27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

Published On:

| By admin

அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பர்கர் கிங் நிறுவனத்தில் கெவின் போர்டு என்னும் ஊழியர் சமையற்காரராக 27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது மகள் செரீனா இந்த விஷயத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். கடந்த 27 வருடங்களாகத் தன்னையும், தனது மூத்த சகோதரியையும் கஷ்டமில்லாமல் வளர்த்து வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ‘கோ-பண்ட்-மீ’ எனப்படும் அமெரிக்காவின் பிரபல நிதி திரட்டும் நிறுவன சமூக பக்கத்தில் கெவினின் மகள் பதிவிட்டார்.

ADVERTISEMENT

‘கோ-பண்ட்-மீ’ பக்கத்தில் இந்தப் பதிவை பார்த்த மக்கள் கெவினை பாராட்டும் விதமாக நிதி வழங்கி வருகின்றனர். இதன் மூலம் 1 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளதைக் கண்டு கெவினின் மகள் செரீனா ஆச்சரியமடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக பதிவில், “நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. எனது தந்தை 27 வருடங்களாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகிறார். இது போன்ற தந்தை எனக்கும் எனது மூத்த சகோதரிக்கும் கிடைத்தது மிக அதிர்ஷ்டம். அவரைப் பாராட்டி நிதியளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிதியில் பிரபல நகைச்சுவை நடிகர் டேவிட் ஸ்பேட் என்பவர் 5000 டாலர்கள் நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share