கோவை நவக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூன்று காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நவக்கரை, வாளையார், மதுக்கரை ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், இந்த பகுதிகளில் இயக்கப்படுகின்ற ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட வேண்டும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வழித்தடத்தில் இரண்டு தண்டவாளங்கள் செல்கின்றன. ஒரு தண்டவாளம் கோவையிலிருந்து பாலக்காட்டுக்கு செல்வதற்கும், மற்றொரு தண்டவாளம் பாலக்காட்டில் இருந்து கோவைக்கு வருவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பாலக்காட்டில் இருந்து கோவைக்கு வரும் வழித்தடத்தில் குறிப்பிட்ட தூரம் வனப்பகுதிக்குள் ரயில் தண்டவாளம் வருகிறது. இதில் அவ்வப்போது விபத்துக்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்றிரவு(நவம்பர் 26) 9 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று, தனது இரண்டு குட்டிகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது மங்களூரிலிருந்து கேரளாவுக்குச் சென்று அங்கிருந்து கோவை வழியாக சென்னை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்தன.
இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில்,சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மருத்துவ குழுவினர் தண்டவாளத்தில் இருந்து யானைகளை அப்புறப்படுத்தினர்.
ரயில் வேகமாக சென்றதே யானைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகின்ற நிலையில், அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
**-வினிதா**
