நாகர்கோவில்-மங்களூரு; திருவனந்தபுரம்-தாம்பரம் அமிர்த பாரத விரைவு ரயில் சேவைகளை (Amrit Bharat Express) பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜனவரி 23-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10:45 மணியளவில், திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார்.
மேலும் 3 அமிர்த பாரத விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் என நான்கு புதிய ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
- நாகர்கோவில்-மங்களூரு அமிர்த பாரத விரைவு ரயில்
- திருவனந்தபுரம்-தாம்பரம் அமிர்த பாரத விரைவு ரயில்
- திருவனந்தபுரம்-சார்லபள்ளி அமிர்த பாரத விரைவு ரயில்
திருச்சூர்- குருவாயூர் இடையே பயணிகள் ரயில் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
புதிய அமிர்த பாரத் ரயில் சேவைகள் மூலம் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா இடையேயான நீண்ட தூர மற்றும் பிராந்திய இணைப்பு கணிசமாக மேம்படும். பயணிகளுக்கு பயணத்தை மிகவும் குறைந்த செலவில், பாதுகாப்பானதாக, நேரத்திற்குட்பட்டதாக மாற்றும். மேம்படுத்தப்பட்ட இந்த இணைப்பு, பிராந்தியம் முழுவதும் சுற்றுலா, வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கு வலுவான உத்வேகத்தை அளிக்கும்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிநவீன கதிரியக்க அறுவை சிகிச்சை மையத்திற்குப் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுவார். இந்த வசதி சிக்கலான மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகவும் துல்லியமான சிகிச்சையை வழங்கும்.
