குவாரியில் வெடி விபத்து… 3 பேர் உடல் சிதறி பலி : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Published On:

| By christopher

3 people spot dead at Explosion in the virudhunagar quarry

விருதுநகர் கல்குவாரியில் இன்று (மே 1) ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள கடம்பன்குளத்தில் ஆவியூரைச் சேர்ந்த சேது மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது.

மே தினமான இன்று காலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உடல் சிதறி பலி!

அப்போது குவாரிக்கு அருகில் உள்ள வெடிமருந்து குடோனில் வெடிபொருட்களை வேனில் இருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வெடிபொருட்களில் உராய்வு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இதில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் முழுவதுமாக தரைமட்டமானது. மேலும் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (47), கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த துரை (25), குருசாமி (60) உட்பட நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் ஒரு கி,மீ வரை உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடக்கின்றன.

வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆட்சியர் நேரில் ஆய்வு!

இதுகுறித்து தகவலறிந்த ஆவியூர் போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம்  அளித்த பேட்டியில், “இதுவரை இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் எவ்வளவு வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது, எவ்வாறு வெடி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் குவாரி முறையான அனுமதி பெற்றுள்ள நிலையில், அங்கு என்ன நடைமுறைகள் மீறப்பட்டது என்று விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் போராட்டம் – உரிமையாளர் கைது!

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடம்பன்குளம், ஆவியூர், உப்பிலிக்குண்டு கிராம மக்கள் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உரிமையாளர் சேதுராமனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணவில்லை!

டிவி நிகழ்ச்சியில் வடிவேலு… ஒரு எபிசோடுக்கு கோடியில் சம்பளமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share