டெல்லியில் கடும் பனிமூட்டம், மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.
டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் நேற்று மட்டும் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இண்டிகோ விமான நிறுவனம் டெல்லி வழித்தடங்களில் இயக்கப்படவிருந்த 109 விமானங்களை ரத்து செய்தது. ஏர் இந்தியா நிறுவனமும் 100க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது.
டெல்லிக்கு பயணிக்க திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் சுமார் 6 மணி நேரம் வரை நிறுத்தப்பட்டன.
டெல்லியில் இருந்து சென்னைக்கு வரவிருந்த மற்றும் சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், சென்னை விமான நிலையப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் கடும் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஊர்ந்து சென்ற காட்சிகளைக் காண முடிந்தது. பனிமூட்டம் காரணமாக, காற்றின் தரமும் மிகவும் மோசமடைந்து, ‘கடுமையான பிளஸ்’ என்ற நிலையில் உள்ளது.
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டு, 10 முதல் 12 ஆம் வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன.
