மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஏப் 2019

நகரத்தை ஏற்றுக்கொள்ளுதல்!

நகரத்தை ஏற்றுக்கொள்ளுதல்!

ஒரு கப் காபி!

நகரத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்பது சுதந்திர காலத்துக்குப் பின் பெரும்பான்மையான மக்கள் சந்திக்கும், கடக்கும், கடந்து கொண்டிருக்கும் ஒரு வாழ்வியல் நிகழ்ச்சி.

நகரத்தை அடைந்தால் கனவுகளை அடையலாம் எனும் நவீன பழைமைவாதம் தளர்ச்சி அடைந்தாலும், இன்னும் அது முற்றிலுமாக மாறவில்லை. சினிமாவில் உதவி இயக்குநராகச் சேர முற்படுகையில், படத்திற்கான முதலீடுகளைப் பெறுவதில் சென்னை போன்ற பெருநகரங்கள் நோக்கிதான் வழித்தடம் விரிகிறது. நகரம் என்னை அனுமதித்தாலும் நகரத்தை அவ்வளவு எளிதாக எனக்குள் அனுமதிக்க முடியவில்லை.

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஒரு சிறு டவுன் பகுதிதான். டவுன் என்றாலும் கிராமங்கள் ஐந்து கிலோமீட்டருக்கும் குறைவுதான். காலேஜ் ட்ரிப், நண்பர்களுடன் பயணம் என அவ்வப்போது சென்னை வந்து சென்றாலும் இரண்டு நாட்களுக்குள் உள்ளிருந்து ஏதோ ஒன்று ஊருக்குத் தள்ளிவிடும். சென்னையை எனது வாழ்விடமாக ஏற்றுக்கொள்வது என் உடன்பாடில்லாமலே இயல்பாக நடைபெறத் தொடங்கியது.

ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வதற்குள், வெளியே கிளம்பியதற்கான காரணத்தையே நொந்துகொள்ளும் அளவுக்கு எண்ணவோட்டம் மாறுகிறது. ஒரு நாள் தொடங்குவதும் முடிவதும் சினிமாவில் வரும் டைம் லேப்ஸ் போல ஓடிக்கொண்டிருந்தது. வேகமாய் தண்ணீர் பருகத் தொடங்கினேன். யார் வாயிலோ அள்ளிப் போடுவது போல உணவு பருக்கைகள் உணர்வின்றி செலுத்தினேன். மூளைக்குள் குளிர் காற்று செலுத்தும் விஞ்ஞானமுண்டா என சிக்னல் காத்திருப்பு சமயங்களில் யோசிக்கவும் தொடங்கினேன்.

மர நிழலில் ஒதுங்கும்போதெல்லாம் ஊர் நிழல்தான் மனதில் கவிகிறது. தேநீர்க் கடைகளின் தொலைக்காட்சியில் ஓடும் பாடல்களில் வயல்களோ, ஆறுகளோ பார்த்தால் ஊருக்குக் கூப்பிட்டுப் பேச வேண்டும் என்னும் எண்ணம் தோன்றும்.

தீபாவளி முடிந்த ஒரு பின்னிரவில், மீண்டும் ஊருக்குச் சென்றுவிடலாமா இல்லை கொஞ்ச நாள் பார்ப்போமா என இரட்டை மனநிலையில் அலைந்துகொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில், ஒரு வடஇந்தியர் குழந்தையை வைத்துத் தள்ளும் ட்ராலி வண்டியில் தனது மகளை வைத்து தள்ளிக்கொண்டு டிராபிக்கைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தார். ஏழெட்டு வயதிருக்கும் அந்தச் சிறுமி அப்பாவின் சாகசத்தை வெகுவாக ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் கையில் அப்பா வாங்கிக் கொடுத்த எலெக்ட்ரிக் பலூன் கலர் கலராய் மின்னிக்கொண்டிருந்தது. அவர்கள் சாலையை எளிதாகக் கடந்து சென்றுவிட்டார்கள்.

சொந்த ஊர் எனவும் வந்த நகரம் எனவும் எதை வரையறுப்பது? இதே வடஇந்தியர்களை எனது ஊர் மில்களில், பென்சில் கம்பெனிகளில் டபுள் ஷிஃப்ட் வேலைகள் முடித்து திரும்புகையில் வாகனத்தில் கடக்கும்போதெல்லாம் பார்த்திருக்கிறேன். இரவில் அவர்கள் தங்கியிருக்கும் மண்டபத்திலிருந்து (பழைய சினிமா தியேட்டர் அது) டோலக்குகளில் மொழி தெரியாத அவர்களின் பாடல்களைக் கேட்டிருக்கிறேன்.

இப்போது எனக்கு அந்தப் பாடல்களின் மொழி புரியத் தொடங்குகிறது. உலகக் குடிமகன் (World citizen) என்ற ஆங்கிலப் பாடல் ரியுச்சி சகமாட்டோவும் டேவிட் சில்வியனும் இசையமைத்தது. அதன் வரிகள் மிகப் பிரபலமானவை. பேபல் திரைப்படத்தில் இந்தப் பாடலைப் பயன்படுத்தியிருப்பர்.

உலகக் குடிமகன்

உலகக் குடிமகன்

நான் இரவில் பயணிக்க விரும்புகிறேன்

கடற்பாசிகள் மற்றும் கடல்களுக்கு மேல்

நான் புரிந்துகொள்ள வேண்டும்

இதுவரை தொலைத்த அனைத்தின் இழப்பையும்

நான் அவர்களின் பெயர்களைச் சரியாக

உச்சரிக்க விரும்புகிறேன்

உலகக் குடிமகன்

உலகக் குடிமகன்

நான் ஏமாற்றம் அடையவில்லை.

- முகேஷ் சுப்ரமணியம்

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

வியாழன் 25 ஏப் 2019