’த்ரிஷா இல்லேன்னா நயன்தாராடா..’ என்று ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு பேசும் டயலாக் இன்றளவும் பிரபலம். அடுத்தடுத்து காதலில் விழுபவர்களுக்கு வேண்டுமானால், அது பொருத்தமாக இருக்கலாம்.
ஆனால், த்ரிஷாவைத் தவிர இன்னொரு நாயகியை ரசிக்க மாட்டோம் என்றெண்ணும் தீவிர ரசிகர்களுக்கு அவ்வார்த்தைகள் பொருந்தாது. ஏனென்றால், முதன்முறையாக நாயகியாகத் தோன்றியபோது எப்படிப்பட்ட அழகு அவரிடத்தில் மின்னியதோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் கடந்த ஆண்டு வெளியான ‘லியோ’வில் உலா வந்தார்.
இருபதாண்டுகளுக்குப் பிறகும் இப்படித்தான் இருப்பார் என்பதை உணர்ந்தே, இயக்குனர் பிரியதர்ஷன் ’லேசா லேசா’வில் த்ரிஷாவை உலக அழகியாகக் காட்டியிருப்பார்.
மறப்பது லேசா!
1999-ஆம் ஆண்டு வெளியான ’ஜோடி’ படத்தில் சிம்ரனின் தோழிகளில் ஒருவராக மிகச்சில ஷாட்களில் தன் முகம் காட்டியவர் த்ரிஷா. அந்த காட்சி படமாக்கப்பட்ட விதமும், அப்போது கிடைத்த அனுபவமும் கூட அவரை சினிமாவில் நாயகி பாத்திரங்களை ஏற்கத் தூண்டியிருக்கலாம்.

ஏனென்றால் ‘ஜோடி’ வெளியாகிச் சில மாதங்களிலேயே த்ரிஷா ‘மிஸ் சென்னை’ போட்டியில் பங்கேற்று வெற்றிவாகை சூடினார். அதற்கடுத்த சில ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமான நாயகியாகவும் மாறினார்.
அமீரின் முதல் படமான ‘மௌனம் பேசியதே’வில் நாயகியாக அறிமுகமானார் த்ரிஷா. அதில் சூர்யா ஒருதலையாகக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார். அதற்கு முன்பே ‘லேசா லேசா’வில் அவரை நாயகியாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் பிரியதர்ஷன்.
ஷாம், மாதவன் என்று அன்றைய காலகட்டத்தில் இளம் ரசிகைகளின் ‘பேவரைட்’டாக இருந்த நாயகர்களோடு அவர் ஜோடியாக அறிமுகமாகவிருந்தார். ஆனால், படப்பிடிப்பும் இதர பின்தயாரிப்பு பணிகளும் தாமதமாக ’லேசா லேசா’வுக்கு முன்பே ‘மனசெல்லாம்’, ‘சாமி’ படங்கள் வழியே த்ரிஷா ரசிகர்களின் மனதில் நங்கூரம் இட்டுவிட்டார்.
ஆனாலும், ‘லேசா லேசா’வைப் பார்க்கும் எவரும் அப்படத்தில் த்ரிஷாவே பிரதானம் என்பதை உணர முடியும். அவ்வளவு ஏன், முழுப்படமும் அவரது அழகை ஆராதிப்பதற்காகவே எடுக்கப்பட்டதோ என்ற எண்ணம் நிச்சயமாகத் தோன்றும்.அழகோ அழகு!’லேசா லேசா’, ‘அவள் உலக அழகியே’, ‘முதல்முதலாய்’, ‘ஏதோ ஒன்று’, ’என்னைப் போலவே காற்று’ என்று ஐந்து இனிமையான பாடல்களைத் தந்திருந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அவற்றுக்குத் தனது இளமை துள்ளும் தமிழால் உயிர் தந்திருந்தார் கவிஞர் வாலி.

