மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

சிறப்புக் கட்டுரை: சாதி பெயரைச் சொல்லக் கூடாதா?

சிறப்புக் கட்டுரை: சாதி பெயரைச் சொல்லக் கூடாதா?

அ. குமரேசன்

திரைப்படங்களில் சாதிப் பிரச்சினை பற்றிய விவாதங்கள் வருகிறபோதெல்லாம் ஒரு கேள்வி நிச்சயமாகக் கேட்கப்படுகிறது. “ஒடுக்குமுறை, ஒடுக்குமுறை என்று சொல்கிறீர்களே... அப்படி ஒடுக்குகிற சாதிக்காரர்கள் யார் என்று படத்தில் காட்டுகிற தைரியம் ஏன் வரவில்லை?”

அப்படிக் கேட்கிறவர்களில் பலர் ஒதுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகிற ஏதோவொரு சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பது தற்செயலானதுதானா? “ஒடுக்கும் சாதியின் பெயரை ஏன் துணிச்சலாகச் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்” என்று கேட்பதை மொழிபெயர்த்தால், “எங்கே சொல்லித்தான் பாருங்களேன்” என்ற மிரட்டல் ஒலிக்கிறது.

ஒடுக்குகிற சாதி இதுதான் என்று திரைப்படத்தில் சொல்ல முடிகிற சூழல் இருக்கிறதா?அப்படியான சமூக மனநிலை வளர்க்கப்பட்டிருக்கிறதா? அப்படிச் சொல்கிற ஒரு படம் வருமானால் திரையரங்கம் என்னவாகும்? அந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு மட்டுமல்ல; பார்க்க வருகிறவர்களுக்கேகூட என்ன நடக்கும்?

பழைய படங்களிலாவது பிராமணர்களை அப்படிக் காட்ட முடிந்தது. பஞ்சகச்சம், குடுமி, மாமா மாமி, அவாள் இவாள் என்ற பேச்சு என அடையாளப்படுத்த முடிந்தது. (அதை வைத்து, பிராமணர்களை மட்டும் இழிவுபடுத்துகிறார்கள் என்று பேசியே அரசியல் செய்கிறவர்களும் கிளம்பினார்கள்.)

ஆனால், பிறப்பின் அடிப்படையில் ஒரு பகுதி மக்களைத் தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கி, தாழ்வான வேலைகளை அவர்களுக்கென்றே நூறு சதவிகிதம் ஒதுக்கீடு செய்து, பொது கோயில் முதல் தெருக் கடைகள் வரையில் நுழையவிடாமல் தடுத்து, கல்வி முதல் காதல் வரையில் வழிகளை மறுத்து, தெரிந்தோ தெரியாமலோ மீறுகிறபோதெல்லாம் அரிவாள்களைக் கையில் எடுத்து ஒடுக்குகிற சாதிகள் ஒன்றா, இரண்டா? அப்படியான சாதிகள் எந்த ஊரில் இல்லை?

பெயரைச் சொல்லியே ஒரு படம் துணிவோடு வருவதாக வைத்துக்கொள்வோம், தணிக்கை வாரியம் அதை அனுமதிப்பதாகவும் வைத்துக்கொள்வோம். அந்தப் படம் பற்றிய விமர்சனமாக மிரட்டல்களும் வன்முறைகளும் வராது என்றுகூட வைத்துக்கொள்வோம். ஒரு சாதிக்கு ஒரு படம் என்று எடுக்கத் தொடங்கினால் எத்தனை படங்கள் எடுக்க வேண்டியிருக்கும்?

மறப்பதும் மறைப்பதும்

தைரியம் உண்டா என்று கேட்கிறவர்கள் எதை மறக்கிறார்கள் அல்லது எதை மறைக்கிறார்கள் என்றால், ஒவ்வோர் ஊரிலும் ஒடுக்கப்படுகிற சாதி எது என்றும் சாதி எதிர்ப்புப் படங்கள் சொல்வதில்லை என்பதைத்தான். மிதித்து இழிவுபடுத்தப்படுகிற எல்லாப் பிரிவுகளையும் அந்தப் படங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஒடுக்கப்படுகிற ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் படம் பார்க்கிறபோது, பெயர் சொல்லப்படாவிட்டாலும், தன்னுடைய சமூக அடையாளத்தைப் பார்ப்பார். படத்தில் கதைக்களமாகக் காட்டப்படும் ஊரை வைத்தும் அந்தச் சமூகம் எதுவெனப் புரிந்துகொள்ளலாம். மற்ற ஊர்களில் உள்ள மற்ற ஒதுக்கப்பட்டோரும் தங்களுடைய குரல் ஒலிப்பதாக உணர்வார்கள்.

