்துக்கொண்டதும் சட்ட ரீதியாக நடக்கவில்லை, அவர் தன் வளர்ப்பு மகன் இல்லை என்று சொன்னதையும் சட்ட ரீதியாக நடத்தவில்லை. எனவே ஜெ சொத்துகளின் மீது உரிமை கோர சுதாகரன் முயற்சி செய்தால் அதில் சட்டரீதியாக பலன் கிடைக்கிறதோ இல்லையோ, குடும்பத்தினரின் கவனத்துக்கு நாம் வருவோம், அதனால் தனக்கு வேறு வகையில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று கருதுகிறார் சுதாகரன்.

இந்தத் தகவல் எல்லாம் தினகரனை வந்தடைய, ‘இவருக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்’ என்று சொல்லியிருக்கிறார் தினகரன். அதேநேரம் சுதகாரன் இப்படி ஒரு மூவ் எடுத்தால் என்னவாகும் என்று சட்ட ரீதியான ஆலோசனையும் தினகரன் வட்டாரத்தில் நடந்திருக்கிறது என்கிறார்கள். ஏனெனில் சட்ட ரீதியாகப் பின்னாட்களில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ள பிரச்சினைகளை ஏற்கனவே கவனிக்காமல் விட்டதால் பெரும் தொந்தரவாகிவிட்டது. இதனால் சுதாகரன் விவகாரத்தையும் இப்போதே கவனிக்கச் சொல்லியிருக்கிறாராம் தினகரன்” என்ற தகவலை சென்ட் செய்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share