2020 டெல்லி வன்முறை வழக்கு: உமர் காலித் ஜாமீன் மறுப்பு! உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

Published On:

| By Mathi

Umar Khalid

2020-ம் ஆண்டு டெல்லி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜே.என்.யூ. முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 5) ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 2020-ல் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அப்போது டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறின.

ADVERTISEMENT

இந்த வன்முறை தொடர்பாக டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த உமர் காலித், ஷர்ஜில் ஜிமாம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் உமர் காலித் உள்ளிட்டோருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் உமர் காலித் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் தர மறுத்தது உச்சநீதிமன்றம். அதே நேரத்தில், இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய ஐந்து பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ADVERTISEMENT

மேலும், “ UAPA எனப்படும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு அரசியல் சாசனப் பிரிவு 21ன் கீழ் அடிப்படை உரிமைகளை பெற தகுதி இல்லை” எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன், “உமர் காலித், ஷர்ஜில் இமாம் அனுபவித்து வரும் சிறைவாசம், விசாரணைக்கு முந்தையது; இது தண்டனை கிடையாது” என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதனால் 5 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் உமர் காலித், ஷர்ஜில் இமாம் இருவரும் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கும் நிலை உருவாகி உள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, உமர் காலித் அண்மையில், தனது சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக 2025 டிசம்பர் 16 முதல் டிசம்பர் 29 வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்ததும் அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பிய நிலையில், நிரந்தர ஜாமீன் கோரிய அவரது மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. சர்வதேச அளவில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றும் அவருக்கு ஜாமீன் வழங்க இந்தியாவுக்கு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share