மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

எடப்பாடி இப்படி; பன்னீர் அப்படி: அதிமுக எப்படி?

எடப்பாடி இப்படி; பன்னீர் அப்படி: அதிமுக எப்படி?

தமிழகத்தில் 66 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக அமர்ந்திருக்கிறது. இந்நிலையில் புதிதாக அமைந்த திமுக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளில் அதிமுகவில் இருந்தே வெவ்வேறான கருத்துகளும், வெவ்வேறான நிலைப்பாடுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

சட்டமன்றத்தைப் பொறுத் தவரை அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலும்...கட்சி என்ற நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார். இரட்டைத் தலைமையாக இருவரும் இருந்தாலும் தேர்தலுக்கு முன்பு வரை இருவரும் கையெழுத்திட்ட கூட்டறிக்கைதான் அதிமுகவின் நிலைப்பாடாக அறிக்கை வடிவில் வெளிவரும்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்... அதுவும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்திலேயே இபிஎஸ், ஓபிஎஸ் இரு துருவங்களானார்கள். அதிமுகவின் தலைமைக் கழக இலச்சினையோடு அறிக்கை வெளியிடாமல்... ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் என்று ஓபிஎஸ் சும், இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் என்று இபிஎஸ் சும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டது இதன் அடுத்தகட்டமானது.

இதற்கு ஒரு படிமேலே போய் இப்போது திமுக அரசின் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டங்களில் ஓபிஎஸ் கலந்துகொள்ள, இபிஎஸ்சோ ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து தான் தனியாக ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.

இதற்கு இரு காட்சிகளை உதாரணமாகப் பார்க்கலாம்.

கடந்த 25 ஆம் தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சேலம் மாவட்ட கொரோனா தடுப்புப் பணிகளின் பொறுப்பாளராக முதல்வரால் நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் திமுகவின் சேலம் மாவட்ட ஒரே எம்.எல்.ஏ.வான சேலம் வடக்கு பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், சேலம் எம்பி பார்த்திபன், கள்ளக்குறிச்சி எம்பி கௌதம சிகாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி உட்பட சேலம் மாவட்டத்தில் இருக்கும் எட்டு எம்.எல்.ஏ.க்கள், இரு பாமக எம்.எல்.ஏ.க்கள் என பத்து பேரும் கலந்துகொள்ளவில்லை.

25 ஆம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தைத் தொடங்கிய செந்தில்பாலாஜி சுமார் 1.30 மணிக்கு முடித்தார். அதன் பின் மீண்டும் புள்ளிவிவரங்களில் சந்தேகம் இருக்கிறது என்று கூட்ட அரங்குக்குப் பக்கத்திலே இருக்கும் கலெக்டர் அறையில் முக்கிய அதிகாரிகளுடன் 1 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினார். ஒரு டீயை குடித்துவிட்டு காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை ஆலோசனை நடத்தினார் செந்தில்பாலாஜி.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செந்தில்பாலாஜி புறப்பட்டுச் சென்ற பதினைந்து நிமிடங்களில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சில கார்களில் வந்து கலெக்டர் அலுவலகத்தில் இறங்கினார்கள்.

“அதிமுக மற்றும் பாமக எம்.எல்.ஏ.க்களை காலையிலேயே சிலுவம்பாளையத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. செந்தில்பாலாஜி தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர் என்ற அவரது இமேஜ் இடம் கொடுக்கவில்லை. மேலும் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முறையான அழைப்பும் இல்லை. முதல் நாள் இரவு 11 மணிக்கு பி.ஆர். ஓ. அழைத்து நாளை ஆய்வுக் கூட்டம் நடக்க இருக்கிறது என்று கூறுகிறார். இப்படி முறையற்ற வகையில் அழைப்பு கொடுத்தால் எப்படி கலந்துகொள்வது?

அதனால்தான் சேலம் மாவட்டத்தில் இருக்கும் 9 எம்.எல்.ஏ.க்களையும் தன் வீட்டுக்கு வரவழைத்து கலெக்டருக்கு கொடுப்பதற்காக மனு ரெடி செய்து, மதியம் அனைவருக்கும் நாட்டுக்கோழி விருந்து வைத்துவிட்டு 3 மணியளவில் கலெக்டர் அலுவலகத்துக்கு கெத்தாக வந்திறங்கினார் எடப்பாடி. கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு அரசு மீது புகார்களை அடுக்கினார்”என்கிறார்கள் சேலம் அதிமுகவினர்.

அதிமுகவின் நிலைப்பாடு சேலத்தில் இப்படி இருக்க தேனியிலோ மாறியது.

மே 26 ஆம் தேதி தேனி மாவட்ட கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அமைச்சரான ஐ.பெரியசாமி இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தேனி மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. மூன்று எம்.எல்.ஏ.க்கள் திமுகவினர். ஒருவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம்.

கூட்டம் தொடங்கியபோதே அங்கே சென்ற ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர் ஐ.பெரியசாமியோடு சிரித்துப் பேசி தனது ஆலோசனைகளையும் கூட்டத்தில் எடுத்து வைத்தார். இது அமைச்சர் ஐ.பெரியசாமிக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்ல...மே 27 ஆம் தேதி தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்திலும் ஓ.பன்னீர் செல்வம், தனது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்துடன் கலந்துகொண்டார். அப்போது மா.சுப்பிரமணியத்திடம், ‘சுறுசுறுப்பாக செயல்படுகிறீர்கள். வாழ்த்துகள்’என்றும் நேருக்கு நேர் சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

இப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் தமிழக அரசின் கொரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடியோ அரசு நடத்தும் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்து தானே தனியாக நடத்துகிறார். அரசு மீதும் அதிரடியான குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் குழம்பியிருக்கிறார்கள். “அதிமுகவுக்குள் இன்னும் ஒரு தெளிவில்லை. இவர் சேலத்திலும், அவர் தேனியிலுமாக இருந்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். மாநில அளவிலான அரசியலை கட்சியை அடையாளப்படுத்தி அதிமுகவில் யாரும் செய்யவில்லை” என்று புலம்புகிறார்கள் அதிமுக சீனியர்கள்.

-ராகவேந்திரா ஆரா

..

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

சனி 29 மே 2021