ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே இன்று (அக்டோபர் 24) அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில், பேருந்து தீப்பிடித்ததில் சுமார் 25 பயணிகள் வரை உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி ஏசி ஸ்லீப்பர் பேருந்து, இன்று அதிகாலை 3 மணி அளவில் கர்நூல் புறநகரில் உள்ள சின்னடெக்கூரு கிராமம் அருகே விபத்துக்குள்ளானது.
சாலையைக் கடக்க முயன்ற ஒரு இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கியதால் தீப்பொறி ஏற்பட்டு, பேருந்து முழுவதும் மளமளவென தீப்பிடித்தது.

இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், உதவியாளர் தப்பிய நிலையில், அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 25 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்தில் சுமார் 42 பயணிகள் வரை இருந்ததாகவும், அவர்களில் 15 பேர் வரை, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிர்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஏசி பேருந்து என்பதால் ஜன்னல்களைத் திறக்க முடியாததாலும், தீ மளமளவெனப் பரவியதாலும் பெரும்பாலான பயணிகள் பேருந்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆந்திரா முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேருந்து தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் கடந்த 14ஆம் தேதி ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அடுத்த 10 நாட்களுக்குள் இன்று ஆந்திராவின் குர்னூலில் 25 பேர் பலியான சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
