மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

கோவை தோல்வி:திமுகவின் விசாரணை- மேலிடப் பொறுப்பாளர் யார்?

கோவை தோல்வி:திமுகவின் விசாரணை- மேலிடப் பொறுப்பாளர் யார்?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்குமண்டலம் திமுகவின் வீக் ஆன பகுதியாக மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொங்குமண்டலத்திலுள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 50 சட்டமன்றத் தொகுதிகளில் 33 தொகுதிகளில் அதிமுகவும் 17 தொகுதிகளில் திமுகவும் வென்றன.

அதுவும் குறிப்பாக சேலத்தில் 11 தொகுதிகளில் 10 ல் அதிமுகவே வென்றது. அதுபோல கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் பத்துக்குப் பத்து அதிமுக பெற்று திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பத்து சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.

இதில் திமுக கூட்டணியில் கோவை தெற்கு, சூலூர், வால்பாறை ஆகிய தொகுதிகள் காங்கிரஸ், கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. மீதி ஏழு தொகுதிகளில் சிங்காநல்லூர் தொகுதியில் 'சிட்டிங்' எம்எல்ஏவும், மாவட்டப் பொறுப்பாளருமான நா.கார்த்திக் நின்றார். கோவை வடக்குத் தொகுதிக்கு வடவள்ளி பகுதி கட்சி நிர்வாகி வ.மா.சண்முகசுந்தரம், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மாவட்டப் பொறுப்பாளர் பையாகவுண்டரும், கிணத்துக்கடவு தொகுதியில் குறிச்சி பிரபாகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.சண்முகசுந்தரம், அமைச்சராக இருந்த வேலுமணியை எதிர்த்து தொண்டாமுத்தூரில் திமுகவின் சுற்றுச் சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி நின்றார். பொள்ளாச்சித் தொகுதிக்கு மருத்துவர் வரதராஜன் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கோவையில் பத்துக்குப் பத்து தொகுதிகளும் திமுக கூட்டணி தோற்றுப்போனதற்கான காரணம் தேடி திமுக தலைமைக் கழக சட்டத்துறை ஆலோசகரும், ராஜ்யசபா உறுப்பினருமான என்.ஆர். இளங்கோவின் குழுவினரை கோவைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஸ்டாலின். அவர்கள் கோவையில் முகாமிட்டு திமுக நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் தெரியாமலேயே கோவை வாஷ் அவுட்டுக்கான காரணங்களை விசாரித்து அறிந்து வருகின்றனர்.

கோவை திமுகவில் வேலுமணியுடன் தொடர்பில் இருக்கும் திமுக நிர்வாகிகள் யார் யார், அதன் அடிப்படையில் தேர்தல் வேலைகள் செய்யாமல் இருந்தவர்கள் யார், உள்ளடி வேலைகள் செய்தவர்கள் யார், தலைமை கொடுத்த நிதியை முழுமையாகக் கொண்டு சேர்க்காதவர்கள் யார் யார் என்பது குறித்த முழு விவரங்களையும் திரட்டியுள்ள அந்தக் குழுவினர் ஜூன் 10 ஆம் தேதி வாக்கில் திமுக தலைவரிடம் தனது அறிக்கையை அளிப்பார்கள் என்று அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள். இதன் அடிப்படையில் கொங்கு மண்டலத்துக்கு குறிப்பாக கோவை மாவட்டத்துக்கு தலைமைக் கழகம் சார்பில் பொறுப்பாளர் நியமிக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

கோவை திமுக தொண்டர்கள் சிலர் நம்மிடம்,

“இந்த தேர்தலில் திமுக கோவையில் தோற்றதற்குக் காரணமே தொண்டர்களை மதிக்காத போக்குதான் குறிப்பாக மாவட்டப் பொறுப்பாளர்களான சி.ஆர். ராமச்சந்திரன், சேனாதிபதி, பையா கிருஷ்ணன் ஆகியோர் மீதுதான் கடுமையான புகார்கள் தலைமைக்குச் சென்றிருக்கின்றன. பத்துக்கு பத்து தொகுதிகளையும் இழந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

இங்கே வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் மாவட்டப் பொறுப்புகளிலும், பகுதிப் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். அவர்களை களையெடுக்க வேண்டும். பணத்தை வாங்கிக் கொண்டு பதவிகளை நிரப்பும் வழக்கம் கோவை திமுகவில் அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக வேலுமணிக்கு நெருக்கமானவர்களை திமுகவின் முக்கிய பதவிகளில் நிரப்பும் அளவுக்கு இங்கே பணம் விளையாடியிருக்கிறது.

வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுகவின் தேர்தல் வியூகம் பற்றி நடக்கும் கூட்டம் வேலுமணியின் அண்ணனுக்கு செல்போனிலேயே வீடியோ கால் மூலம் லைவ் செய்யப்படுகிறது. இதை செய்பவர் குனியமுத்தூரில் இருக்கும் முக்கியமான திமுக பொறுப்பாளர். இவரைப் போன்றவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு எப்படி திமுக ஜெயிக்கும்? அந்த நபருக்கு அந்த பொறுப்பைக் கொடுக்கக் கூடாது என்று அறிவாலயத்தில் 100 பேருக்கு மேல் அதற்கு முன்பாகவே புகார் கொடுத்தாகிவிட்டது. ஆனால், அறிவாலயத்தில் இருக்கும் முக்கிய அலுவலகப் புள்ளி ஒருவரை தங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பல மாவட்டச் செயலாளர்கள் தாங்கள் பணம் வாங்கிக்கொண்டு செய்யும் நியமனங்களை தலைவர் ஒப்புதலோடு முரசொலியில் அறிவிப்பாக வெளிவரச் செய்வதில் ’ஜெயம்’கண்டு விடுகிறார்கள்.

இப்படி அறிவாலயத்தில் தங்களுக்கு விருப்பமான நிர்வாகிகள் பட்டியல் ஒப்புதல் பெறப்பட்டு ஜெயமாக முரசொலியில் வந்துவிடுவதால் அந்த அறிவாலயப் புள்ளியின் அக்கவுன்ட்டில் லட்சங்களைக் கொட்டுகிறார்கள் மாசெக்கள். அறிவாலய பொறுப்பாளர்களின் அக்கவுண்டுகளையும், தேர்தல் கால வளர்ச்சிகளையும் திமுக தலைவர் சோதனை செய்தாலே கோவை மாவட்ட தோல்வியின் காரணம் தெரியும். தொண்டன் ஆஸ்துமா என்று ஓடிவந்தால் இரண்டாயிரம் ரூபாய் கொடுக்காதவர்கள் அறிவாலயத்தில் இருப்பவர்கள் கேட்டால் லட்சம் கொடுக்கிறார்கள். கோவை திமுகவை முழுதாகப் புரட்டிப் போடாமல் திமுக இங்கே வெற்றி பெற சாத்தியம் இல்லை” என்கிறார்கள்.

கோவையில் இருந்து இப்படிப்பட்ட தகவல்கள் தலைமைக்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில் கொங்கு மண்டலத்துக்கு ஒரு மேலிடப்பொறுப்பாளரும், குறிப்பாக கோவை மாவட்டத்துக்கு ஒரு மேலிடப் பொறுப்பாளரும் நியமிக்கலாமா என தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடந்து வருகிறது.

இதில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரது பெயர்கள் பொறுப்பாளர் பதவிக்கு கோவை உடன் பிறப்புகள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.

“திமுகவின் மகளிர் அணி செயலாளரும் மக்களவைத் திமுக துணைத் தலைவருமான கனிமொழி எம்பி தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற பின்னர் வெறும் தூத்துக்குடி தொகுதியோடு நின்றுவிடாமல் ஒட்டுமொத்த தென் மாவட்ட திமுகவிலும் முக்கிய நபராக உருவெடுத்துள்ளார். தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் என பலரும் கனிமொழியிடம் கட்சி விஷயங்களை கொண்டுசெல்கிறார்கள். உரிய முறையில் பேசி பிரச்சினைகளைத் தீர்த்து தென் மாவட்டங்களில் திமுகவை வலிமையாக மீண்டும் கட்டமைத்ததில் கனிமொழிக்கு முக்கியப் பங்கு உண்டு.

அதேநேரம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கனிமொழியை மேற்கு மண்டலத்தை நோக்கி ஸ்டாலின் தான் திருப்பிவிட்டார். ஸ்டாலினின் குரல் பிரச்சார இயக்கத்தை எடப்பாடியில் இருந்து தொடங்க கனிமொழி அனுப்பி வைக்கப்பட்டார். திருப்பூர், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் கனிமொழிக்கு அபரிமிதமான வரவேற்பு இருந்தது. இப்போதைய நிலவரப்படி கொங்கு பகுதியை சேர்ந்தவர் அல்லாத அதேநேரம் மாநில தலைமைக்கு நம்பகமான ஒரு புள்ளிதான் மேற்கு மண்டல பொறுப்பாளராக வர வேண்டும். அந்த வகையில் கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க வாய்ப்புகள் உள்ளன.

அதேநேரம் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் கோவை மீது கண் பதித்து வருகிறார். அண்மையில் கோவை சென்ற உதயநிதி ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களிடம்,’கோவையில் வேலுமணியை எதிர்த்து நானும் சவால்விட்டேன். தலைவரும் சவால் விட்டுட்டுப் போனாரு. ஆனா ஒரு தொகுதியையும் ஜெயிக்க முடியலையேனு ரொம்ப வருத்தத்துலயும் கோபத்துலயும் இருக்காரு. இங்க என்ன நடக்குது... எனக்கு சொல்லுங்க என்று ஆர்வத்தோடு கோவையின் கிரவுண்ட் ரியாலிட்டியை கேட்டுச் சென்றிருக்கிறார். கூடவே பாப்பநாயக்கன் பாளையத்தில் உதயநிதிக்கென தனியாக வீடும் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது கோவை மேலிடப் பொறுப்பாளராக தலைவருக்கு நம்பகமான கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் இருவரில் ஒருவர் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது” என்கிறார்கள் கோவை திமுக நிர்வாகிகள்.

-ஆரா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

ஞாயிறு 6 ஜுன் 2021