மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 செப் 2019

டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாத துணை முதல்வர்கள்!

டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாத துணை முதல்வர்கள்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஐந்து நாட்கள் ஆகின்றன. ஏற்கனவே தனது முதல்வர் பதவிக்கான பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைப்பதில்லை என்ற முடிவோடுதான் எடப்பாடி விமானம் ஏறியிருக்கிறார். அதுபோலவே யாரிடமும் பொறுப்புகள் கொடுக்கப்படாத நிலையில், தமிழகத்தில் நடக்கும் அரசு ரீதியான, அரசியல் ரீதியான விவரங்களைத் தொடர்ந்து இரு அமைச்சர்களிடம் அலைபேசி செய்து விசாரித்துக் கொள்கிறார் முதல்வர்.

அந்த இரு அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர்தான். அங்குள்ள நேரத்துக்கும் இந்திய நேரத்துக்கும் தோதான ஒரு பொழுதில் அவ்வப்போது வேலுமணியிடமும், தங்கமணியிடமும் போனில் பேசும் முதல்வர், துறை ரீதியான விவரங்களையும், தமிழகத்தின் அன்றாட நடப்புகளையும் கேட்டு தெரிந்துகொள்கிறார். பொதுவாகவே கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அமைச்சர் வேலுமணி வசிக்கும் ரோஜா இல்லம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் இருந்தபோதும்கூட ரோஜா இல்லத்தில் அமைச்சர் வேலுமணியைத் தேடி பல எம்.எல்.ஏ.க்கள் வந்து விடுவார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் வைக்கவேண்டிய அரசுரீதியான, கட்சிரீதியான கோரிக்கைகளை வேலுமணியிடம்தான் வைப்பார்கள் என்பது அதிமுக உயர்மட்டத்தில் பலருக்கும் தெரிந்ததுதான்.

இந்த நிலையில் முதல்வர் வெளிநாட்டில் இருக்கிற சூழலில் கொங்கு மண்டலம் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர்களும்கூட வேலுமணியைத்தான் தொடர்புகொள்கிறார்கள்.

வெளிநாட்டுக்குப் புறப்படும் முன்பே அமைச்சர் வேலுமணிக்கென சில பொறுப்புகளும் அமைச்சர் தங்கமணிக்கென சில பொறுப்புகளும் பகிர்ந்து கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதன்படியே இருவரிடமும் அவ்வப்போது விசாரித்து நிலைமைகளைத் தெரிந்துகொள்கிறார்.

வெளிப்படையாக முதல்வர் பொறுப்புகள் இன்னாருக்கு அறிவிக்க வேண்டி வந்தால், தானாக துணை முதல்வர் பன்னீருக்குத்தான் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால்தான் அதிகாரபூர்வமாக பொறுப்புகளை அறிவிக்காமல், அதிகாரபூர்வமற்ற முறையில் அந்த இரு அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமியின் பிரதிநிதிகளாக இப்போது செயல்பட்டு வருகிறார்கள்.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இது நன்றாகவே தெரிந்திருக்கிறது. கடந்த வாரம் தேனியில் சட்டக் கல்லூரி திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தோடு கலந்துகொண்டவர் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் மட்டும்தான். இதே நாளில் வேலுமணி மதுரையில்தான் முகாமிட்டிருந்தார். மழைநீர் சேகரிப்பு, குடிநீர் மராமத்து பணி ஆய்வுகளுக்காக மதுரையிலிருந்த வேலுமணி, அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோரோடு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். ஆனால், இந்த அமைச்சர்கள் யாருமே அருகில் இருக்கும் தேனி சட்டக் கல்லூரி திறப்பு விழாவுக்குச் செல்லவில்லை.

தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளும் சட்டக் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல், மதுரையில் வேலுமணியோடு அக்கம்பக்கத்து மாவட்ட அமைச்சர்கள் இருந்தார்கள் என்றால், உண்மையான துணை முதல்வர் யார் என்று தெரிகிறதா என்று கேட்கிறார்கள் மதுரை அதிமுகவினர். எடப்பாடி சொல்லித்தான் இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று பன்னீர்செல்வம் தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார்.

அறிவிக்கப்பட்ட துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமாக இருந்தாலும் அறிவிக்கப்படாத துணை முதல்வர்களாக இருப்பது வேலுமணியும், தங்கமணியும்தான்” மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!


லண்டன் பறந்த தனுஷ் டீம்!


ஆளுநர் தமிழிசை: அடுத்த பாஜக தலைவர் யார்?


சதாசிவம் இனி ஆளுநர் இல்லை: எடப்பாடிக்கு இழப்பா?


லண்டன்: உடையும் எடப்பாடியின் இரண்டாவது ஒப்பந்த மர்மம்!


கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

திங்கள் 2 செப் 2019