சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் இன்று (பிப்ரவரி 2) பதவியேற்ற நிலையில், வரும் 5ஆம் தேதி ஜேஎம்எம் ஆளும் கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக அதே கட்சியை சேர்ந்த 67 வயதான சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து 48 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
விமானங்கள் ரத்து!
இதனையடுத்து அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது கூட்டணி ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார்.
எனினும் சுமார் 20 மணி நேரமாக ஆளுநர் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையே கூட்டணி எம்.எல்.ஏக்களை பாஜகவின் விலைக்கு வாங்கும் முயற்சியில் இருந்த காப்பாற்ற ராஞ்சியில் காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவிற்கு அனைவரையும் அழைத்து செல்ல ஜே.எம்.எம். தலைவர்கள் திட்டமிட்டனர்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் அருகில் இருந்த அரசு ஓய்வு இல்லத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சம்பாய் சோரன் பதவியேற்றார்!
இதனையடுத்து நேற்று இரவு 10 மணியளவில் மீண்டும் ஆளுநரை சந்தித்து மாநிலத்தில் நிலவும் குழப்பமான நிலைமையை சுட்டிக்காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார் சம்பாய் சோரன்.
அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், சில மணி நேரங்களுக்குப் பிறகு சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து இன்று மதியம் 12 மணியளவில் ராஜ்பவனில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஜார்க்கண்ட் புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்று கொண்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு!
தொடர்ந்து ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆலம்கிர், “மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த 4 ஆண்டுகளில் தொடங்கிய பணிகளை முன்னெடுத்துச் செல்வோம். பழங்குடியினர் மற்றும் ஜார்க்கண்ட் மக்களின் அனைத்துத் துறை மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ள திட்டங்களையும் விரைவுபடுத்த உழைப்போம்.
எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்தின் அடிப்படையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலையற்ற சூழல் உருவாக்கப்பட்டதை எங்கள் கூட்டணியின் ஒற்றுமை முறியடித்துள்ளது. பழங்குடியின முதல்வர் ஹேமந்த்க்கு எதிராக சதி செய்து பதவி பறிக்கப்பட்டதை நாடு முழுவதும் கண்டனர். இந்த சதிகளை அம்பலப்படுத்தி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்போம்.” என்று சம்பாய் சோரன் உறுதி அளித்துள்ளார்.
ஜே.எம்.எம் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதா?
மொத்தம் 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்டில் ஆளும் ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி-என்சிபி கட்சிகளுக்கு 48 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த 47 பேரில் 29 பேர் ஜேஎம்எம், 17 பேர் காங்கிரஸ், என்.சி.பி மற்றும் ஆர்ஜேடி கட்சியில் தலா ஒருவர் உள்ளனர்.
அதேவேளையில் பாஜகவுக்கு 25 பேர், ஜார்க்கண்ட் விகாசு மோர்ச்சா மற்றும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துக்கு தலா 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 3 நாட்கள் உள்ள நிலையில், ஜே.எம்.எம் ஆளும் கூட்டணியில் இருந்து 6 பேர் கட்சி மாறினால், அது மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சி ஆளும் மேலும் ஒரு மாநிலத்தை பாஜக கைப்பற்றுவதற்கு வழிவகுக்கும்.
தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்களை பாதுகாக்க ஜே.எம்.எம் தலைவர்களும், அவர்களை பிரிக்க பாஜவினரும் தீவிரமாக செயல்பட்டு வருவதால் ஜார்க்கண்டில் இன்னும் பதற்றமான அரசியல் சூழ்நிலையே நிலவுகிறது.
மனு தள்ளுபடி!
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று காலை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் ராஞ்சி உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ஜேஎம்எம் தரப்புக்கு அறிவுறுத்தப்பபட்டது.
இதனையடுத்து ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஹேமந்த் சோரனை மேலும் 5 நாட்கள் ED காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’விஜய் கட்சி பெயரில் ’திராவிடம்’ இல்லாததே மகிழ்ச்சி தான்’ : சீமான்
மணல் குவாரிகளில் ரெய்டு : ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய ED!