தமிழ்நாட்டில் புதிதாக 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றுமுதல் சட்டப்பேரவை இருவேளையும் நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் இன்று(செப்டம்பர் 8) கேள்வி நேரத்தின் போது கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், கிணத்துக்கடவு தொகுதியில் ஒரு கலை, அறிவியல் கல்லூரியை தொடங்க தமிழ்நாடு அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கிணத்துக்கடவு தொகுதியில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை. பெரும்பாலும் எல்லா சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் இது போன்ற விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர்,
”தமிழ்நாட்டில் இந்தாண்டு 21 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.உயர்கல்வித்துறை சார்பில் 10 கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவுத்துறை சார்பில் 1 கல்லூரியும் என மொத்தம் 21 கல்லூரிகள் தொடங்கப்படும்” என்று கூறினார்.
முன்னதாக 2021-22ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் 25 சதவீதம் கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
