கல்வி கற்க வயது பேதங்கள் எதுவும் இல்லை. ஒரு மனிதன் மரணிக்கும்வரை இந்த சமூகத்திடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டே இருக்கிறான். பள்ளிக் கல்விக்குக்கூட அப்படித்தான் என்பதை சரிதா ஜகடே என்ற 43 வயதுப் பெண் நிரூபித்திருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சரிதா ஜகடேவுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவர், தனது மகளோடு தானும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி வென்றிருக்கிறார்.
“நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என் அப்பா இறந்தார். என்னோடு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருந்ததால், மேற்கொண்டு படிக்க முடியவில்லை. அதனால் அனைவரும் சேர்ந்து வேலைக்குச் சென்று குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வந்தோம். திருமணத்துக்குப் பிறகு எனது கணவர் விஷ்வநாத் கொடுத்த ஊக்கத்தால் இப்போது பொதுத்தேர்வு எழுதி பத்தாம் வகுப்பு வென்றிருக்கிறேன்” என்கிறார்.
சரிதாவின் மூத்த மகள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதி 48 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்துள்ளார். இரண்டாவது மகள், அதாவது இவருடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய சுருதிகா 69 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றுள்ளார். மகள் 69% மதிப்பெண்ணைப் பெற உடன் எழுதிய தாயார் சரிதாவோ 44% மதிப்பெண் பெற்று வென்றுள்ளார். கல்வி என்றாலே அது திருமணத்துக்குப்பிறகு பெண்களுக்கு சாத்தியமில்லை என்று நினைக்கும் பெண்களுக்கு சரிதா ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.