மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

நாங்கள் அதிமுகவின் தனிப் பிரிவு: எம்.எல்.ஏ.க்கள்!

நாங்கள் அதிமுகவின் தனிப் பிரிவு: எம்.எல்.ஏ.க்கள்!

சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் இன்று (மே 3) வழக்கு தொடர்ந்துள்ளனர். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருப்பதால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு அதிமுகவின் குறிப்பாக சி.வி.சண்முகத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவருவதாக நாம் டிஜிட்டல் திண்ணை பகுதியில் குறிப்பிட்டிருந்த நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக ரத்தினசபாபதி, கலைச்செல்வன் என இருவர் மட்டுமே செய்தியாளர்களை சந்தித்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தனர்.

ரத்தினசபாபதி கூறுகையில், “எங்கள் மூவரிடத்திலும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதனை படித்துக்கொண்டு இருக்கிறோம். அதுகுறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறோம். விரைவில் தக்க பதிலை சபாநாயகரிடத்தில் அளிக்கவுள்ளோம். இதற்கிடையே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக திமுக கடிதம் அளித்திருக்கிறது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் இருக்கும்போது, அவர் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் இருவரும் வழக்கு தொடர்ந்துள்ளோம். வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது” என்று தெரிவித்தார்.

நாங்கள் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருப்பவர்கள். ஜெயலலிதா தான் எங்களை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெற வைத்தவர். அதில் சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமையில்லை என்ற ரத்தினசபாபதி,

“சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்து அதனை முறியடித்தவர்கள் நாங்கள் மூவரும். ஆனால் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார்கள். ஆட்சியைக் கலைக்க நினைத்தவர்களுக்கு துணை முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் உள்ளிட்ட பரிசுகளை அளித்திருக்கிறார்கள். ஆட்சி நீடிக்க வேண்டும் என நினைத்த எங்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை பரிசாக வழங்கியிருக்கிறார்கள். கூடிய விரைவில் நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்” என்று விமர்சித்தார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்ச நீதிமன்றத்தை நாடவில்லையே என்ற கேள்விக்கு, “அவர் நாடாவிட்டாலும் அவருக்கும் சேர்த்துதான் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் ஊரில் இருந்து மக்கள் பணியாற்றி வருகிறார்” என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கலைச்செல்வன், “அதிமுகவுடைய மற்றொரு பிரிவுதான் சசிகலா என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருக்கிறது. அதனால் அமமுகவில் இருந்தோம். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அமமுகவை கட்சியாகப் பதிவு செய்துவிட்டனர். அந்த நிகழ்ச்சிகள் எதிலும் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.

பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்திலும் கையெழுத்திடவில்லை. அமமுகவில் நாங்கள் உறுப்பினராகவும் இல்லை. எங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இருக்கிறது. நாங்கள் அதிமுகவில்தான் இருக்கிறோம். பன்னீர்செல்வம்-பழனிசாமி கையெழுத்திட்டுத் தான் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளரானார். அவர் தொடர வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை” என்று தெரிவித்தார்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

வெள்ளி 3 மே 2019