இந்தியாவில் மூன்றில் ஒருவர் அல்லது 38 சதவீத பேருக்கு கொழுப்பு கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.
கல்லீரல் பித்தத்தை சுரக்க உதவுகிறது. இது கொழுப்புகளை ஜீரணிக்க உதவுகிறது. மனித உடல் அதிகப்படியான கொழுப்பை உற்பத்தி செய்யும்போதோ அல்லது போதுமான அளவு கொழுப்பை வளர்ச்சிதை மாற்றம் செய்யாத போதோ குழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது.
இந்தியாவில் கல்லீரல் நோய்க்கு மது அருந்துவது ஒர் பொதுவான காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகளவில் மது அருந்துவது ‘ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ்’ க்கு வழிவகுக்கும்.
எய்ம்ஸ் ஆய்வறிக்கை
இது கல்லீரல் புற்றுநோய் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். மறுபுறம் ஹைபடைடிஸ்க்கு சரியான மருந்து இல்லாததால், கல்லீரல் செயலிழப்பால் 67 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுகிறது.
மது அல்லாத கொழுப்பு கல்லீரல் பாதிப்பு தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வறிக்கை ஜர்னல் ஆப் கிளினிக்கல் அண்ட் எக்ப்ரீமெண்டல் ஹெபடாலஜி இதழில் வெளியாகி உள்ளது.

அதில், “மது அல்லாத கொழுப்பு கல்லீரல் பாதிப்பு, பெரியவர்களுக்கு மட்டுமின்றி, 35 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இருக்கிறது.
கொழுப்பு கல்லீரல் பாதிப்பை பொறுத்தவரை ஆரம்ப நிலையில், பெரிய அறிகுறிகள் இருக்காது. ஆனால் பாதிப்பு அதிகரிக்கும் போது சிலருக்கு சிறுநீரக பிரச்னையை ஏற்படுத்தும்.
ஸ்டீடோஹைபடைடிஸ் எனப்படும் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் பாதிப்புக்கு, துரித உணவுகள் எடுத்து கொள்வது, பழங்கள், காய்கறிகள் உண்ணாமல் தவிர்ப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முக்கிய காரணமாகும்.
இது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற வளர்சிதை மாற்ற நோய்களின் இணை நோயாக கருதப்படுகிறது.
கொழுப்பு கல்லீரலுக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருந்து சிகிச்சை இல்லை என்றாலும், இந்த நிலை மீளக்கூடியதுதான்.
இந்த நோய் பாதிப்பை வெல்வதற்கான ஒரே வழி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது மட்டுமே.
உடல் பருமனை குறைத்து, சரிவிகித உணவு எடுத்து கொள்வது, சர்க்கரை உணவுகளை உட்கொள்வதை குறைத்து கொள்வதுடன், உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்” என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூன்றில் ஒருவருக்கு கொழுப்பு கல்லீரல் நோய்
கொழுப்பு கல்லீரல் நோயை கட்டுப்படுத்த, குணப்படுத்த இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து புதிய அமைப்பை தொடங்கி உள்ளன. இதில் இந்தியாவை சேர்ந்த 17 மருத்துவர்களும், பிரான்ஸை சேர்ந்த 11 மருத்துவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய-பிரெஞ்சு கல்லீரல் வளர்சிதை மாற்ற நோய்களின் சிகிச்சைக்கான கூட்டமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ள புதிய அமைப்பை மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஜூலை 5ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

அப்போது, “இந்திய துணை கண்டம் மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் மக்களின் வாழ்க்கை நடைமுறைகள், உணவு பழக்க வழக்கங்கள் முழுமையாக மாறி உள்ளன. தவறான வாழ்வியல் நடைமுறை, உணவு வகைகளால் நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக கொழுப்பு கல்லீரல் நோயும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 3 பேரில் ஒருவர் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த நோய் ஏற்படுகிறது. ஆனால் இந்தியாவில் நிலைமை வேறுவிதமாக இருக்கிறது.
கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் 20 சதவீதம் பேர் உடல் பருமன் இல்லாதவர்கள் ஆவர். இந்தியா, பிரான்ஸில் மதுபானம் குடிப்பவர்கள் கல்லீரல் கொழுப்பு நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மதுபானம் அருந்தாதவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கல்லீரல் கொழுப்பு நோயை குறைந்த கட்டணத்தில் கண்டறிவதற்கான பரிசோதனைகள் அவசியமாகிறது.
ஆரம்ப நிலையிலேயே இந்த நோயை கண்டுபிடித்தால் நோயாளிகளுக்கு எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். நோய் முற்றிய நிலையில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.
நோய்களை குணப்படுத்தும் மருத்துவம் மட்டுமன்றி நோய் தடுப்பு மருத்துவத்திலும் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது. எங்களோடு பிரான்ஸும் கைகோத்திருப்பதால் கல்லீரல் கொழுப்பு நோயை குணப்படுத்தும் சிகிச்சையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்” என ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IND vs ZIM: முதல் வெற்றி… இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜிம்பாப்வே!
’குறுகிய இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை புதைக்க முடியாது’ : ஹத்ராஸ் சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி!
