அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்போ, மின்சார இணைப்போ வழங்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு புறம்போக்கு மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், மீண்டும் இவ்வழக்கு இன்று(செப்டம்பர் 30) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுப்பணித்துறை,ஊரக வளர்ச்சி துறை,பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தலைமை செயலாளர் முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மிகவும் ஆட்சேபகரமான அல்லது வெள்ளம் வந்தால் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்போ, மின்சார இணைப்போ வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை பராமரிக்கும் வருவாய்த்துறை,பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்நிலைகள் உள்ள பகுதிகளின் சர்வே எண்களை பதிவுத்துறைக்கு தெரிவிக்கவும், அத்தகைய இடங்களை அரசு இடங்களாக கணக்கில் கொண்டு ,அவற்றின் மதிப்பை ஜீரோவாக நிர்ணக்க உள்ளதாகவும், அத்தகைய இடங்களை யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்தனர்.
**-வினிதா**