சிறப்புக் கட்டுரை: கொரோனா காலம் – ஏற்றத்தாழ்வும் ஏழ்மையும்!

Published On:

| By Balaji

ராஜன் குறை

பொருளாதார ஏற்றத்தாழ்வு சிறிதும் அற்ற நிலை என்பது சமூகத்தில் சாத்தியமா என்பது ஐயம்தான். பொதுவுடமை சமூகமாக இருந்தாலும்கூட, அவரவர்கள் பணிகள், பொறுப்புகள் சார்ந்து சில கூடுதல் வசதிகள், சலுகைகள் தவிர்க்கவியலாதவை. ஓரளவாவது ஊக்கப்படுத்த தனிச் சொத்துரிமையை அனுமதிப்பதும், அதன் மூலம் ஏற்றத்தாழ்வு உருவாவதும் இன்றியமையாதது. சமூகம் முழுமையும் ஒருபடித்தான நிலையில் வாழ்வது என்பது ஆதிவாசி வேட்டைச் சமூகங்களில்கூட சாத்தியமாக இருந்ததா என்பது கேள்விக்குறிதான். அங்கேயும் சில அதிகார சமமின்மைகள், ஏதோவொரு வகையிலான ஏற்றத்தாழ்வு தோன்றியதை மானுடவியல் பிரதிகள் விவாதித்துள்ளன.

ஏற்றத்தாழ்வுகளினால் உருவாகும் சமமின்மை சார்ந்த சமூக, அரசியல் பிரச்சினைகள் பல. அவற்றை தீர்ப்பதற்கு கருத்தாக்க அளவில் அனைவரும் சமம் என்பதையும், அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதே முதிர்ச்சியான சமூகம். அதாவது அனைவரும் கல்வியும் தொழில்களையும் திறன்களையும் பயின்று முயற்சி செய்ய சம வாய்ப்பும், அவரவர் திறன்களைப் பொறுத்து பொருளீட்டுவதில் வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நவீன சமூகங்களின் நோக்கு. சாதிய சமூகம் போல, அடிமைச் சமூகம் போல யாரும் பிறப்பிலேயே அவர்கள் தகுதி தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்காமல் இருப்பதை இன்று பெரும்பாலான சமூகங்கள் ஏற்பதில்லை. பழைய சாதீய சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சம வாய்ப்பை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சிகளில் உள்ள ஏராளமான குறைபாடுகள் அரசியல் ரீதியாகத் தொடர்ந்து சுட்டிக்காட்டப் படுகின்றன. போராட்டங்கள் நடக்கின்றன.

ஏழ்மை என்பது வேறொரு பிரச்சினை

இவ்வாறான சமத்துவம், சம வாய்ப்புக்கான அரசியல், போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து ஏழ்மை என்ற பிரச்சினையை வேறுபடுத்திக் காண்பது அவசியம். ஆங்கிலத்தில் டிப்ரவேஷன் என்று சொல்வார்கள். இது ஒருவர் குறிப்பிட்ட தருணத்தில் வறுமையில் இருப்பதைக் கடந்து, வறுமையிலிருந்து மீள்வதற்கான ஆற்றல்களோ, சாதனங்களோ இல்லாத நிலையைக் குறிப்பது இந்தச் சொல். உதாரணமாக ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் பெரும் நஷ்டமடைந்து எந்த பணமும், சொத்தும் இல்லாதவராகலாம். ஆனால் அவரிடம் சில திறமைகளும், அறிதல்களும் இருக்கும். அதன் மூலம் அவர் மீண்டும் சில வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொள்ள இயலும். ஆனால் பல தலைமுறைகளாக ஒரு சிறிய வருமானம் கொடுக்கும் தொழிலைச் செய்துவந்தவர் அந்தத் தொழிலுக்கு அவசியமில்லாமல் போகும்போது எப்படி பிழைப்பது, வருவாய் ஈட்டுவது என்று தெரியாமல் வறிய நிலையை அடைகிறார். அப்போது உருவாவதுதான் டிப்ரவேஷன் எனப்படும் ஏழ்மை.

