சுங்கச்சாவடி கட்டணம் : வாகன ஓட்டிகளிடம் சுரண்டும் மத்திய அரசு!

Published On:

| By Kavi

28 crore excess fee collected at Paranur toll

சுங்கச்சாவடி கட்டணம்… வாகன ஓட்டிகளின் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருப்பது இந்த சுங்கக் கட்டணம் தான்.

இந்தியாவில் ஏறத்தாழ 600 சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் 55 சுங்கச் சாவடிகள் உள்ளன.

ADVERTISEMENT

இவற்றில் சில சுங்கச் சாவடிகள் கால வரம்பை மீறி செயல்படுகின்றன எனவும் விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

அதை சிஏஜி எனப்படும் மத்திய தணிக்கை குழு அறிக்கை உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT

சுங்கக் கட்டணம், நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, நெடுஞ்சாலைகளில் உள்ள வசதிகள் ஆகியவற்றை குறித்து தென்னிந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளை தேர்ந்தெடுத்து மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்திருக்கிறது.

தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

28 crore excess fee collected at Paranur toll

அதில் 2017-18 மற்றும் 2020-21 காலக்கட்டத்தில் சுங்கச் சாவடிகள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.28,523.88 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. இது நாட்டில் கிடைத்த மொத்த வருவாயில் 28.75 சதவிகிதமாகும்.

இதில் சிஏஜி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக 28 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச் சாவடி என்பது சென்னைக்கு வந்து செல்லும் வழியில் உள்ள முக்கிய சுங்கச்சாவடியாகும். இந்த சுங்கச்சாவடியை நாளொன்றுக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

விடுமுறை நாட்களிலோ, விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை திரும்பும்போதோ இந்த சுங்கச்சாவடியில் கார்களும், ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள், லாரிகளும் என பல்வேறு வாகனங்களும் அணி வகுத்து நிற்பதை காண முடியும்.

இப்படி முக்கியமான சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க வரியை வசூலிப்பதில் முறையாக விதிகளை கடைபிடிக்காமல் வாகன ஓட்டிகளிடம் விதிகளை மீறி அதிகளவு கட்டணங்களை வசூல் செய்திருப்பதாக சிஏஜி கூறுகிறது.

தாம்பரம் முதல் திண்டிவனம் வரையில் தற்போதுள்ள நான்கு வழிச்சாலையை இரண்டு கட்டங்களாக 8 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய பணிகள் தொடங்கப்பட்டன. 2018 ஜூலையில் இரும்புலியூர் முதல் வண்டலூர் வரை 2.3 கிமீ முதல் கட்டமாகவும், மார்ச் 2019ல் வண்டலூர் முதல் கூடுவாஞ்சேரி வரை 5.3 கி.மீ இரண்டாம் கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2021 மார்ச் வரை இந்த பணிகள் நடந்தன. இந்த பணிகள் தாமதமாக நடந்தன.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டட விதிப்படி தாமதமான காலத்தில் பயனர் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த காலக்கட்டத்தில் பரனூர் சுங்கக் கட்டணத்தை 75 சதவிகிதமாக குறைக்கவில்லை.

இதனால் 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை கூடுதலாக வாகன ஓட்டிகளிடம் ரூ.6.54 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று திண்டிவனம் அருகே பாலாற்றின் குறுக்கே 630 மீட்டர் நீளமுள்ள இரண்டு பாலங்கள் இடதுபுறமும், வலது புறமும் கட்டப்பட்டுள்ளன. இடதுபுறம் இருக்கும் பாலம் திண்டிவனம் நோக்கி செல்கிறது. இது 1954 இல் கட்டப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் படி இந்தப் பாலத்தைப் பயன்படுத்துவதற்கு கட்டணமில்லை. அதாவது 1956 செப்டம்பருக்கு முன்னதாக கட்டப்பட்ட பாலத்துக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.

