�
விவசாயிகளுக்கு உதவும் வகையில் `உழவன்’ என்னும் மொபைல் செயலியைத் தமிழக அரசு இன்று (ஏப்ரல் 7) அறிமுகம் செய்துள்ளது.
2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் போது தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு உதவும் `உழவன்’ என்ற மொபைல் செயலி தொடங்கப்படும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். இதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தச் செயலியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மகசூல் அதிகரிக்கும் மலிவு விலையிலான அம்மா உரத்தை விவசாயிகளுக்கு வழங்கினார். பின்னர் விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வாடகை முறையில் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த ‘உழவன்’ மொபைல் செயலி மூலம் வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர்காப்பீடு விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக அறிவிக்கப்படும். மேலும் டிராக்டர், பவர் டில்லர், பசுமைக்குடில் போன்றவற்றுக்கு மானியம் பெற முன்பதிவு செய்து கொள்ள முடியும். அதேபோல், தட்பவெட்ப நிலை குறித்த தகவல்களும் இந்தச் செயலியில் அறிவிக்கப்படும். தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்தச் செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.�,