வறுமையைப் பற்றிய பல தவறான பொதுப்புத்தி சார்ந்த கண்ணோட்டங்கள் மத்திய தர வர்க்கத்தில் உண்டு. அதாவது அவர்கள் போதிய முயற்சி செய்யாததால், பொருளீட்டும் திறன் இல்லாததால்தான் வறுமையில் இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். முயற்சியும், ஆற்றலும் உள்ள எத்தனையோ பேர் சல்லிக்காசு இல்லாமல் வாழ்க்கையைத் தொடங்கி தங்கள் ஊக்கத்தாலும், உழைப்பாலும் பெரும் பொருள் ஈட்டியுள்ளார்கள் என்பது போன்ற கந்தலாடையிலிருந்து செல்வந்தர் ஆன கதைகளைக் கூறி, ஏழ்மை நிலைக்கு ஏழைகளே பொறுப்பு என்று கற்பித்துக்கொள்வார்கள். ஏழைகளை உருவாக்குவதில் சமூகத்திற்கு முழு பொறுப்பு இருக்கிறது என்பதை நாம் வரலாற்று ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும்.

முதலீட்டிய சமூக உருவாக்கத்தில் விடுபட்டவர்கள்

முதலீட்டிய பொருளாதார முறை இயந்திரமயமாதல், நகர்மயமாதல் போன்றவற்றை மெள்ள மெள்ள பரப்பியது. இந்தியாவைப் பொறுத்தவரை நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்த சமூக மாற்றம் அலை, அலையாகப் பரவி, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பட்டிதொட்டியெல்லாம் ஊடுருவி நிற்கிறது. இந்த சமூக மாற்றத்தின் போக்கில் முன்பு பல்வேறு தொழில்கள் செய்து பிழைத்து வந்தவர்கள் உபரிகளாக மாறியுள்ளனர்.

நம் கண்ணெதிரிலேயே ஓலா, ஊபர் போன்ற சேவைகள் வந்த பிறகு ஆட்டோக்களின் வருமானம் குறைகிறது. சூப்பர் மார்க்கெட்டுகள் பெருகும்போது மளிகைக்கடைகளின் வியாபாரம் குறைகிறது. எனக்குத் தெரிந்த ஒரு குடியிருப்புப் பகுதியில் மளிகைக்கடை வைத்த இளைஞர் ஒருவர், சில ஆண்டுகள் கழித்து அருகிலேயே ஒரு சூப்பர் மார்க்கெட் வந்தவுடன் நொடித்துவிட்டார். அவரால் திடீரென்று வேறு தொழிலையும் தேடிக்கொள்ள முடியாது. அதனால் பெரிய வளர்ச்சியோ, வருவாய் அதிகரிப்போ இல்லாமல் குறைந்த வருவாயுடன் தொடர்கிறார். கடந்த நூறாண்டுகளில் இவ்விதம் ஏராளமானவர்கள் அவர்கள் மரபாக செய்து வந்த தொழில்களில் வாய்ப்புகள் அற்றுப் போய் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து புதிய வருவாய் மார்க்கங்களை தேடி வந்துள்ளார்கள். அல்லது அவர்கள் தொழில்களை உட்செரித்த அமைப்புகளுக்குள் இடம் தேடிக் கொள்வார்கள். மளிகைக் கடைக்காரர் சூப்பர் மார்க்கெட்டில் உதவியாளர், மேலாளர் பணியில் சேர்ந்துகொள்ளலாம். மேற்குத் தொடர்ச்சி மலை படத்தில் வருவது போல ஒரு விவசாயி தன் நிலத்தில் நிறுவப்பட்ட செல்போன் டவருக்கு காவலாளி ஆகலாம்.