அந்தச் சாதித் தலைவர்களது சிலை, படம் என்ற அடையாளங்களைப் பின்னணியில் வைக்கிற இயக்குநர்களும் உண்டு. மற்ற ஊர்களில் உள்ள மற்ற சாதி ஆதிக்கவாதிகளும் தங்களுடைய ஆணவம் பிரதிபலிப்பதை உணர்வார்கள்.

சாதிகளின் பெயர்களைத் தாங்கிய படங்கள்

பிள்ளை, தேவர், கவுண்டர் என்று முடிகிற பெயர்களைக் கொண்ட படங்கள் வந்திருக்கின்றன. வேறு பெயர்களில் வந்த படங்களில் இந்தச் சாதி ஒட்டுகளுடன் நாயக நடிகர்கள் கம்பீரம் காட்டியிருக்கிறார்கள்.அவர்களது வீட்டுப் பெண்கள் பரம்பரை கௌரவம் பற்றிப் பேசுவதாகக் காட்சிகள் வந்துள்ளன. ‘எங்கள் தங்கராஜா’ உள்ளிட்ட அத்தகைய படங்களில் சிவாஜி கணேசன் நாயகப் பாத்திரமாகப் பங்கேற்றது தற்செயலானதுதானா? ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை முழங்கும் நாயகனின் எதிரியாக அந்தப் படங்களில் வந்து மோதுகிறவன் அதே சாதிக்காரனாகத்தான் இருப்பான் - ‘தேவர் மகன்’ கமல், நாசர் போல.

பாரதிராஜா இயக்கிய ‘வேதம் புதிது’ படத்தில் சத்யராஜ் ஏற்ற பாலுத்தேவர் கதாபாத்திரத்தைப் பார்த்து அந்த பிராமணச் சிறுவன், “தேவர் என்பது நீங்க படிச்சு வாங்கிய பட்டமா?” என்று கேட்பான். அந்தக் கேள்வியை ஒரு தலித் சிறுவன் கேட்பது போலக் கதையையும் காட்சியையும் அமைத்திருந்தால் எப்படிப்பட்ட எதிர்வினைகள் வந்திருக்கும் என்ற கற்பனை அன்றிலிருந்தே என் மனதுக்குள் உதறலை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டால்தான் சமூக ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, தகுதிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன என்று கூறும் படங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன. கே.பாலசந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ படம் இளைஞர்களின் தன்னம்பிக்கை பற்றிய கதையாக வந்து, அப்படியே சந்தடி சாக்கில் இட ஒதுக்கீடு கொள்கையைச் சாடியது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்த ஏ.ஆர்.முருகதாஸ் படமான ‘ஏழாம் அறிவு’ ஆங்கிலச் சந்த நயத்தோடு இட ஒதுக்கீடு நியாயத்தைக் கொச்சைப்படுத்தியது.

ஒடுக்கப்பட்டோர் பற்றிய படம் வந்திருக்கிறதா? முன்பு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த ‘நத்தையில் முத்து’ படத்தில், ஒரு மேல்தட்டுச் சாதிக் குடும்பத்து மருமகளாக வருகிற, கதாநாயகனின் காதலியான அடித்தட்டுச் சாதிப்பெண், தனது பழக்கவழக்கங்களால் எல்லோரையும் கவர்ந்து அவர்களின் அன்பைப் பெறுவதாகக் கதை சொல்லப்பட்டிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் பாலா இயக்கத்தில் வந்த ‘பரதேசி’ தேயிலைத் தோட்டச் சுரண்டல்களைக் காட்டியதோடு, மதமாற்ற முயற்சிகளைக் கொச்சைப்படுத்தியது. அதேவேளையில், அடிமைத் தொழிலாளர்களாகக் கடத்தப்பட்டவர்கள் கிராமங்களில் வெளியே தள்ளிவைக்கப்பட்ட மக்கள்தான் என்பதையும் நுட்பமாகச் சொன்னது.

