இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வில் (நீட்) முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் அகில இந்திய ரேங்க் 1 மதிப்பெண் பெற்றவர்களில் ஆறு பேர் ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் வரிசை எண்கள் ஒரே மாதிரி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரே மையத்தில் இருந்து 720-க்கு 720 மதிப்பெண்கள் பெறுவது நீட் தேர்வுத் தாள் கசிந்திருப்பதைக் காட்டுகிறது என்றும் இதுகுறித்து தேசிய தேர்வு முகமை விரிவான ஆய்வு செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுத்துள்ளது.
நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தோ்வு மையங்களில் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இதில், 23.33 லட்சம் பேர் பங்கேற்றனா்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் இணையப் பக்கத்தில் ஜூன் 4 அன்று வெளியானது.
நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வு வரலாற்றிலேயே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இத்தகைய சிறப்பிடங்களைப் பெறுவது இதுவே முதல்முறை.
அதேபோன்று இதுவரை இல்லாத வகையில் நிகழாண்டு நீட் தேர்வு எழுதிய 1.52 லட்சம் தமிழக மாணவர்களில், 89,426 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நிகழாண்டில் அதிக மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதால் கட்-ஆஃப் மதிப்பெண்ணும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வில் (நீட்) முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் ஆறு பேர் ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சக மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் மாணவர்களிடையே சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இரண்டாம் இடம், மூன்றாம் இடங்களை பிடித்த மாணவர்களும் 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதால் சக மாணவர்களிடையே சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். ஆனால், கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இப்படி மதிப்பெண்கள் பெறுவது நீட் தேர்வுத் தாள் கசிந்திருப்பதைக் காட்டுகிறது என்று கூறும் ஆர்வலர்கள், கவுன்சிலிங் தொடங்கும் முன், முரண்பாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமை விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்று கோருகின்றனர்.
வினாத்தாள் கசிவுகள், கடைசி நிமிட கருணை மதிப்பெண்கள் மற்றும் 2024-ம் ஆண்டுக்கான நீட் முடிவுகளில் உள்ள தவறான தகவல்கள் காரணமாக, மருத்துவ விண்ணப்பதாரர்களில் கணிசமான பகுதியினர் நீட் தேர்வை மீண்டும் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் பற்றிய எந்த வதந்திகளையும் தேசிய தேர்வு முகமை கடுமையாக மறுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் தவறான தேர்வுத் தாள்கள் குறித்து பரவும் ஆதாரமற்ற வதந்திகளை தேசிய தேர்வு முகமை புறக்கணித்துள்ளது. இந்த அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தேர்வு நடைமுறை பாதுகாப்பாகவும், பாரபட்சமற்றதாகவும் இருந்தது என்றும் என்.டி.ஏ கூறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் ராகுல்காந்தி வழக்கு வரை!
கிச்சன் கீர்த்தனா : மாங்காய் அடை
டிஜிட்டல் திண்ணை: அதிமுக கூட்டணி… அண்ணாமலைக்கு எதிராக வெடிக்கும் தமிழிசை- அமித் ஷா கொடுத்த சிக்னல்!