நவீன உற்பத்தி முறைகளே மேலும், மேலும் இயந்திரமயமாவதும் நடந்து வருகிறது. விவசாயத்திலும் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. அறுவடை என்பது பெருமளவு இயந்திர மயமாகிவிட்டது. இவ்வாறான மாற்றங்கள் நிகழும்போது அந்தப் பணிகளைச் செய்து வந்த கூலித்தொழிலாளர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அவர்கள் எப்படி ஈடு செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

பொருளாதார வளர்ச்சியும், உற்பத்திப் பெருக்கமும் அனைவருக்கும் வருவாய் கிடைக்க வகைசெய்யாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஏழ்மை என்பதற்கு ஒரு தனிநபர் பொறுப்பல்ல என்பதும் இந்த சமூக மாற்றங்கள் அவர்களை உழைத்துப் பிழைக்க வழியற்றவர்களாக மாற்றியுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

விவசாய வேலைக்குப் பதிலாக அவர்கள் கட்டடத் தொழிலாளர்களாக மாறி நகரங்களுக்குக் கட்டட வேலைகளுக்குச் செல்கிறார்கள். நகரங்களில் ஏராளமான உதிரித் தொழில்களை செய்கிறார்கள். டாக்ஸி ஓட்டுகிறார்கள்; லாரி ஓட்டுகிறார்கள், மெக்கானிக்குகளாக இருப்பார்கள் அல்லது பல்வேறு சிறு வாணிபங்களில் ஈடுபடுகிறார்கள். அதாவது பொருட்களை ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டு வீதி வீதியாக சென்று விற்றோ அல்லது நடைபாதைகளில், பேருந்து, ரயில் நிலையங்களில் விற்றோ அதற்கான கமிஷன் தொகையைப் பெற்றுக்கொள்வார்கள். நகரத்தின் பெரும் மக்கள் தொகையின் இயக்கத்தில் இவர்கள் தங்களுக்கான சொற்ப வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்கிறார்கள். திடீரென்று அந்த இயக்கம் மொத்தமாக நின்று போனால் அற்ற குளத்து அருநீர்ப்பறவைகள் போல வேறெங்கும் செல்ல திசையின்றி திகைக்கிறார்கள்.

அரசும் ஏழை மக்களும்

இவ்வாறாக சமூக இயக்கத்தில் விடுபட்டு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. தனிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவர்கள் பலரும் பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தித் தரலாம். ஆனால் அரசுக்கு ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அது ஏழை மக்களை எப்படியாவது போகட்டும் என்று விடமுடியாது, கூடாது. ஏன் என்பதற்கு முக்கியமான சமூக அறம் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன.

அரசு என்பது நாட்டின் ஒட்டுமொத்த வளங்களுக்கும் உரிமை கோருவது. ஏனெனில் அரசு என்பது அனைத்து மக்களின் ஒட்டுமொத்த அடையாளம்தான். அதனால் அரசு இயற்கை வளங்களுக்கெல்லாம் விலை வைக்கிறது. ஆற்றில் மணல் அள்ள உரிமைகளை ஏலத்தில் விடுகிறது. மலைகளில் கல் உடைக்க உரிமைகளை ஏலத்தில் விடுகிறது. காற்றில் தொலைபேசி அலைக்கற்றைகளைப் பயன்படுத்திக்கொள்ள காற்றை ஏலம் விடுகிறது. பூமிக்கு அடியில் உள்ள தனிமங்களை எடுக்க உரிமைகளை ஏலம் விடுகிறது. இந்த இயற்கை மூலதனங்கள் அனைத்துக்கும் அரசு உரிமையாளராக இருக்கிறது. அவை அனைத்திலும் ஏழை மக்களுக்கும் உரிமை இருக்கிறது. ஏனெனில் அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்.

எனவே ஏழைகள் பட்டினியால் சாவதற்கு நாங்கள் என்ன செய்வது என்று அரசாள்பவர்கள் சொல்ல முடியாது. ஒவ்வோர் ஏழையும் இந்த நாட்டின் பங்குதாரர். இந்த மண்ணில் பிறந்தவர். அவருக்கு உயிர் வாழ, அதற்கான ஆதரவைப் பெற பாத்தியதை இருக்கிறது. அவருக்கு யாரும் இரக்கப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம். இந்த நாட்டின் வளங்களில் அவருக்கு உரிய பங்கைக் கொடுத்தால் போதும். அரசின் வருவாய் என்பது அவர்கள் சார்பாக ஈட்டப்படுவதுதான். அரசு என்பது பணக்காரர்கள் நடத்தும் கம்பெனி அல்ல. இந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் உரிமையுள்ள, பாத்யதை உள்ள ஒரு நிறுவனம். எந்த ஒரு குடிநபரும் உணவுக்கு வழியில்லாமல் இருந்தால் அரசு அவருக்கு துரோகம் இழைக்கிறது, பங்குதாரருக்கு உரிய பணத்தை தராமல் ஏமாற்றுகிறது என்றுதான் பொருள்.

