மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஆக 2019

டிஜிட்டல் திண்ணை: வேலூரில் எதிரொலித்த காஷ்மீர்

டிஜிட்டல் திண்ணை: வேலூரில் எதிரொலித்த காஷ்மீர்

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் வேலூர் காட்டியது.

“பொதுத் தேர்தலின் போது ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் இன்று (ஆகஸ்டு 5) ஒரு வழியாக நடந்து முடிந்திருக்கிறது. திமுக சார்பில் அதே கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் அதே ஏ.சி. சண்முகம் களம் காணும் வேலூர் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பித்தது. பிரச்சார நேரம் முடிந்ததும் வெளி மாவட்ட நிர்வாகிகள் வெளியேறிவிட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் வெளி மாவட்ட நிர்வாகிகள் ஆங்காங்கே இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருந்தனர்.

குடியாத்தம், கேவிகுப்பம் போன்ற பகுதிகள் ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால் திமுக, அதிமுகவைச் சேர்ந்த வெளியூர் நிர்வாகிகள் உள்ளே வருவதும் அவ்வப்போது ஆந்திரப் பகுதிக்கு சென்றுவிடுவதுமாக இருந்தனர். துரைமுருகனின் தம்பியும், வேட்பாளர் கதிர் ஆனந்தின் சித்தப்பாவுமான துரை சிங்காரம் பல வாக்குச்சாவடிகளுக்கு விசிட் அடித்து வாக்கு நிலவரம் என்ன ஏதென்று கேட்டறிந்து துரைமுருகனுக்கும் சொல்லிக் கொண்டிருந்தார்.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதிலிருந்தே இரு வேட்பாளர்களும் வாக்குப் பதிவு சதவிகிதத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். அதுவும் குறிப்பாக முஸ்லிம்கள், வன்னியர்கள் வாழும் பகுதிகளில் வாக்கு சதவிகிதம் எப்படி இருக்கிறது என்பதைதான் இரு கழகத்தினருமே உன்னிப்பாக கவனித்து வந்தனர்.

பொதுவாகவே காலை ஏழுமணி முதல் ஒன்பது வரையிலான இரண்டு மணி நேரத்தில்தான் கட்சிக்காரர்கள், ஒரு முடிவோடு வாக்களிக்கும் பொதுமக்கள் ஆகியோர் திரண்டு வந்து வாக்கு செலுத்துவார்கள். ஆனால் வேலூரில் இன்றைய காலைப் பொழுது அதற்கு நேர் மாறாக இருந்தது.

காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வாக்குப் பதிவு மிக மந்தமாகவே இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி சட்டமன்ற தொகுதி ரீதியாக வேலூர்- 8.75, அணைக்கட்டு 6.1%, கே.வி.குப்பம் 8.85, குடியாத்தம் 6.79, வாணியம்பாடி 6.29, ஆம்பூர் 7.67 ஆக மொத்தம் சராசரியாக 7.40% வாக்குகளே பதிவாகியிருந்தன. இது இரு கட்சிகளுக்குமே கொஞ்சம் குழப்பமாக இருந்தது. பெண்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மெதுவாகத்தான் வந்து வாக்களிப்பார்கள் என்று இரு கழகத்தினருமே நம்பிக்கை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த இரண்டு மணி நேரம் போனது. காலை 11 மணியளவில் கூட சராசரி வாக்குப் பதிவு சதவிகிதம் 14.61% ஆகவே இருந்தது. பின் மதியம் 1 மணிக்கு 30% கூட எட்டிப் பிடிக்கவில்லை வாக்குப் பதிவு.

காலை 7 மணிக்குத் தொடங்கி ஆறு மணி நேரம் கடந்து மதியம் 1 மணி ஆனபிறகும் கூட 30% முழுமையாக வாக்குப் பதிவாகவில்லை என்ற தகவல் கதிர் ஆனந்த், ஏ.சி. சண்முகம் இருவருக்குமே கொஞ்சம் கலக்கத்தைதான் ஏற்படுத்தியது. ஒருவேளை தேர்தலையே மக்கள் விரும்பவில்லையா அல்லது வாக்காளர்களுக்கு வாரி வழங்காததால் வாக்களிக்கும் சதவிகிதம் குறைந்துவிட்டதோ என்ற விவாதம் இரு கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பேசப்பட்டது.

இந்த நிலையில்தான் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கிடுகிடுவென வாக்குப் பதிவு சதவிகிதம் ஏறத் தொடங்கியது. வேலூர் 54.93%, அணைக்கட்டு 62.76%, கேவிகுப்பம் 55.52%, குடியாத்தம் 44.38%, வாணியம்பாடி 46.71%, ஆம்பூர் 50.86% என அடுத்த வாக்குப் பதிவு சதவிகிதம் உயரத் தொடங்கியது.

திமுகவினருக்கு அப்போதுதான் உயிரே வரத் தொடங்கியது. காரணம் சாரை சாரையாய முஸ்லிம் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தனர். பூத்துகளில் ஆய்வு நடத்திய இரு கட்சி நிர்வாகிகளிடம் பேசியதில் முக்கிய விஷயத்தை உடைத்தனர்.

மதியம் வரை மந்தமாகிக் கொண்டிருந்த வாக்குப் பதிவுக்குக் காரணமும் முஸ்லிம் வாக்காளர்கள்தான். மதியத்துக்குபின் சுறுசுறுப்பாக ஆனதற்கும் காரணமும் அவர்கள்தான். காரணம் காலை 11 மணிக்குதான் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப் பிரிவை நீக்கும் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். ஆங்கில மீடியாக்கள் மட்டுமல்ல தமிழ் மீடியாக்களிலும் 11 மணிக்கு மேல் இதுதான் பெரும் செய்தியாக பேசப்பட்டது. குறிப்பாக தமிழ் சேனல்களில் வேலூர் தேர்தலை விட காஷ்மீர் விவகாரம்தான் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.வேலூர் மக்களவைத் தொகுதியில் கணிசமான உருது பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் இந்த காஷ்மீர் பிரச்சினை தீவிரமாகப் பரவியது.

மதியத்துக்குப் பின் பலரது செல்போன்களிலும் இந்த செய்திகள் பகிரப்பட்டன. ஏற்கனவே பாஜக மீது அதிருப்திக்குள்ளாகியிருக்கும் முஸ்லிம்கள், காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு செய்ததை ஏற்கத் தயாராக இல்லை. மீடியாக்கள் வழியாக காஷ்மீர் விவகாரம் அதிகமாகப் பரவியதையடுத்து மதியத்துக்கு மேல் சாரை சாரையாக திரண்டு வாக்களிக்க ஆரம்பித்தனர். ஏற்கனவே முத்தலாக் பிரச்சினைக்கு ஓ.பி.ஆர். ஆதரவு அளித்ததால் அதிமுகவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. இப்போது தேர்தல் நாளும் அதுவுமாகவா அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே ஆதங்கப்பட்டுக் கொண்டனர். ஆக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு கடைசி நேரத்தில் வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தால் அது அமித் ஷாவின் காஷ்மீர் அறிவிப்பால்தான் இருக்கும் என்று திமுகவினரும் சொல்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது?


பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்


வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!


ரஜினிக்காக வருந்திய கமல்ஹாசன்


காஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி!


கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

திங்கள் 5 ஆக 2019