ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தீவிரவாதிகளை கைது செய்யாமல் Operation Sindoor ராணுவ நடவடிக்கை எப்படி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்க முடியும்? என சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகெல் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக பூபேஷ் பாகெல் கூறியதாவது; ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். ஆனால் இந்த தாக்குதலுக்கும் படுகொலைக்கும் காரணமான 4 அல்லது 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனரா? என்றால் இல்லை. அப்புறம் எப்படி ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றுவிட்டதாக கூற முடியும்? பஹல்காம் பாதுகாப்பு குறைபாடுக்கு யார்தான் பொறுப்பு?
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பித்தானே காஷ்மீருக்கு பொதுமக்கள் சுற்றுலா சென்றனர்? அப்படி உங்களை நம்பி சென்ற பொதுமக்கள் தங்களது உயிரை பறிகொடுத்துள்ளனரே.. இதற்கு யார் பொறுப்பேற்பது?
காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத்: இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு போர் நிறுத்தத்தை அறிவிப்பது என்பது பெரும் அதிர்ச்சிக்குரியதாகும். பாகிஸ்தானுடன் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது எனில் அதை அறிவிக்க வேண்டியது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிதானே தவிர அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அல்ல. ஆகையால்தான் இது தொடர்பாக நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்கிறோம்.
ஒடிஷா பிஜேடி எம்பி முஜிபுல்லா கான்: பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னரும் தாக்குதல் நடத்துகிறது. இதனால் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டி இது தொடர்பாக விவாதிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் படுகொலை உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு பகிரங்கப்படுத்த வேண்டும்.
