மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

10 சதவிகித இட ஒதுக்கீடு: தமிழக அரசின் முடிவு என்ன?

10 சதவிகித இட ஒதுக்கீடு: தமிழக அரசின் முடிவு என்ன?

10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு கடந்த ஆண்டு சட்டம் கொண்டுவந்தது. 8 லட்சம் ரூபாய்க்குக் குறைந்த வருமானம் கொண்டவர்கள் இட ஒதுக்கீடு சலுகையைப் பெற தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகநீதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டுமென தவிர, பொருளாதார அடிப்படையில் இருக்கக் கூடாது என இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் அகில பாரத பிராமணர் சங்கத்தின் தலைவர் குளத்துமணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், “10 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற சம்பந்தப்பட்ட பகுதிக்குட்பட்ட தாசில்தாரிடமிருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். எவ்வித காரணங்களையும் கூறாமல் வழங்கப்பட்ட இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு நேற்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சான்றிதழ் வழங்கக் கூடாது எனப் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளோம். இந்தச் சான்றிதழ்கள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் வேலை வாய்ப்புக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்ற தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், “மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமே இந்தச் சான்றிதழ்களைப் பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்தச் சான்றிதழ்களைப் பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தமிழகத்தில் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பிற மாநிலங்களில் பயன்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலங்கள்தாம் முடிவு செய்ய முடியும்” எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில், 10 சதவிகிதம் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினால் அது தமிழக மக்களின் உரிமையை பாதிக்கும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

4 நிமிட வாசிப்பு

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ...

3 நிமிட வாசிப்பு

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

வெள்ளி 31 ஜூலை 2020