விமர்சனம் : 3 பிஹெச்கே!

Published On:

| By uthay Padagalingam

3BHK Tamil Movie Review

வீடு என்பது ஒரு குடும்பத்தின் கனவு! 3BHK Tamil Movie Review

சென்னை முதலான பெருநகரங்கள் மட்டுமல்லாமல் சிற்றூர், குற்றூர்களில் வசிப்பவர்களும் கூட, தங்களுக்கென்று சொந்த வீடு வேண்டும் என்ற கனவைக் கொண்டிருப்பார்கள். வசதி வாய்ப்புகளுக்கு ஏற்பத் தனி வீடு அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு பிளாட் வாங்க முயற்சிப்பார்கள்.

அந்த வீடுகளுக்கான வெளிப்புற, உட்புறத் தோற்றத்தில் மாறுபாடு இருந்தாலும், அவர்களது சமூக, பொருளாதார, அரசியல் நிலைப்பாடுகள் வேறுபட்டிருந்தாலும், உறைவிடம் என்ற கனவின் அடிப்படை ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட கனவுகளை ஏற்கனவே சுமந்தவர்களும் தற்போது சுமந்து கொண்டிருப்பவர்களும் தங்களை அங்கீகரிப்பார்கள் என்ற நோக்கில் களமிறங்கியிருக்கிறது ‘3பிஹெச்கே’ படக்குழு. 3BHK Tamil Movie Review

ADVERTISEMENT

சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், சைத்ரா ஆச்சார், யோகிபாபு, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தினை ‘எட்டு தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். அம்ரித் ராம்நாத் இதற்கு இசையமைத்துள்ளார்.

3பிஹெச்கே’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டது?

ADVERTISEMENT
3BHK Tamil Movie Review

உறைவிடக் கனவு! 3BHK Tamil Movie Review

உணவு, உடை, உறைவிடம் என்ற அத்தியாவசியத் தேவைகளில், நடுத்தரக் குடும்பத்தினரால் முதலிரண்டைப் பூர்த்தி செய்கிற அளவுக்கு மூன்றாவதைத் தொட முடிவதில்லை என்பதே யதார்த்தம். 3BHK Tamil Movie Review

ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிற சாதாரண மனிதனான வாசுதேவனுக்கும் (சரத்குமார்) அப்படியொரு ‘உறைவிடக் கனவு’ இருக்கிறது. மனைவி சாந்தி (தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்), மகள் ஆர்த்தியிடம் (மீத்தா ரகுநாத்) அவர் அதனைத் தெரிவிக்கிறார். அந்த நாள் முதல் அவர்களும் அந்த கனவு நோக்கி ஓடத் தொடங்குகின்றனர்.

ADVERTISEMENT

இதற்கு நடுவே படிப்பு, வேலை, காதல், கல்யாணம், தினசரி வாழ்க்கை சிக்கல்கள் என்று பலவற்றை அந்த குடும்பம் கடக்க வேண்டியிருக்கிறது.

அந்த கனவை அக்குடும்பத்தினரால் எட்ட முடிந்ததா, இல்லையா என்று சொல்கிறது ‘3 பிஹெச்கே’யின் மீதி. 3BHK Tamil Movie Review

மேற்சொன்ன கதையே இப்படம் ‘மெலோட்ராமா’ வகைமையில் அமைந்தது என்பதை உணர்த்திவிடும். கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்ற முன்னபிப்ராயமும் தெளிவாக உருக்கொள்ளும். 3BHK Tamil Movie Review

அனைத்துக்கும் மேலே, மையப்பாத்திரங்களின் வீட்டுக் கனவை நனவாக்க முடியாத அளவுக்கு எப்படிப்பட்ட சிக்கல்கள் உருவாகின்றன என்ற எதிர்பார்ப்பு மேலெழுகிறது. அதற்கு ‘3பிஹெச்கே’ திரைக்கதை எத்தகைய பதிலைத் தருகிறது என்பதே படத்தின் யுஎஸ்பி. 3BHK Tamil Movie Review

ஆனால், அக்கேள்விக்கான பதிலைச் சொன்ன வகையில் எல்லா திரைப்படங்களையும் போலச் சில நிறைகள், குறைகள் உள்ளன.