ஐந்து பாடல்களுமே த்ரிஷாவின் அழகை ரசிகர்கள் ஆராதிப்பதாகவே அமைக்கப்பட்டிருந்தன. காட்சியாக்கம் அவ்வாறு அமையும் வகையிலேயே அவை எழுதப்பட்டிருந்தன. அதற்கு நியாயம் செய்யும் வகையில், திரையில் த்ரிஷாவைப் பேரழகியாக உணர வைத்தார் ஒளிப்பதிவாளர் திரு. சாபு சிரில் தனது கலை வடிவமைப்பில் காட்டியிருந்த அழகுணர்ச்சி அதனை மேலும் பெரிதாக்கியிருந்தது.
‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே’ என்பவர்கள், அப்படத்தின் டைட்டில் இடம்பெறும் ‘லேசா லேசா’ பாடலைப் பார்த்தபிறகு தங்கள் முடிவைச் சொல்லலாம். அப்படி ‘அழகோ அழகு’ என்று த்ரிஷாவைக் காண்பித்த ‘லேசா லேசா’ வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் ஆகின்றன. அதாகப்பட்டது, த்ரிஷாவை திரையுலகில் அறிமுகப்படுத்த விரும்பி பிரியதர்ஷன் உருவாக்கிய அத்திரைப்படத்தின் வயது 21.
ரசனைக்கு அப்பால்!
’லேசா லேசா’ படமானது, மலையாளத்தில் சிபி மலயில் இயக்கிய ‘சம்மர் இன் பெத்லகேம்’ படத்தை தழுவி உருவாக்கப்பட்டது. அதில் நாயகர்களாக நடித்தவர்கள் ஜெயராம், சுரேஷ்கோபி மற்றும் மோகன் லால். தமிழில் அவர்களது பாத்திரங்களை முறையே விவேக், ஷாம், மாதவன் ஏற்றிருந்தார். த்ரிஷாவின் பாத்திரத்தை ஏற்றவர் மஞ்சு வாரியர்.

நகைச்சுவை பாத்திரங்களில் நடித்த விவேக்கை ஒரு நாயகனாக அன்றைய ரசிகர்கள் ஏற்கவில்லை. அது மட்டுமல்லாமல், ‘லேசா லேசா’ ரசிகர்களை ஈர்க்காமல் போனதில் வேறொரு முக்கியக் காரணம் ஒன்று உண்டு.
மலையாளத்தில் வெற்றி பெற்ற கதையைத் தமிழில் உருவாக்க நினைத்த பிரியதர்ஷன், தமிழுக்கு ஏற்பச் சில மாற்றங்களைச் செய்கிறேன் பேர்வழி என்று ‘லேசா லேசா’வைப் பிய்த்தெறிந்து விட்டார். அவ்வாறில்லாமல் மலையாளத்தில் இருந்ததைப் போலவே தமிழிலும் ஆக்கியிருந்தால் கூட அப்படம் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கும்.
ராதாரவி, சத்யபிரியா, பாத்திமா பாபு போன்ற தமிழ் நட்சத்திரங்களோடு கொச்சின் ஹனீபா, இன்னொசெண்ட், ஸ்ரீனிவாசன், ரவிக்குமார் என்று மலையாளத் திரையுலகைச் சேர்ந்த சிறப்புமிக்க கலைஞர்களையும் நிறைத்திருந்தது ‘லேசா லேசா’.

ஹாரிஸின் மெலடி மெட்டுகள் இன்றும் நம்மை வசீகரிக்கும். அனைத்துக்கும் மேலாக, சில உலகப்படங்களின் தாக்கத்தில் ஒவ்வொரு பிரேமையும் செதுக்க முயற்சித்திருப்பார் திரு. அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரு கலவையான விமர்சனத்தைப் பெற்றதனால், போதுமான கவனிப்பைப் பெறாமல் போனது ‘லேசா லேசா’. ஆனாலும், த்ரிஷாவின் தீவிர ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இன்றளவும் முதலிடத்தைப் பிடிக்கிறது ‘லேசா லேசா’வில் இடம்பெற்றிருக்கும் அவரது அறிமுகப் பாடல்!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