‘அட்டகத்தி’ படத்தில் காட்சிப் பின்புலங்களின் மூலமாகவும் ‘மெட்ராஸ்’ படத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாயகப் பாத்திரங்கள் மூலமாகவும், கபாலி, காலா படங்களில் மேலும் ஒருபடி முன்னேறியும் தலித் வலிகளைப் பதிவு செய்தார் பா.இரஞ்சித். அவரது தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ மேலும் வெளிப்படையாக, வெற்றிகரமாக சாதி ஒடுக்குமுறை பற்றி மாரி செல்வராஜ் படமெடுக்க முடிந்திருக்கிறது. இந்த வெற்றிகளை அங்கீகரிக்க மறுக்கிறவர்களும், “ஆதிக்கச் சாதி எது என்று சொல்லாமல் நழுவுவது ஏன்?” என்று கேட்கிறார்கள்.

மாறுபட்ட கதைகள் ஊக்கத்துடன் வருகிற மலையாளம், மராத்தி, வங்காளம் உள்ளிட்ட சில பிற மாநில மொழிப் படங்களின் நிலைமை என்ன? கிரிஸ் காசரவல்லி, ஷ்யாம் பெனகல், சத்யஜித் ரே போன்ற சிறப்புமிக்க படங்களைத் தந்த புகழ்பெற்ற இயக்குநர்கள், சுயசாதி விமர்சனத்தைக் கூர்மையாக வைக்கும் படங்களைப் படைத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார் ‘மறுபக்கம்’ திரைப்பட இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் அமுதன் ராமலிங்கம் புஷ்பம். அதே வேளையில், அவர்கள் பிராமண சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தச் சாதிகளில் நிலவும் வறட்டு கௌரவமும், அதன் இழப்புகளும், பிற்போக்குத்தனங்களும், பெண்ணடிமைத்தனங்களுமே அவர்களது படங்களில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டன.

பிராமணர் அல்லாத பிற சாதிகள்?

இந்தி மொழியில், பிராமணர்களுக்கு அடுத்த தட்டில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் பிரிவுகளைச் சேர்ந்தோரை ஆண்ட பரம்பரைகளாகவும் ஜமீன் வாரிசுகளாகவும் பெரும் பண்ணையாளர்களாகவும் தொழிலதிபர்களாகவும் காட்டுகிற படங்கள் நிறைய வருகின்றன. அந்தச் சமூகங்களைச் சேர்ந்தோர்தான் கதாநாயகர்களாகவும் வந்து பாய்ந்து காதலித்து அதிரடிகள் செய்வார்கள். அவர்களது மாளிகைகளின் நடுக்கூடத்தில் பட்டுத் தலைப்பாகைகளோடும், பளபள ஆடைகளோடும், உறவினர்களோடும் நாயகக் குடும்பமே பாடி ஆடுகிற காட்சிகளை பாடல்களுக்கான தொலைக்காட்சிகளில் பார்க்கத்தானே செய்கிறோம்? அவர்களுக்கும் அடுத்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிற இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தோர், எளிதாகச் சொல்வதென்றால் சூத்திர சாதிகளைச் சேர்ந்தோர் அந்த மாளிகைகளின் ஏவலாட்களாகவோ, அடியாட்களாகவோதான் பெரும்பாலும் பாத்திரப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் நிலையை வில்லன் என்ற அளவுக்கு உயர்த்தியிருக்கிற படங்களே அண்மைக்காலமாகத்தான் வரத்தொடங்கியுள்ளன என்கிறார் அமுதன். அவர்களும் அந்தப் படங்களில் தங்கள் சாதிப்பெருமைகளைப் பேசுவார்கள்.

மற்றபடி, நாகராஜ் மஞ்சுளே இயக்கிய ஃபன்றி போன்ற படங்கள், சித்திரிக்கப்படும் மக்களின் தொழில் (ஃபன்றி என்பதே பன்றி மேய்க்கிறவர்கள் என்ற பொருளில் ஆதிக்கசாதியினர் பயன்படுத்துகிற சொல்தான்), வீடுகள், தெருக்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்துவதன் மூலமாகவே ஒடுக்கப்படும் மக்களைச் சித்தரிக்கின்றன. வேறு பகுதிகளைச் சேர்ந்த, வேறு முறைகளில் இழிபடுத்தப்படுகிற மக்கள் தங்களையே அந்தக் கதாபாத்திரங்களில் காண்பார்கள். ஏன், ஒடுக்கப்பட்ட பிரிவுகளிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கிற சமூகச் சூழலில், தாங்கள் மேலேயிருந்து மிதிக்கப்படுவதன் கோபத்தைவிட, தங்களுக்குக் கீழே மிதிபடுவதற்கான மக்கள் இருப்பதில் திருப்தியடைகிற சாதிப்படிநிலைக் கட்டமைப்பில், இப்படிப்பட்ட படங்கள் சில அடையாளங்களைத் தேட வைக்கக்கூடும்.