ஆனால் இந்த பாலத்துக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. 2017 முதல் 2021 வரை விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் ரூ.22 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது. இதன்மூலம் மொத்தமாக வாகன ஓட்டிகளிடம் ரூ.28 கோடி ரூபாய் சுரண்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பரனூர் மட்டுமின்றி சிஏஜி ஆய்வு நடத்திய சுங்கச்சாவடிகளில், 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் 132 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று தேசிய நெடுஞ்சாலைகளில் போதிய வசதிகள் இல்லை என்று சிஏஜி ஆய்வில் வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகள் இருப்பதாக 42.36 சதவீத வாகன ஓட்டிகளும், சாலை நடுவே மற்றும் சாலை ஓரங்களில் மரங்கள் செடிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்று 38.09 சதவிகித பேரும், கழிப்பறை மற்றும் பிற வசதிகள் தூய்மையாக இல்லை என்று 39.20 சதவிகித பேரும், 25.21 சதவீத சாலைப் பயனாளிகள் சுங்கச்சாவடிகள் சீராகவும், சுதந்திரமாகவும் இயங்கக்கூடியதாக இல்லை எனவும் குறை கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் கூடுதல் கட்டணம் வசூலாகியிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் சுங்கச் சாவடிகள் தொடர்பாக திமுக எம்.பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு கடந்த ஆண்டு பதில் அளித்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவிகிதம் குறைக்கப்படும் என்று  பதிலளித்திருந்தார்.

அதுபோன்று 60 கிமீ தொலைவுக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூன்று மாதங்களுக்குள் மூடப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதில் எதுவும் நடக்கவில்லை என்பதை காட்டிலும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

28 crore excess fee collected at Paranur toll

தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவும், நிதின் கட்கரியை நேரில் சந்தித்து பரனூர், சென்ன சமூத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 இடங்களில் இருக்கும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த கோரிக்கை மனு மீது மத்திய அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அமைச்சர் நிதின் கட்கரி சொல்வது போல் 60 கிமீட்டருக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகளை மூடப்பட்டால் தமிழ்நாட்டில் 16 அல்லது 17 சுங்கச்சாவடிகளே இருக்கும். ஆனால் தற்போது 55 சுங்கச்சாவடிகள் உள்ளன.

உதாரணத்துக்கு சென்னை டூ சேலம் நெடுஞ்சாலையை எடுத்துக்கொண்டால், 345 கிமீ தூரத்துக்கு 8 சுங்கச்சாவடிகள் உள்ளன. வானகரம் (சென்னை பைபாஸ்), பரனூர் (செங்கல்பட்டு), திணடிவனம் (ஆத்தூர்), விக்கிரவாண்டி(விழுப்புரம்) உளுந்தூர்பேட்டை(செங்குறிச்சி), கள்ளக்குறிச்சி (வீரசோழபுரம்), தலைவாசல் (நத்தக்கரை), வாழப்பாடி (மேட்டுப்பட்டி) ஆகிய சுங்கச்சாவடிகளை கடந்துதான் சேலம் செல்ல வேண்டும். காரில் பயணித்தால் இந்த சுங்கச் சாவடிகளில் மொத்தம் 490 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

இதில் விக்கிரவாண்டி – உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு இடையேயான தூரம் 48 கிமீ மட்டுமே. உளுந்தூர்பேட்டை – கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடிக்கான தூரம் 39 கிமீ மட்டுமே, கள்ளக்குறிச்சி – தலைவாசல் சுங்கச்சாவடிக்கான தூரம் 31கிமீ மட்டுமே, தலைவாசல் – வாழப்பாடி சுங்கச்சாவடிக்கான தூரம் 52 கிமீ தூரம் மட்டுமே, இப்படி சென்னை டூ சேலம் வரை 4 சுங்கச்சாவடிகள் 60 கிமீ தூரத்துக்குள் இருக்கின்றன.
இப்படி 60 கிமீட்டருக்கும் இருக்கும் சுங்கச்சாவடிகளாலும், விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும், 60கிமீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

பிரியா

விபத்திற்கு பிறகு முதன்முறையாக… ரிஷப் பந்த் வீடியோ வைரல்!

’நீட்’டை எதிர்த்து போராட உதயநிதிக்கு தகுதியில்லை: ஜெயக்குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share