மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 ஏப் 2020

உலகம் அழியும் காலம் நெருங்கிவிட்டதா?

உலகம் அழியும் காலம் நெருங்கிவிட்டதா?

சத்குரு ஜகி வாசுதேவ்

கொரோனா பற்றிய கேள்விகளும் சத்குருவின் பதிலும்

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர் வைரஸான கொரோனா, உலகம் முழுவதும் மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. சவாலான இந்த நேரத்தில் நாம் என்ன செய்வது என்று திகைத்து நிற்கையில், நமக்கு தெளிவையும், நம்பிக்கையும் ஊட்டும் விதமாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தினமும் மாலை 6 மணிக்கு யூ – டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

அந்த வகையில் மார்ச் 22-ம் தேதி நடந்த நேரலையில் கேட்கப்பட்ட 2 கேள்விகளும் அதற்கு சத்குரு அளித்த பதில்களும் இதோ உங்களுக்காக..

கேள்வி: “இது முன்பு எப்போதும் பார்த்திராத ஒரு சூழ்நிலை. எல்லாரும் இந்த சமயத்தில் என்ன செய்வது என புரியாமல் இருக்கிறோம்.. நம் தேசத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இப்படிதான் இருக்கிறோம். உலகம் அழியும் காலம் நெருங்கிவிட்டது என நினைக்கிறீங்களா?

சத்குரு

ஒருமுறை இப்படி நடந்தது. இரண்டு பாதிரியார்கள், “முடிவு நெருங்கிவிட்டது” என்று எழுதியிருந்த ஒரு பதாகையை பிடித்தபடி சாலையில் நின்று கொண்டிருந்தார்கள். அந்த வழியே கார் ஓட்டி வந்த ஒருவர், அவர்கள் கையிலிருந்த தகவல் பதாகையை பார்த்ததும், வேகத்தை குறைத்து, ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி, “நீங்க மதப் பைத்தியம் பிடிச்சவங்க!” என்று சத்தமிட்டார். வேறு ஏதேதோ வார்த்தைகளையும் காற்றில் இறைத்துவிட்டு, மீண்டும் தன் வேகத்தை கூட்டினார்.

ஒரு சில விநாடிகளுக்கு பிறகு, பிரேக் பிடித்து நிற்க முடியாமல் டயர் உராயும் சத்தமும், கார் கீழே விழும் பலத்த சத்தமும் கேட்டது. அங்கே பதாகையை பிடித்திருந்த பாதிரியார்களில் ஒருவர் மற்றவரிடம், " நாம் பதாகையில் 'பாலம் உடைந்திருக்கிறது' என்று மட்டும் எழுதியிருந்தாலே போதும் என நினைக்கறேன்..” என்றார்.

எனவே இந்த சூழ்நிலையில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். இது கடந்துபோகும் என்று நாம் சொல்கிறோம். ஆனால் “முடிவு நெருங்கிவிட்டது” என்று நீங்கள் சொல்ல விரும்பினால்.. இல்லை, முடிவு ஒன்றும் நெருங்கி வரவில்லை.

உலகின் மக்கள்தொகை முழுவதும் அழிந்துவிடப் போவதில்லை. ஆனால் இது முடிவதற்குள், ஒரு தலைமுறையை சேர்ந்த மக்களாக நாம் அனைவரும் கரம் கோர்த்து நின்று, இந்த சவாலான சூழ்நிலையை நல்லவிதமாக கடந்துவந்தோம் எனும் நிறைவை பெறலாம். அல்லது நாம் செய்த பொறுப்பற்ற செயல்களால் பல விலைமதிப்பில்லாத உயிர்களை இழக்க நேர்ந்ததே என்று வெட்கத்துடன் தலைகுனியலாம். இரண்டில் ஒன்று உறுதியாக நடக்கும். ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது உங்கள் கையில் இருக்கிறது.

