பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்திய அணி இன்று (ஆகஸ்ட் 8) கலந்துகொள்ளும் பதக்கப் போட்டியின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் சர்வதேச அளவில் புயலை வீசியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு விவாதங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன.
அதேவேளையில் இந்தியாவின் மற்ற விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வெல்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று மதியம் நடைபெற்ற ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமன் செஹ்ராவத், அல்பேனியாவின் ஜெலிம்கான் அபகாரோவுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் அமன், எதிராளியான ஜெலிம்கானுக்கு ஒரு வாய்ப்புக்கூட தராமல் 12-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அவர் இன்று இரவு 9.45 மணிக்கு நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஜப்பானின் ஹிகுச்சியை எதிர்கொள்ள உள்ளார்.
அதேவேளையில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 மல்யுத்த போட்டியில் அமெரிக்காவின் ஹெலன் லூயிஸ் மரூலிஸியை எதிர்கொண்ட அன்ஷு தோல்வியை தழுவினார்.
தொடர்ந்து இன்று மாலை 5:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை சந்தித்து விளையாடி வருகிறது.
இரவு 11.55 மணிக்கு நடைபெறும் ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்துகொள்கிறார்.
இதன்மூலம் இன்று ஒரே நாளில் இந்திய அணி 3 பதக்கங்களை குறிவைத்து விளையாடி வருகிறது. மூன்றிலும் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வினேஷ் போகத் தகுதிநீக்கம் : எதிர்க்கட்சிகள் அமளி… அவை தலைவர் வெளிநடப்பு!
