அஜித்தின் ஃபேவரைட்… காலம் கடந்தும் கொண்டாடப்படும் ‘முகவரி’

Published On:

| By uthay Padagalingam

25 Years of Ajith's Mugavari

அழகு குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருக்கும். அதனோடு பொருந்திப் போகிற பிரபலங்களை ரொம்பவே பிடிக்கும். கூடவே, ஒருவரது தனிப்பட்ட ஆளுமை குறித்து தெரியவரும் தகவல்களும் அவர்களை அழகானவர்களாகக் காட்டும். 25 Years of Ajith’s Mugavari

சினிமா, அரசியல், விளையாட்டு, வணிகம் மற்றும் இதர துறைகளைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அப்படி வரிசைப்படுத்த முடியும். அந்த வகையில், திரை நட்சத்திரங்களில் தனக்கென்று தனித்துவமான ரசிகக்கூட்டத்தைக் கொண்டவர் அஜித்குமார்.

ஒவ்வொரு வயதிலும், அழகு என்ற சொல்லுக்கு வெவ்வேறு பரிமாணங்களைத் தந்து வருபவர். ஆனாலும், ‘அமராவதி’ முதல் பார்த்துவரும் ரசிகர்களுக்கு ‘அமர்க்களம்’ காலத்து அஜித்தை தான் ரொம்பப் பிடிக்கும். இது எனது தனிப்பட்ட அனுமானம்.

காதல் மன்னன், வாலி, நீ வருவாய் என, ஆனந்தப் பூங்காற்றே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உட்படப் பல படங்களில் அவர் அழகுறத் தெரிந்தாலும், ‘முகவரி’யில் அந்த ‘கிராஃப்’ உச்சத்தைத் தொட்டிருக்கும். அதற்கு, அப்படத்தில் அவர் ஏற்ற ஸ்ரீதர் பாத்திரத்தின் வார்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். 25 Years of Ajith’s Mugavari

வி.இசட்.துரை இயக்கிய இந்தப் படத்தில் ரகுவரன், கே.விஸ்வநாத், ஜோதிகா, சித்தாரா, ஜெய்கணேஷ், விவேக், மணிவண்ணன், ராஜிவ் உட்படப் பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவைக் கையாண்டிருந்தார். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி இதனைத் தயாரித்திருந்தார். 25 Years of Ajith’s Mugavari

வெற்றியைத் தொடுகிற வேட்கை! 25 Years of Ajith’s Mugavari

கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கும் மேலாக, சினிமாவில் இசையமைக்க வாய்ப்பு தேடி வருகிறார் ஒரு இளம் இசையமைப்பாளர். தனது படிப்புக்கு ஏற்ற வேலையொன்றைத் தேடி, அதில் திருப்தி அடைகிற எண்ணம் அவரிடத்தில் இல்லை. அண்ணன், அண்ணி, அப்பா, அவர்களது குழந்தைகள், தங்கை என்று அனைவருமே அதற்கு உறுதுணையாக இருக்கின்றனர். 25 Years of Ajith’s Mugavari

தற்செயலாகச் சந்திக்கும் பெண் ஒருவர் அந்த இளைஞர் மீது காதல் கொள்கிறார். அவரது இசையமைப்பாளர் கனவுக்குத் துணை நிற்கிறார்.

தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், பல வாய்ப்புகள் அவரிடத்தில் இருந்து தவறிப்போகின்றன. சில வாய்ப்புகள் கனிந்தாலும், அப்படங்களுக்கான பணிகள் பாதியிலேயே நின்றுவிடுகின்றன.

இந்த நிலையில், ஆலமரமாய் நிழல் தரும் தனது மூத்த சகோதரரை நோயாளியாகப் பார்க்கிறார் அந்த இளைஞன். அந்த குடும்பத்திற்காக அவரால் தொடர்ந்து உழைக்க முடியாது எனும் நிலை உருவாகிறபோது, அந்த இளைஞன் தனது கனவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு கனத்த மனதுடன் ஒரு சாதாரண வேலைக்குச் செல்வதாக இப்படத்தின் முடிவு அமைக்கப்பட்டிருக்கும்.

அதற்குச் சற்று முன்னர் இசையா, காதலா என்று முடிவெடுக்க வேண்டிய சூழலில், அந்த இளைஞர் தனது காதலியையும் இழந்திருப்பார். 25 Years of Ajith’s Mugavari

முழுக்கச் சோகமயமாக இருந்தாலும், இப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் ‘தன்னம்பிக்கை டானிக்’கை குடித்த உத்வேகத்தையே பெறுவர். காரணம், அந்த வகையில் இதன் காட்சியமைப்பு இருக்கும்.

