இந்தியா தோல்வி ஏன்?

Published On:

| By Balaji

சின்னஞ்சிறிய ஆணி பெரிய பயணத்தைத் தடை செய்துவிடும். அதுபோல இரண்டு நோ பால்கள் இந்திய வெற்றிக்குத் தடைபோட்டுவிட்டன. வான்கடே ஸ்டேடியத்தில் கதகளி ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திர பேட்ஸ்மேன் கெயில் 5 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ‘அப்பாடா’ என, மொத்த இந்திய ரசிகர்களும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். காரணம், அதே மைதானத்தில்தான் இதற்கு முந்தைய ஆட்டத்தில் க்ரிஸ் கெயில்ஸ் செஞ்சுரி அடித்திருந்தார். ஆனால், அந்த நிம்மதிப் பெருமூச்சு அதிகநேரம் நீடிக்கவில்லை. அடுத்து ஆடவந்த சிமென்ஸும், ரஸ்ஸலும் பேயாட்டம் ஆடி இந்தியா குவித்திருந்த 192 ரன்களை சூறையாடினர். ஒட்டுமொத்த வான்கடே ஸ்டேடியமும் வாயடைத்து நின்றிருந்தது.

சிம்மன்ஸ் 18 ரன்கள் அடித்திருந்தபோது, அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். ஆனால், அந்த பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. சிம்மன்ஸ் அடித்த பந்து கேட்ச்சாக, என்றுமில்லாத அதிசயமாக பும்ரா அதைப் பிடித்திருந்தார், இருந்தாலும் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டபின் கிடைத்த ஃபிரீ ஹிட் பந்தில் சிக்ஸ் அடித்தார். ஏற்கனவே, ரன்களை புயல் வேகத்தில் சேஸ் செய்துகொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு இது, மேலும் வலுக்கூட்டியது. அடுத்து 50 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த சிம்மன்ஸ், லாங்-ஆப்பில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். அந்தப் பந்தும் நோ பாலாக அறிவிக்கப்பட்டது. பந்து வீசியது பாண்டியா. இது, இரண்டு நோ பால்களும் ஆட்டத்தின் போக்கை மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சாதகமாக மாற்றிவிட்டது.

உலகின் நம்பர் 1 ஸ்பின் பௌலரான அஸ்வினுக்கு இரண்டே ஓவர்கள்தான் வழங்கியது தோனி செய்த தவறு” என, முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். “மேற்கிந்தியத் தீவுகள் ஒரு நபரை நம்பியுள்ள அணி அல்ல. நாம் விராத் கோலிக்கும் கிறிஸ் கெயில்ஸ்க்கு இடையேதான் போட்டி என்று பேசிக்கொண்டிருந்தோம். அதைப்போல விராத் 89 ரன்கள் குவித்தார். கிறிஸ் கெயில்ஸ் சொற்ப ரன்களில் அவுட்டாகிப்போனார். ஆனால் நடந்தது என்ன? கிரிக்கெட், ஒரு குழு விளையாட்டு என நிரூபித்தனர். அது எப்போதும் அப்படித்தான் இருந்தது. நாம் ஒன்றிரண்டு வீரர்களை மட்டும் சில ஆண்டுகளாக கொண்டாடத் தொடங்கியிருக்கிறோம். ஆனால், கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு, தனிநபர் விளையாட்டு அல்ல என, மீண்டும் மீண்டும் நம்மை வென்று உணர்த்தியுள்ளனர் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர்” என, முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மேற்கிந்திய அணி, உண்மையில் பவுலிங்கிலும் ஒன்றும் சோடை போகவில்லை. இந்திய அணி அடித்திருந்த 192 என்பது பெரிய ஸ்கோர் என்று பேசப்பட்டாலும் அதை, நான்கும் ஆறுமாக விளாசி எடுக்கப்படவில்லை. 2 ரன்களும் முன்று ரன்களுமாக ஓடியே சேர்க்கப்பட்டது. காரணம், எந்தத் திசையை அடிக்கலாம் எனப் பார்த்தாலும் அங்கு பீல்டர்களை நிறுத்தியிருந்தனர். கோலியும் தோனியும் ரன்களை ஓடியே எடுப்பதைப் பார்த்து, ஒருவர் இப்படி ட்விட் போட்டார்: “ஊரைவிட்டு ஓடி போறவன் எல்லாம் தோனி கையை புடிச்சுக்கிட்டா போதும். விடியுறதுக்குள்ள காஷ்மீர்ல கொண்டு போய் விட்டுருவான்.” . மேட்ச் முடிந்தபின் இந்திய கேப்டன் தோனி சொன்னார் “டி20 மேட்ச்களில் 192 அல்ல 250 எடுத்தாலும் அது பாதுகாப்பான ஸ்கோர் அல்ல” என்று. அது உண்மைதான் என்றாலும் இந்திய அணி 26 பந்துகளை மட்டுமே அடிக்கவில்லை, ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 47 பந்துகளை தொடவில்லை. ஆனால் அவர்கள் அடித்தது 20 ஃபோர்களும், 11 சிக்ஸர்களும், நாம் அடித்தது வெறும் 17 பவுண்ட்ரிகளும் 6 சிக்ஸர்களும்தான்.

இன்னும், இரண்டு நாட்களுக்கு அந்த இரண்டு நோ பால்களும் நினைவில் இருக்கும், அதன்பின்னர் அடுத்த வாரம் தொடங்க இருக்கும் ஐபிஎல் இதே சிம்மன்ஸுக்கும், கிறிஸ் கெய்ல்ஸ்க்கும், ரஸ்ஸலுக்கும் இந்திய ரசிகர்கள் விசிலடிக்கத்தான் போகிறார்கள். அவர்களும் இதே வாண வேடிக்கை சிக்ஸர்களை இந்திய வானத்தில் அடிக்கத்தான் போகிறார்கள்!,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share