இந்தியில் ஒலித்த சமூக நீதிக் குரல்

பிரகாஷ் ஜா இயக்கிய ‘இட ஒதுக்கீடு’ (ஆரக்ஷன்) என்ற தலைப்பிலேயே ஓர் இந்திப் படம் வந்தது. காதல் கதையைக் கூறும் அந்தப் படத்தில் ஒரு கல்லூரிச் சுவரில் ‘இட ஒதுக்கீடு எங்கள் பிறப்புரிமை’ என்று யாரோ எழுதிவைக்க, அதையொட்டி எழும் வாக்குவாதத்தில், “தகுதியை வளர்த்துக்கொள்ளாமல், பாடுபட்டுப் படிக்காமல், வரலாற்றைப் பேசி வாய்ப்புகளை அனுபவிக்கிறீர்கள்” என்று ஒரு “உயர் சாதி”(?) மாணவர் கேட்க, அதை ஒரு பேராசிரியர் ஆதரிக்க, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் பதில் கூறும் வகையில் சமூகநீதிக் கருத்துகள் கூர்மையாக முன்வைக்கப்படும். அரசாங்கப் பணிகளில் 87 சதவிகித இடத்தை, சமுதாயத்தில் 15 சதவிகிதமே உள்ள மேல்தட்டினர் பிடித்திருக்கிறார்கள், 85 சதவிகிதம் உள்ள பிற பிரிவுகளைச் சேர்ந்தோர் 13 சதவிகித வேலைகளில்தான் இருக்கிறார்கள், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற மற்ற நாடுகளிலும் சமூக அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கிறது என்ற தகவல்கள் படத்தில் உள்ளன. இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான கல்லூரி முதல்வராக அமிதாப் பச்சன் நடித்த அந்தப் படமும் “உயர் சாதி”(?), தாழ்த்தப்பட்ட சாதி என எந்தப் பிரிவையும் குறிப்பாக அடையாளப்படுத்தவில்லை.

எப்படியானாலும், திரைப்படங்களில் சாதி பற்றிய விவாதம் தேவையானதுதான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கேட்பது போல, சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி பற்றிப் பேசத்தானே வேண்டும்? கூடுதலாக இன்னொரு சிந்தனையும் எழுகிறது. குறிப்பிட்ட ஒரு சாதியை மட்டும் ஒழிப்பதல்ல சமத்துவ இயக்கங்களின் நோக்கம். அதேபோல் குறிப்பிட்ட சாதி மட்டும் விடுதலை பெறுவதும் நோக்கமல்ல. ஒட்டுமொத்த சாதிய அமைப்பே ஒழிக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, ஒரு சினிமாவில் குறிப்பான ஒரு சாதிப் பெயர் சொல்லப்படுகிறதா என்ற கேள்விக்கே தேவையில்லை. எங்காவது, எப்போதாவது குறிப்பான சாதிப் பெயர்களைச் சொல்லியே திரைப்படம் வந்திருக்குமானால் அதையும் தெரிந்துகொள்ளலாம்.

எப்படி இந்தியாவின் சட்டப் புத்தகத்தில் சாதி இல்லை என்றாலும், சட்டச் செயலாக்கங்களிலும் சமூகச் சடங்குகளிலும் சாதி இறுக்கமாக இருக்கிறதோ, அப்படி சினிமாவில் நேரடியாக சாதி சொல்லப்படாவிட்டாலும் சித்திரிப்புகளில் சாதியும் இருக்கிறது, சாதி எதிர்ப்பும் இருக்கிறது. சாதி ஒழிப்பு மேலும் மேலும் வலுப்பெறுவதை நோக்கமாகக் கொண்ட விவாதக் களம் இன்று திரைப்படக் கதைகள் பேசுகிற சாதிப் பிரச்சினைகளைத் தொடுகிறது. நாளை, திரையுலகில் நிலவுகிற சாதிப் பிரச்சினைகளைத் தொடாமல் விட்டுவிடுமா என்ன?

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

ஞாயிறு 2 டிச 2018