3BHK Tamil Movie Review

கண்ணீருக்கான அவசியம்! 3BHK Tamil Movie Review

’சூர்யவம்சம்’, ‘மூவேந்தர்’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த சரத்குமார், தேவயானி இருவரும் இப்படத்தில் மீண்டும் ஒன்றிணைந்திருக்கின்றனர்.

பெரும்பாலும் அதிர்ந்து பேசாத ஒரு மனிதராக, இப்படத்தில் வருகிறார் சரத்குமார். அவரது பேச்சுக்கு மறு சொல் உதிராதவராகத் தோன்றியிருக்கிறார் தேவயானி.

தாங்கள் எடுத்துக்கொண்ட பாத்திரங்களுக்குத் திரையில் இருவருமே நியாயம் சேர்த்திருக்கின்றனர். இவர்களது பாத்திர வார்ப்பை உடனடியாக ஏற்க முடிந்தால், நிச்சயமாக ‘3பிஹெச்கே’ மனதைத் தொடும் படைப்பாக இருக்கும்.

ஏனென்றால், நாற்பதுகளிலும் அதற்கு மேலான வயதுகளிலும் இருப்பவர்களில் பலர் இப்பாத்திரங்களோடு தான் தங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள். ‘இவர்களும் நம்மைப் போலத்தான்’ என்று அவர்கள் யோசித்தால் மட்டுமே, அது திறம்பட நிகழும்.

சரத்குமார், தேவயானி இருவருக்குமே நடுத்தர வயதுக்கான ஒப்பனை ‘கொஞ்சம் அதீதம்’ என்றெண்ணுகிற வகையில் உள்ளது. அதனைச் சரி செய்திருக்கலாம்.

சித்தார்த் மற்றும் மீத்தா ரகுநாத்தின் பாத்திரங்கள் கிட்டத்தட்ட 2கே கிட்ஸ்களைப் பிரதிபலிப்பவை. எளிமையான வாழ்வுக்கும் பெற்றோரின் வார்த்தைகளுக்கும் மதிப்பளிப்பவை.

சித்தார்த், மீத்தா இருவருமே அதனைத் திறம்படத் திரையில் வெளிக்காட்டியிருக்கின்றனர். என்ன, பதின்பருவத்து சித்தார்த்தைப் பார்க்கத்தான் கொஞ்சம் மனம் நெருடுகிறது. ஏனென்றால், ‘பாய்ஸ்’ஸில் நடித்தபோதே கல்லூரி கடந்து ஐடி நிறுவனமொன்றில் நல்ல வேலையில் இருக்கிறவராகத்தான் தெரிந்தார்.

‘குட் நைட்’டில் நாம் மீத்தாவைப் பார்த்திருப்பதால், வெவ்வேறு வயதுகளில் அவர் வந்து போவது ஈர்ப்பைத் தருகிறது.

இவர்கள் நால்வரைத் தவிர்த்து, இந்த படத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துபவர் சைத்ரா ஆச்சார். ‘சப்த சாகரச்சே எல்லோ சைடு பி’யில் இவரைக் கண்டிருந்தாலும் கூட, இப்படத்தில் சட்டென்று வசீகரிக்கிறார். தொடர்ந்து நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்தால், கிட்டத்தட்ட நித்யா மேனன் போன்றவர்களுக்குப் போட்டியாக மாறலாம்.

இது போக யோகிபாபு, சுப்பு பஞ்சு என்று சிலர் திரையில் தலைகாட்டுகின்றனர். அவர்களது இருப்பு போரடிக்கவில்லை.

ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் பங்களிப்பு, கதையில் வரும் பிரதான பாத்திரங்களின் உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கு முக்கியத்துவம் தந்திருக்கிறது.

விஎஃப்எக்ஸ் துணையோடு, முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்த சென்னையைக் காட்டியிருந்தால் இன்னும் கொஞ்சம் கொண்டாடியிருக்கலாம். இந்த படத்தில் வீடுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தைக் காட்டுகிற இடங்களில் அதன் பயன்பாடு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கலை இயக்குனர் வினோத் ராஜ்குமாரின் கைவண்ணத்தில் மழைக்கால வெள்ளம் சூழ்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வீடு அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா, படம் முழுக்கக் காட்சிகள் நகர்வில் ஒரு ‘ரிதம்’ தென்பட வேண்டுமென்பதில் அக்கறை காட்டியிருக்கிறார். கதாபாத்திரங்களின் வாழ்க்கையோட்டம் ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், அந்த ரிதம் மாறாமலிருப்பது அழகு.