கொரோனா காலத்தில் ஏழ்மையும் பட்டினியும்

முதலீட்டிய சமூகம் உருவாக்கியுள்ள நிலையை உத்தேசித்துத்தான் இன்று உலகில் “யுனிவர்சல் பேசிக் இன்கம்” என்ற “அனைவருக்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டம்” உருவாகியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அனைத்து ஏழைக்குடும்பங்களுக்கும் மாதம் 6,000 ரூபாய் வருமானம் அரசே வழங்கும் என அறிவித்தது. நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃலோ தம்பதியினர், பொருளாதார வல்லுநர் தாமஸ் பிக்கெட்டி போன்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை வழங்கத் தயாராக இருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பொருளாதார இயக்கத்தை முற்றிலும் 40 நாட்கள் நிறுத்தியதில் சார்பு நிலை பொருளாதாரத்தில் ஜீவிக்கும் ஏராளமான சொற்ப அன்றாட வருவாய் ஈட்டும் மக்கள் ஏழ்மையின் கோரப்பிடியில் விழுந்தார்கள். இந்த நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் அதாவது 13 கோடி குடும்பங்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானம் திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். தமிழ் ஊடகங்களில் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் எவ்வளவோ விளக்கிவிட்டார்.

பண உதவி தவிர ஏராளமான நெல்லும் கோதுமையும் அரசின் கையிருப்பில் இருக்கிறது என்பதையும் அனைவரும் சுட்டிக்காட்டுகிறார்கள். ரேஷன் கார்டு போன்றவற்றை வலியுறுத்தாமல் உணவு தேவைப்படும் அனைவருக்கும் அந்த தானியங்களைப் போர்க்கால அடிப்படையில் வழங்கலாம் என்றே பல நிபுணர்களும் சொல்கிறார்கள்.

ஆனாலும் நாட்டின் பல பகுதிகளிலும் குடும்பங்கள் பசியால் வாடுவதையும், பலர் தற்கொலை செய்துகொள்வதையும், உணவோ, அரிசியோ வழங்கும் இடங்களில் மணிக்கணக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பதையும், தமிழகத்தில் அமைச்சர் ஒருவர் அரிசி வழங்கிய இடத்தில் 5,000 பேர் கூடியதில் கலவரமும் தடியடியும் நடந்ததையும் செய்திகளில் பார்க்கிறோம்.

எதனால் ஏழைகள் துயரை மத்திய அரசு பொருட்படுத்த மறுக்கிறது? ஏழைகள் துயர் துடைப்பதை தன் தலையாய பணியாகக் கருத மாட்டேன் என்கிறது? ஏன் கண்துடைப்பு திட்டங்களை அறிவித்து போக்குக் காட்டுகிறது? பணக்காரர்கள், மத்திய தர வர்க்கத்தினர் ஆதரவு மட்டும் தேர்தலில் வெற்றிபெற போதுமானது என்று பாரதீய ஜனதா கட்சி நினைக்கிறதா?

அப்படியெல்லாம் நினைத்தாலும் சந்தைப் பொருளாதாரம் சிக்கலானது. இந்த ஏழைகள் வாங்கும் ஐந்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டும், கடலை மிட்டாயும் கூட பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. அவர்களுக்குக் கொடுக்கும் குறைந்த பட்ச மாத வருவாயை அவர்கள் அப்படியே ரூபாய் நோட்டாக சாப்பிடப் போவதில்லை. அவர்கள் அத்தியாவசியப் பொருட்களைத்தான் வாங்கப் போகிறார்கள்; அந்தப் பணம் சந்தைக்குத்தான், பொருளாதார இயக்கத்திற்குத்தான் வரப்போகிறது.

கொரோனாவில் உயிர் பிழைக்க நினைப்பவர்கள் சக மனிதர்களின் ஏழ்மையை நீக்க வேண்டும் என்பதை உணர்வார்களா என்பதே எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share