சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்யும் நபருடன் தொடர்பில் இருந்ததாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனையொட்டி தமிழக முழுவதும் உள்ள காவல் நிலையத்திற்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. 3 police suspended at thiruvarur
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த ஒருவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நன்னிலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சரவணன், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் மற்றும் நன்னிலம் மதுவிலக்கு காவல்துறையில் பணியாற்றும் செல்வேந்திரன் ஆகியோர் செல்போனில் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.
இந்த 3 காவலர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 3 பேரும், அவரிடம் மாமூல் பெற்று வந்தது உறுதியானது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட், மூன்று காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, திருவாரூர் மாவட்டம் போல், தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களிலும், சமூக விரோதிகளுடன் போலீசார் தொடர்பில் உள்ளார்களா என்பதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