மேற்சொன்ன நுட்பங்கள் தவிர்த்து, உணர்வுமயமான காட்சிகளில் நம் கண்களில் நீரைச் சுரக்க வைக்கிறது அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை.

முக்கியமாக தோல்விகளால் அடைகிற வலி, அவற்றில் இருந்து மீண்டெழுகிற துடிப்பு, அடுத்தடுத்து காணும் அந்த அனுபவங்களால் உருவாகிற விரக்தி, அவற்றின் முடிவில் ஒரு பெருவெற்றி என்று ‘அரூபமாக’ இக்கதாபாத்திரங்களின் வாழ்வு நம் மனதுக்குள் நிகழ்த்துகிற உரையாடலை ‘ஒலி’ வடிவில் அவர் மொழிபெயர்த்திருக்கும் விதம் அருமை.

இது போன்ற ஒரு கதையைக் காட்சிகளாக மாற்றும்போது, அது பல திசைகளில் உருண்டோடும். இதர கலைஞர்களின் ஒருங்கிணைப்போடு, தான் விரும்பிய திசைக்கு அதனை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். அவரது முயற்சிக்கு வெற்றி கிட்டியிருக்கிறது.

3BHK Tamil Movie Review

பொதுவெளியில் உரையாற்றுகையில் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிப்பவர் ஸ்ரீகணேஷ். இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களும் கூட, திரையில் அவரைப் போலவே பேசுகின்றன. அது இப்படத்தின் முக்கியமான பலவீனம்.

இக்கதையில் வரும் தந்தையும் தாயும் ’தைரியமாக’ முடிவெடுக்கத் தயங்குபவர்கள் என்று நமக்கு உணர்த்துகிறார் இயக்குனர். ஆனால், அவர்களது மகனோ, மகளோ அப்படியில்லை என்கிறார். அந்த நிலையை எட்ட, அவர்கள் இருவரும் சில மோசமான சூழல்களைக் கடக்க வேண்டியிருப்பதாகக் காட்டுகிறார்.

அதேநேரத்தில், அந்த விஷயத்தைத் திரைக்கதையில் அடிக்கோடிட்டுக் காட்டத் தவறியிருக்கிறார்.

இது போன்ற சில அம்சங்கள் மொத்தக் கதையின் கனத்தையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன. அவற்றைச் சரி செய்திருந்தால், இப்படம் தருகிற அனுபவம் வேறுவிதமாக இருந்திருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், ரசிகர்களை ஒரு காட்சியில் அழ வைத்துவிட்டால் பிறகு அந்த கண்ணீர் வற்றாத அளவுக்குத் திரை வழியே அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட வேண்டும். அதனைச் செய்யத் தவறியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

அதனால், உணர்வுமயமான காட்சிகளில் அழுகிற ரசிகர்கள் கூட, இடைப்பட்ட காட்சிகளில் ‘உம்’மென்று இருக்கின்றனர். ஏனென்றால், இடையில் எங்குமே சிரிப்புக்கான, இதர உணர்வுகளுக்கான இடமே தரப்படவில்லை. 3BHK Tamil Movie Review

கதையின் மைய இழையில் இருந்து விலகிவிடக் கூடாது என்பதில் இயக்குனர் கவனம் செலுத்தியிருப்பது நல்ல விஷயம். என்றாலும், அக்காட்சிகள் வெறுமையை அதிகப்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது.  

இது போன்ற குறைகளே, இக்கதை உருவாக்கியிருக்க வேண்டிய ‘விஸ்வரூப தரிசனத்திற்கு’த் தடை இட்டிருக்கின்றன. அவற்றைப் பொருட்படுத்தவில்லை என்றால், மனித உணர்வுகளோடு நெருக்கம் பாராட்டுகிற ஒரு கதையைப் பார்த்த திருப்தி கிடைக்கும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share