கிளைமேக்ஸில் கூட, அந்த இளைஞர் வேதனைப்படுவதற்குப் பதிலாக ‘என்னிக்காவது ஒருநாள் நான் ஜெயிப்பேன்’ என்றுதான் சொல்வதாகப் படம் அமைந்திருக்கும். கூடவே, ‘ஜெயிச்சபிறகு திரும்பிப் பார்க்க நம்மோட குடும்பம் இருக்கணும்ல; அவங்களை இழந்துட்டு வெற்றி மட்டும் இருந்தா போதுமா’ என்கிற கேள்வியும் அவரிடத்தில் தொக்கி நிற்கும்.

இப்படி மனித உறவின் மாண்பைப் பேசியது ‘முகவரி’.

அதேநேரத்தில், வெற்றிக்கோட்டைத் தொடுகிற வேட்கையும் இப்படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். 25 Years of Ajith’s Mugavari

இது போன்ற கதைகளின் முடிவு, பொதுவாக நாயகனின் வெற்றியைக் காட்டுவதே இருக்கும். அவ்வாறில்லாத காரணத்தாலேயே வித்தியாசமாகத் தோற்றம் தந்தது ‘முகவரி’.

சில ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தேவையில்லை என்று தவிர்த்த சில ஷாட்களை ஒன்றிணைத்து ‘செகண்ட் கிளைமேக்ஸ்’ சேர்க்கப்பட்டது.

இசையமைப்பாளர் ஆகும் கனவை என்றாவது ஒருநாள் நனவாக்குவோம் என்ற நம்பிக்கையுடன், இன்றைய பொழுதுக்கான உழைப்பைத் தரும் வகையில் இன்னொரு வேலையை நோக்கி அந்த இளைஞன் சொல்வதாக, இப்படத்தின் ஒரிஜினல் கிளைமேக்ஸ் அமைந்திருந்தது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் திரையரங்கில் கண்டு ரசித்த ‘முகவரி’, இப்போதும் நினைவில் தங்கியிருக்கக் காரணம் அந்த கிளைமேக்ஸ் தான்.

சிறப்பான காட்சியாக்கம்! 25 Years of Ajith’s Mugavari

‘முகவரி’ படத்தின் சிறப்பு, அதன் திரைக்கதை.

ஸ்ரீதர் எனும் இளைஞர். இசையமைப்பாளர் ஆகும் கனவில் இருக்கிறார். மொத்தக் குடும்பமும் அதற்குத் துணை நிற்கிறது.

இதனைச் சொல்ல, புதிதாகக் குடிவந்த வீட்டில் சாமான்களை அடுக்கி வைத்தவாறே அனைத்து பாத்திரங்களும் சாப்பிட அமர்வதாகக் காட்சி எழுதப்பட்டிருக்கும். அப்பாத்திரங்களின் குணாதிசயங்களையும், கதையின் ஆதாரப் புள்ளியையும் சொல்லும் வகையில் ஒரே ஷாட்டில் முதல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இதே போன்றே, குடும்பம் மொத்தமும் ஒன்றாகச் சேர்ந்து மொட்டை மாடியில் வானவில்லை காண்பதாகக் காட்சியொன்று உண்டு. 25 Years of Ajith’s Mugavari

அதற்கு முன்னதாக, கூடுதலாகக் கிடைத்த பணத்தை என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்வார்கள். ‘சரி, யாருக்கு இந்த பணத்தைச் செலவழிக்கலாம்’ என்று சீட்டு குலுக்கிப் போட்டு முடிவெடுக்கலாம் என்று முடிவு செய்வார்கள். அதில் நாயகனின் பெயர் வரும். அதையடுத்து, அவருக்குப் பிடித்தமானதை வாங்க முடிவெடுக்கப்படும்.

அப்போதுதான், அந்த சீட்டுகள் அனைத்தையும் நாயகன் பிரித்துப் பார்ப்பார். அனைத்திலும் நாயகனின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.  

அதனை அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவரது சகோதரர் ‘நீ வானவில் பார்க்கலைல்ல’ என்பார். ’இல்லண்ணே பார்த்துட்டேன்’ என்று அந்த சீட்டுகளை அவரிடம் காண்பிப்பார் நாயகன்.

‘சென்டிமெண்ட் சீன்னா இப்படி இருக்கணும்’ என்று இலக்கணம் வகுக்கும் வகையில் அது எழுதப்பட்டிருக்கும்; அற்புதமாகக் காட்சியாக்கம் செய்யப்பட்டிருக்கும்.

நாயகன் நாயகியின் காதல் காட்சிகள் கண்ணியமாக ஆக்கப்பட்டிருக்கும்.

இன்னொரு காட்சியில், தன்னம்பிக்கை வற்றிப்போய் சோர்ந்து போயிருக்கும் நாயகனிடம், ஒரு சிறுவனைக் காண்பிப்பார் நாயகி. உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியைத் தொட முடியாமல் தவிக்கும் சிறுவனை அவரது நண்பர்கள் கிண்டல் செய்ய, சிறிது தூரம் அவர் பின்னே நடப்பார். அங்கிருந்து வேகவேகமாக முன்னே ஓடிவந்து தாவிக்குதித்து அந்த மணியை அடிப்பார். ‘டிங்’ என்று அந்த மணிச்சத்தம் கேட்கும்.

