சென்னையில் 39 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

Published On:

| By Pandeeswari Gurusamy

39 IndiGo flights cancelled in Chennai

சென்னையில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 39 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகளால் விமானங்கள் ரத்து என்பது தொடர்கதையாக மாறி வருகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,232 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 755 விமானங்களும், வான் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக 92 விமானங்களும், விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் 258 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தி வரும் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் இண்டிகோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை சுமார் 12 மணி நேரத்தில் மட்டும் 39 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் இருந்து புறப்படும் 19 விமானங்களும் வருகை விமானங்கள் 20ம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டெல்லி, மும்பை, அகமதாபாத்,ஜெய்பூர், ஐதராபாத், கொச்சி, பெங்களூரு, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 19 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக விமானங்கள் ரத்தானது குறித்து பயணிகளிடம் இண்டிகோ நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share