அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பான ‘சோக சம்பவத்திற்கு’ ரஷ்ய அதிபர் புதின் இன்று (டிசம்பர் 28) மன்னிப்பு கேட்டுள்ளார்.
அஜா்பைஜான் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான எம்ப்ரேயர் 190 என்ற விமானம் ஒன்று, 67 பேருடன் தலைநகா் பாக்குவில் இருந்து ரஷ்யாவுக்கு கடந்த 25ஆம் தேதி புறப்பட்டது.
ஆனால், தரையிறங்குவதற்கு முன்னதாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கஜகஸ்தானில் உள்ள அக்தெள நகரில் தரையில் மோதி வெடித்தது. இதில் 38 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
உக்ரைன் அமெரிக்க குற்றச்சாட்டு!
இதற்கான காரணம் குறித்து விசாரித்து வந்த நிலையில், வான் பாதுகாப்பு சிஸ்டம் அல்லது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ரஷ்யா மீது உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின.
அதற்கு மறுப்பு தெரிவித்து ரஷ்ய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், “கஜகஸ்தானில் அஜா்பைஜான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த விசாரணை நிறைவடைவதற்கு முன்னரே அது குறித்து கருத்து கூறுவது தவறான செயலாகும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அஜர்பைஜான் விமான விபத்து குறித்து, ரஷ்ய வான்வெளியில் நடந்த சோகமான சம்பவத்திற்கு அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவிடம் ரஷ்ய அதிபர் புதின் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய வான்வெளியில் நடந்த சோகமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த மற்றும் உண்மையான இரங்கலைத் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், “விமானம் க்ரோஸ்னியில் தரையிறங்க முயற்சித்தபோது தான், உக்ரைனின் ட்ரோன்கள் க்ரோஸ்னி, மொஸ்டோக், விளாடிகாவ்காஸ் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தின. அதனை முறியடிக்கும் முயற்சியில் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு சிஸ்டம் பதிலடி தாக்குதல் நடத்தியது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விமானம் மீது தாக்குதலை நடத்தியது நாங்கள்தான் என ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் புதின் மன்னிப்பு கேட்டதன் மூலம் ரஷ்யா தவறுதலாக இந்த விமானத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
2025 பொங்கல் பரிசு தொகுப்பு… மீண்டும் பணப்பரிசு மிஸ்ஸிங் – பொதுமக்கள் ஏமாற்றம்!