2023 புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

Published On:

| By Selvam

உலகம் முழுவதும் இன்று (ஜனவரி 1) 2023-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: இந்தியா மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2023-ஆம் ஆண்டு நம் வாழ்வில் புதிய உத்வேகங்கள், இலக்குகள் மற்றும் சாதனைகளை கொண்டு வரட்டும். தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிக்க உறுதியேற்போம்.

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி: 2023-ஆம் ஆண்டை சிறப்பாக கொண்டாடுங்கள். இந்த புத்தாண்டு நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவரும் ஆரோக்கியத்துடன் நலம்பெற வேண்டும்.

2023 new year pm modi wishes

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: நமது தேசத்தின் அமுதகால பயணத்தில் உலக நாடுகளின் விஸ்வ குரு நிலையை அடைய மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் கைகோர்ப்போம். புத்தாண்டு-2023 நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும்

ADVERTISEMENT

தமிழக முதல்வர் ஸ்டாலின்: ஆண்டொன்று போனால் – வயதொன்று கூடும் என்று வாழ்வதல்ல வாழ்க்கை. ஆண்டொன்று போனால் – வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வதுதான் வாழ்க்கை.

அந்த வகையில், கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது.

ADVERTISEMENT

அதற்கு, முந்தைய ஆண்டுகளில் நம்முடைய மாநிலம் சந்தித்த மந்த நிலையை நாம் மாற்றிக் காட்டினோம். மக்கள் வாழ்வு மீண்டும் வளம் பெறத் துவங்கியது.

இப்போது 2023ஆம் ஆண்டில் உங்கள் ஒவ்வொருத்தருடைய சமூக – பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, நானும் நமது அரசும் தொடர்ந்து பாடுபடுவோம்.

2023 new year pm modi wishes

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: மலருகின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மலரும் புத்தாண்டில் அன்பும் அமைதியும் நிலைத்து அகத்தை சூழ்ந்திருக்கும் தீய எண்ணங்கள் நீங்கி, அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் இறைவனின் அருளோடு நீங்காத வளமும் நிறைவான நலமும் பெற்று உற்சாகமாக வாழ எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி: 2024 பொதுத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பிறக்கும் 2023-ம் ஆண்டு நம்பிக்கையூட்டும் ஆண்டாக அமையட்டும். மத்திய அரசின் மகத்தான திட்டங்கள், மாநிலத்தின் மூலை முடுக்கில் இருக்கும் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கட்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. இனி மலர்ப்பாதையில் தான் நாம் பயணிக்கப் போகிறோம். அதன் பயனாக 2023-ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

செல்வம்

கிச்சன் கீர்த்தனா: புத்தாண்டு முதல் ‘டயட்’டைக் கடைப்பிடிக்கப் போறீங்களா?

திமுக அணிகளின் பொறுப்பாளர்கள் இவர்கள்தான்!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share