இந்த படத்தைப் பார்த்தவர்களில் பலரும் சிலாகிக்கும் காட்சி இது.

இப்படி ‘முத்து முத்தான’ பல காட்சிகளைக் கொத்தாகக் கொண்டிருக்கும் ‘முகவரி’.

அஜித், ரகுவரன், கே.விஸ்வநாத், சித்தாரா, ப்ரீத்தி, ஜோதிகா, ஜெய்கணேஷ், மணிவண்ணன், விவேக் என்று இப்படத்தில் நடித்த பலர் ‘உணர்ச்சிகரமான நடிப்பால்’ நம்மை வசீகரித்திருப்பார்கள்.

சண்டைக்காட்சியில் கூட உணர்ச்சியை மிகுதியாக வெளிப்படுத்தாத அஜித்தை நாம் இதில் பார்க்க முடியும். அவர் படங்களில் வழக்கமாக வெளிப்படுகிற ‘ஹீரோயிசம்’ இதில் துளியும் இருக்காது.

அதனால்தானோ என்னவோ, இந்தப் படம் அஜித்தின் மனதுக்கு நெருக்கமானதாக இருந்திருக்கிறது. 2000களில் இந்தக் கருத்தை அவர் தனது சகாக்களிடம் பகிர்ந்திருக்கிறார். இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்று தெரியாது.

வரலாறு, மங்காத்தா, வேதாளம், என்னை அறிந்தால், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று அவரை வேறுபட்ட பரிமாணத்தில் வெளிப்படுத்திய படங்கள் சில உண்டு. சமீபத்தில் வெளியான ‘விடாமுயற்சி’ கூட அதனாலேயே எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறது.

அப்படிப்பட்ட படங்களின் தொடக்கமாக, ‘முகவரி’ அமைந்ததென்று தாராளமாகச் சொல்லலாம்.

அஜித்திடம் ரகுவரன் ‘கோல்டன் டென் பீட்’ எனும் கதையினைச் சொல்வதாகக் காட்சியொன்று உண்டு. இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் அக்கதையைக் கேள்விக்கு உட்படுத்துவதாக இருக்கும்.

அதேபோல, இந்தப் படத்தில் ‘மோசமானவர்கள்’ என்று எந்த பாத்திரமும் காட்டப்பட்டிருக்காது. பொன்னம்பலம் தோன்றும் சண்டைக்காட்சி மட்டும் விதிவிலக்கு. அதுவும் கூட வலிந்து திணிக்கப்பட்டதாகத் தெரியும்.

இசையமைப்பாளர் பாத்திரம் இடம்பெற்றிருப்பதால் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் தர வேண்டும் என்ற நெருக்கடியை, ‘முகவரி’யில் செம்மையாக எதிர்கொண்டு வெற்றி பெற்றிருப்பார் தேவா. ‘ஏ கீச்சுக்கிளியே’, ’ஓ நெஞ்சே’, ‘ஏ நிலவே’ என்று அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ரகத்தில் இணைபவை. பின்னணி இசையும் காட்சிகளைக் கண்டதும் தொற்றும் நெகிழ்ச்சியைப் பன்மடங்கு அதிகப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருக்கும்.

அனைத்துக்கும் மேலாக, பாலகுமாரனின் எளிய வசனங்களும் சிறப்பான பாத்திர வார்ப்பும், கூர்மையான காட்சி அமைப்பும், அதற்கு இயக்குனர் தந்த ஆக்கமும் மிகச்சிறப்பானதாக இருக்கும்.

இப்படத்தின் இயக்குனர் வி.இசட். துரை ஒரு காட்சியில் தயாரிப்பாளராக வரும் விஎம்சி ஹனீபாவிடம் கதை சொல்கிற இளம் இயக்குனராக நடித்திருப்பார்.

‘முகவரி’யை இயக்கியபோது இயக்குனர் துரையின் வயது 22 என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம்.

’முகவரி’ பற்றிப் படம் வெளியாகிக் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு வி.இசட்.துரையோ, பி.சி.ஸ்ரீராமோ அல்லது அப்படத்தோடு சம்பந்தப்பட்ட இதர கலைஞர்களோ கூட்டாகச் சேர்ந்து பேசியதாக, ரசிகர்களைச் சந்தித்ததாக நினைவு இல்லை.

அப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது அதற்கான சூழல் கனிந்துள்ளது எனலாம். ஏன், அப்படம் மறுவெளியீடு காண்பதற்கான சூழ்நிலை உள்ளது என்றும் சொல்லலாம்.

கிரீடம், நேர்கொண்ட பார்வை வரிசையில் அஜித்தின் திரை வாழ்வில் மிக வித்தியாசமான படம் என்று ‘முகவரி’யைச் சொல்லலாம். ஒரு நல்ல படைப்பைக் காலம் பல கடந்தும் கொண்டாடுவதுதானே அதற்குச் செலுத்தும் மரியாதையாக இருக்கும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share