இந்த 12 மாத காலத்தை கடந்ததும், நீங்கள் வெட்கத்துடன் தலைகுனியலாம், அல்லது ஒரு தலைமுறையை சேர்ந்தவர்களாக, மனிதகுலத்துக்கு குறைந்தபட்ச இழப்புகளுடன் நாம் இதைத் தாண்டி பயணம் செய்திருக்கிறோம் என்று உங்கள் வாழ்க்கையில ஒருவித உறுதியோடும், தெளிவோடும் நீங்கள் நடமாடலாம்.

இந்த ஒரு வாய்ப்பு நிச்சயமாக உங்களிடம்தான் இருக்கிறது. அப்படி ஆகலாம், அல்லது இப்படி ஆகலாம். – நம்மால், 12 மாதங்களுக்குப் பிறகு தலைநிமிர்ந்து நடக்க முடிய வேண்டும். இதுதான் என்னுடைய ஆசையும் ஆசியும் நாம் இதனை நிகழச் செய்வோம்.

கேள்வி: என்னுடைய அப்பா ஒரு மருத்துவர், அவருக்கு தற்போது 68 வயது. அவர் தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதும் எனக்குப் புரிகிறது, ஆனால் ஒரு மகளாக அவருடைய ஆரோக்கியத்தைப் பற்றியும் எனக்கு மிக பயமாக இருக்கிறது. இந்த பயத்தை எப்படி தாண்டி வருவது என்று எனக்கு வழிகாட்டுங்கள்.

சத்குரு

இந்த சூழ்நிலையில், ஒரு மருத்துவராக இருப்பது என்பது, ஒரு தந்தையாகவோ, மகளாகவோ இருப்பதைவிட மிக முக்கியமானது. அதனால் மகளுடைய கவலையைத் தாண்டி, மருத்துவருடைய கடமை தலையாயதாக இருக்கட்டும். உங்களுடைய அக்கறையை நான் பாராட்டுகிறேன், மதிக்கிறேன். ஆனால் நாம் எல்லாருமே நம்மால் என்ன முடியுமோ, அதை செய்வதற்காக எழுந்து நிற்க வேண்டியது இப்போது மிக முக்கியமாகிறது.

மருத்துவ ஊழியர்கள் எல்லாருக்குமே இந்த நோய்த்தொற்று ஏற்படும், அல்லது இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று இல்லை. அவர்களுக்கு போதிய கவனம் கொடுக்கப்பட வேண்டும். இந்த கவனம் மருத்துவ ஊழியர்கள் பக்கம் மட்டுமின்றி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் மற்றவர்களும், எப்படி நடந்து கொள்கிறார்கள், எப்படி செயல்படுகிறார்கள் என்பதும் முக்கியம்.

“எனக்கு நோய்த்தொற்று இருக்குமோ?” எனும் பயத்தில் உங்கள் மருத்துவரை நீங்கள் விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருக்க வேண்டியதில்லை. இந்த சூழ்நிலையில் எல்லாருமே பொறுப்பாக நடந்து கொள்வது முக்கியம். குறிப்பாக இங்கே நமக்காக சேவை செய்வதற்காக இருப்பவர்களுக்கு, அவர்கள் வாழ்க்கைக்கு நாம் பாதிப்பு உருவாக்கக்கூடாது. இது ஒவ்வொரு குடிமகனுடைய பொறுப்பு – அதாவது நீங்கள் பொறுப்பில்லாமல் நடந்து, அதனால் நமக்கு சேவை செய்வதற்காக இருக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு இந்த நோய்த்தொற்றை கொடுத்து விடக்கூடாது.

சவாலான நேரத்தில் சத்குருவுடன் நேரலை ஒளிபரப்பு, சத்குரு தமிழ் யூ டியுப் சேனல், சத்குரு முகநூல் பக்கம் மற்றும் சத்குரு செயலியில் தினமும் மாலை 6 மணியில் இருந்து 6:40 வரை ஒளிபரப்பாகிறது.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

சனி 4 ஏப் 2020