10ஆம் வகுப்புத் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தென்காசியைச் சேர்ந்த கனகராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவில், “எனது மகன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளார். தேர்வு எழுதவுள்ள மாணவர்களில் 6.3 லட்சம் பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஊரடங்கு காரணமாக அனைவரும் பொருளாதார, உளவியல் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் மாணவர்கள் சரியான முறையில் தேர்வு எழுதுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போதைய சூழலையும் மாணவர்களின் உளவியல் சூழலையும் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை ஊரடங்கு முழுவதுமாக திரும்பப்பெறப்படும் வரை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டும்தான் கொரோனா பாதிப்பு அதிகமுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தான் அரசு தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும்” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்வை தள்ளிப்போடுவது பள்ளி மாணவர்களுக்கான மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஆகவே அரசின் இந்த முடிவில் தலையிட இயலாது என்று குறிப்பிட்டனர்.
மேலும், “10ஆம் வகுப்பு தேர்வு எழுத மாணவ-மாணவிகள் தயார் நிலையில் இருக்கிறார்களா என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மனநல சிக்கல்கள் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றார்.
**எழில்**