மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய தலைமுறையினரான 2கே கிட்ஸ் காமராஜரை எவ்வாறு அறிந்து வைத்துள்ளனர் என்று நமது மின்னம்பலம்.காம் ஆய்வு மேற்கொண்டது.
இதில் சிலரின் பதில்கள் வியக்க வைத்த அதே வேளையில், சிலரின் பதில்களோ ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.
காமராஜர் யார் தெரியுமா என்ற நமது கேள்விக்கு சிலரது பதில்கள்….
- பிரெசிடெண்டா? பிரதமரா? ஜெயில்ல இருந்தாரே அவர் தானே?
- காமராஜர் தான் நம்மோட முதல்வரா இருந்தவரு… சத்துணவு திட்டத்த கொண்டு வந்தவரு.
- காமராஜர் நமது முன்னாள் சி.எம். ரொம்ப நல்ல மனுஷன். எல்லோருக்கும் அவர பிடிக்கும். அவர மாறி இன்னொருத்தர் வந்தா நல்லா இருக்கும்.
- யாருனே தெரியாது. சென்னையில காமராஜர் அரங்கம்னு ஒன்னு இருக்குனு மட்டும் தெரியும்.
- எளிமையான மனிதர். இப்போ இருக்கிற தலைவர்கள ஏழைகள் கிட்ட இருந்து காச பிடுங்க தான் ஆசப்படுறாங்க. ஆனா அவர் அதிகமா ஏழைகளுக்காக திட்டத்த கொண்டு வந்தாரு. அவர் படிச்சது கம்மின்னாலும், பெரிய தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடியவரா இருந்தாரு. அவர மாறி ஒருத்தர் தான் இப்போ நமக்கு வேணும்.
- எனக்கு தெரியாது.
- மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவரு. அவர் எளிமையான தலைவர்.
- அவரப்பத்தி தெரியல…
- அவர் இறந்தநாள் நாள் காந்தியோட பிறந்தநாள்.
- காமராஜர்னாலே கல்வி தான் ஞாபகம் வருது.
- சத்தியமா நோ ஐடியா..
- கல்விக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுத்தாரு.
- இப்போ இருக்குற தலைவர்கள் யாரும் அவரமாறி எளிமையாக இருக்க முடியாது.
இப்படி கலவையான பதில்களுடன் நீள்கிறது காமராஜர் குறித்த 2கே குழந்தைகளின் பார்வை.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்!
காமராஜர் யார்?
விருதுநகரில் பிறந்து ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த காமராஜர், தமிழ்நாடு முதல்வராக 9 ஆண்டுகள் பதவி வகித்தார்.
தனது ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டுவந்த அவர் பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு தொலைநோக்குடன் பல புதிய திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தினார்.
அதன்படி, சத்துணவு திட்டம், எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி, குலக்கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு, பள்ளி சீரமைப்பு மாநாடு, 10 கி.மீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடம், அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம், பொது நூலகச் சட்டம் என்று எண்ணற்ற கல்வி நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார் கர்ம வீரர் காமராஜர்.
இதனால் தான் அவரது பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!
கிட்டு | கிறிஸ்டோபர் ஜெமா
கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா: முதல்வரின் பயணத் திட்டம்!