சென்னையை அடுத்த வண்டலூர் அருகே குளவி கொட்டியதில் மூன்றாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகமங்கலம், முத்து மாரியம்மன் கோவில், இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் தஸ்வின். வயது 8. கீரப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று தஸ்வின் வீட்டின் பின்புற பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு பனைமரத்தில் கூடு கட்டி இருந்த ராட்சத குளவிகள் சிறுவன் தஸ்வினை கொட்டியது. இதில் தஸ்வின் வலி தாங்கமுடியாமல் அலறி துடித்தான். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தஸ்வின் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் குளவி கொட்டி சிறுவன் உயிரிழந்த சம்பவம் கீரப்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்த பகுதியை சேர்ந்தவர்கள், “கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பனைமரம் உள்ளிட்ட மரங்களில் ராட்சத குளவிகள் கூடு கட்டி உள்ளன. எனவே இந்தப் பகுதியில் சம்பந்தப்பட்ட தீயணைப்பு துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து பல்வேறு இடங்களில் மரங்களில் கட்டி உள்ள ராட்சத குளவி கூடுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
