2026 சட்டமன்ற தேர்தலில் மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 1952-ல் சுயேட்சையும் 1957-ல் காங்கிரஸும் வென்றது. 1962-ம் ஆண்டு முதல் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களே வென்று வருகின்றனர்.
1989-ல் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற பொன்முடி, 1991-ல் தோல்வி அடைந்தார். ஆனால் 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் இத்தொகுதியில் தொடர்ந்து பொன்முடி ’ஹாட்ரிக்’ வெற்றி பெற்றார்.
2011-ல் அதிமுகவின் சி.வி சண்முகத்திடம் பொன்முடி தோல்வி அடைந்தார். 2016 தேர்தலிலும் சிவி சண்முகம் வென்றார்.
2021-ம் ஆண்டு தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் சி.வி சண்முகம் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இது அதிமுகவினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இதனால் சி.வி சண்முகத்துக்கு மாநிலங்களவை எம்பி பதவி தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2026 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் இருந்து மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு மாறுவதற்கு சி.வி.சண்முகம் முடிவு செய்துள்ளார். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மயிலம் தொகுதியில் போட்டியிட நேற்று விருப்ப மனு கொடுத்தார் சி.வி.சண்முகம்.
இது தொடர்பாக அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், 2021 தேர்தலில் அமைச்சராக இருந்த சி.வி சண்முகம் விழுப்புரத்தில் போட்டியிட்டார். ஆனால் அப்போது, சி.வி சண்முகம் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை எடப்பாடி பழனிசாமியால் அப்போது நம்பவும் முடியவில்லை. ”ஒரு அமைச்சராக இருக்கக் கூடிய சீனியர்.. வன்னியர் சமூகத்துக்கு 10.5% இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம்.. அப்படியான நிலையில் வன்னியர் பெல்ட்டில் சி.வி சண்முகம் தோற்பார் என்பது நம்ப முடியலையே” எனவும் எடப்பாடி கூறியிருந்தார்.
அதே நேரத்தில் சி.வி சண்முகத்திடமும் உளவுத்துறையின் எச்சரிக்கையை தெரிவித்திருந்தார் எடப்பாடி. ஆனால், ”தாம் அதிகமாக வாக்கு எண்ணிக்கையில் ஜெயிப்பது உறுதி; விழுப்புரத்தில் ஹாட்ரிக் வெற்றி பெறுவேன் “ என நம்பிக்கையோடு இருந்தார் சி.வி சண்முகம். உளவுத்துறை எச்சரித்தபடியே திமுகவின் லட்சுமணனிடம் படுதோல்வி அடைந்தார் சி.வி சண்முகம். அவரது இந்த தோல்வி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சீனியர்களை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால்தான் இம்முறை மயிலம் தொகுதிக்கு மாற முடிவு செய்துள்ளார்” என்கின்றனர்.
மயிலம் சட்டமன்ற தொகுதி 2011-ல் உருவாக்கப்பட்டது. இதுவரை 3 தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. 2011-ல் அதிமுகவின் கேபி நாகராஜன், 2016-ல் திமுகவின் மாசிலாமணி, 2021-ல் பாமகவின் சிவக்குமார் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
