மக்னா என்றால் என்ன?

Published On:

| By Balaji

மதுக்கரையில் பிடிபட்டு, மயக்க ஊசி போட்டு காயமடைந்து உயிரிழந்த மகாராஜின் துயரம் முடிவதற்குள் இன்னொரு குட்டி யானை மக்னா குன்னூர் அருகே இனம் காணப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்னா என்ற யானை சுற்றித் திரிகிறது. இதுபற்றி அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் இந்த மக்னாவையும் கும்கி யானைமூலம் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

பந்தலூர்-அய்யங்கொல்லி பிரதான சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தினருகே சாதாரணமாக நடந்துசென்றது. யானையைக் கண்டதும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்த, கேரளாவில் இருந்து பந்தலூர், கூடலூர் செல்லும் பேருந்துகள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. என்ன நினைத்ததோ மக்னா, மீண்டும் போரடித்து காட்டுக்குள் சென்றுவிட்டது. ஆனால், அச்சமடைந்துள்ள பொதுமக்கள் கும்கியைக் கொண்டு வந்து மக்னாவையும் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

சரி மக்னா என்றால் என்ன?

ADVERTISEMENT

ஒரு வளர்ச்சியடைந்த யானையின் உச்சந்தலை, வால் தவிர்த்து வேறு எங்கும் முடிகள் இருக்காது. ஒரு யானையின் வயதை இந்த முடியைக் கொண்டும் அளவிடமுடியும். ஆனால், நாம் அதற்கு ஒரு தேர்ந்த யானை ஆர்வலராக இருக்க வேண்டும்.

முடியின் வளர்ச்சி போன்று, ஒரு யானையின் இன்னொரு அடிப்படை தந்தம். ஒரு யானையின் தந்தம் என்பது அதன் முன்வெட்டுப் பற்களே. யானைத் தந்தங்கள் மூன்றில் இரண்டு பங்கு வெளியே தெரிகின்றன. ஒருபங்கு மண்டையோட்டின் உள்ளே பற்குழியினுள் அழுந்தியிருக்கும், ஆசிய யானைகளில் மரபணுக் குறைபாடு காரணமாக தந்தம் இல்லாமல் வளரும் ஆண் யானைகளை ‘மக்னா’ அல்லது ‘மோழை’ என்கிறார்கள்.

ADVERTISEMENT

ஆசிய யானைகளில் இந்திய யானைக்கு மட்டுமே தந்தம் நீண்டுவளரும். பெண் யானைக்குக்கூட உதட்டிற்குக் கீழே உள் அடங்கிய சிறு தந்தம் இருக்கும். இலங்கையில் காணப்படும் பெரும்பாலான ஆண் யானைகளுக்கு தந்தங்கள் இல்லை என்பதால் மக்னா நிரம்பிய காடுகள் எனலாம் இலங்கைக் காடுகளை.

கொம்பு என தவறாகக் கருதப்படும் இந்த தந்தம், ஒரு யானையை எதிரிகளிடம் இருந்து காக்கவும், மற்ற ஆண் யானைகளுடன் சண்டையிடவும் பயன்படுகிறது என்பது தெரிந்த செய்தி. ஆனால், பெண் யானையை தன் வசம் ஈர்க்க கவர்ச்சி உபகரணமாக தந்தம் ஆண் யானைக்குப் பயன்படுகிறது என்பது புது செய்தி.

ஆக மொத்தம், குன்னூரில் சுற்றும் தந்தமில்லா ஆண் யானை மக்னாவை பத்திரமாக மீட்டு, மீண்டும் காட்டில் அதன் வீட்டில் விடவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

உதவி –அழியும் பேருயிர் யானைகள் – முகமது அலி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share