எல்லை மீறி பாகிஸ்தான் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல் காரணமாக 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில் முத்தரப்பு தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானுடன் மோதலில் இறங்கியுள்ளது பாகிஸ்தான் ராணுவம். இந்த நிலையில் நேற்று மாலை நடந்த திடீர் வான்வழித் தாக்குதலில் பாக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என்ற 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து ஆப்கன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹாக் ஃபரூக்கி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், இந்தச் செயல் கொடூரமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர், “பொதுமக்கள் மற்றும் நமது உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களை படுகொலை செய்வது ஒரு கொடூரமான, மன்னிக்க முடியாத குற்றம்,” எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்று பலரும் கருத்து தெரிவித்து ஆக்ரோசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து வரும் நவம்பர் 17 முதல் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நடைபெற இருந்த முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் ஆட்சியால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் இன்று மாலை குறிவைக்கப்பட்ட பாக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் துயர தியாகத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறது.
இது ஆப்கானிஸ்தானின் விளையாட்டு சமூகம், அதன் விளையாட்டு வீரர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்திற்கு பெரும் இழப்பாக ஏசிபி கருதுகிறது. தியாகி தியாகிகளின் குடும்பத்தினருக்கும், பாக்டிகா மாகாண மக்களுக்கும் ஏசிபி தனது ஆழ்ந்த இரங்கலையும் ஒற்றுமையையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நவம்பர் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்பதிலிருந்து விலகுகிறோம்” என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக அந்நாட்டு வீரர்களுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கைக்குலுக்க மறுத்தனர்.
இந்த நிலையில் தற்போது தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக, ஐசிசி நிகழ்வுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கைகுலுக்குவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
