“கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது (தேமுதிக) நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்” என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது. தேமுதிக 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் தற்போதுதான் முதல் முறையாக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
Dravidian Model ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
