லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வர்மா ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முடிவுக்கு முன்னாள் வீரர்கள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். 25 runs tilkak varma retired out get slammed
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ ணி 20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் மற்றும் ஏய்டன் மார்க்ராம் இருவரும் அரைசதம் அடித்தனர்.
தொடர்ந்து 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
7 பந்துகளில் 24 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கட்டத்தில் மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மா ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்கு பதில் களமிறங்கிய சாண்டனர் 2 ரன்கள் மட்டுமே எடுக்க, கடைசி ஓவரில் வெறும் 8 ரன்களே குவித்தது.
மும்பை அணியின் இந்த மோசமான தோல்விக்கு திலக் வர்மாவை வெளியேற செய்த மும்பை நிர்வாகத்தின் அலட்சியமான முடிவு தான் காரணம் என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சுனில் கவாஸ்கர்
சாண்ட்னருக்கு பதிலாக திலக் வர்மாவை ரிட்டயர் செய்தது ஹர்திக் பாண்ட்யாவின் முட்டாள்தனம். நீங்கள் சிங்கிள் எடுத்து சாண்ட்னருக்கு கொடுக்கவில்லை என்றால், திலக்கை ரிட்டயர் செய்தது ஏன்? அது வெறும் முட்டாள்தனம்.
வீரேந்திர சேவாக்
திலக் போன்ற ஒரு செட்டிலான பேட்டர் (23 பந்துகளை சந்தித்திருந்தார்) பெரிய ஷாட்களை ஆடாவிட்டாலும், சாண்ட்னரை விட அவர் சிறப்பாகச் செயல்பட்டிருப்பார். திலக் கடைசி ஓவரில் இருந்திருந்தால், இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரி அடித்திருப்பார். மும்பை அணியின் முடிவு தவறானது.
ஹர்பஜன் சிங்
சான்டனருக்காக திலக்கை ஓய்வு பெற கூறியது என்னை பொறுத்தவரை தவறு. சாண்ட்னர் திலக்கை விட சிறந்த ஹிட்டரா? அது போலார்டு அல்லது வேறு ஏதேனும் திறமையான ஹிட்டராக இருந்தால் ஓகே. ஆனால் இதை ஏற்க முடியவில்லை.
முகமது கைஃப்
திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் ஆகி மிட்செல் சாண்ட்னர் உள்ளே அனுப்பப்பட்டார், இது ஒரு தவறான முடிவு. கடைசி ஓவரில் பந்தை சரியாக அடிக்க முடியாவிட்டாலும் திலக்கை அனுப்பியிருக்க வேண்டாம் என்று நினைக்கின்றேன்.
சாண்ட்னர் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை அடிக்கக்கூடிய வீரர், ஆனால் அவர் மேட்ச் வின்னர் இல்லை. கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு சிங்கிள் அடிக்க வாய்ப்பு இருந்த இடத்தில் கூட பாண்டியா சாண்ட்னருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை. பிறகு ஏன் அவரை களமிறக்க வேண்டும்?
ஹனுமன் விஹாரி
சான்ட்னருக்காக திலக் வர்மா ஓய்வு பெற்றாரா? எனக்கு புரியவில்லை. ஹர்திக் இதே போன்று ரன் குவிக்காமல் தடுமாறியபோது, குஜராத் அணி அவரை ஒருபோதும் ரிட்டர்யர்ட் அவுட் ஆக சொல்லவில்லை. பிறகு ஏன் திலக்கை மட்டும் ஓய்வு பெற சொன்னார்கள்?