மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

சிறப்புக் கட்டுரை: சங்கத் தொனியில் நவீன உரையாடல்!

சிறப்புக் கட்டுரை: சங்கத் தொனியில் நவீன உரையாடல்!

கரிகாலன்

ஶ்ரீவள்ளியின் 'பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை' - கவிதைப் பிரதியை முன்வைத்து…

தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், அணு உலை, நீட் எனத் தமிழகம் கொதிநிலையிலிருக்கும் தருணத்தில் ஶ்ரீவள்ளி காதலைப் பாடுவது அவசியமா எனத் தோன்றலாம். அதிகாரம் நமக்கு மீண்டும் மீண்டும் கண்ணீரையே பரிசளிக்கிறது. வரலாற்றிலும் சமகாலத்திலும் வேண்டியவர்களின் பிணத்தைச் சுமந்து நம் கரங்கள் மரத்துப்போய்விட்டன. நமது ஒப்பாரி பாடல்களின் இசையை, கண்ணீரின் ருசியை அருந்தி இளைப்பாற அதிகாரம் விரும்புகிறது. இப்படியிருக்க நாம் ஏன் திரும்பத் திரும்ப அழ வேண்டும்? நாம் ஏன் போராட்டக் களத்தில் அதிகாரம் திகைப்படைகிற மாதிரியோ அல்லது குழம்பிப்போகிற மாதிரியோ ஒரு காதல் கவிதையை வாசிக்கக் கூடாது? ஸ்ட்ரீட் டான்ஸ் என்பதை ஏன் ஒரு போராட்ட வடிவமாக மாற்றக் கூடாது?

கலையும் காதலும் தரும் ஆற்றல்கள்

சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் எல்லாத் துன்பங்களையும் அனுபவித்த பிறகு மதுரை செல்கிறார்கள். வழியில் கவுந்தி அடிகள் அவர்களை மாதரியிடம் அடைக்கலப்படுத்துகிறார். அவளது இல்லத்திலிருந்து செல்லும்போதுதான் கோவலன் கொல்லப்படுகிறான். மாதரி தீய நிமித்தங்கள் வழி கோவலனுக்கு இன்னல் என்பதை உணர்கிறாள். அத்தகைய துன்பத்திலிருந்து கண்ணகி மீளும் வண்ணம் தனது மகள் ஐயையை ஏழு ஆயர்குலப் பெண்களோடு சேர்ந்து குரவைக் கூத்து ஆடச் சொல்கிறாள். கலை, காதல் இரண்டுமே வாழ்வின் இடர்களைக் கடக்க மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் ஆற்றல்கள். வள்ளியின் கவிதைகளும் அப்படியே!

இப்படித் தொடங்கலாம். காதலே மனித வாழ்வை இயக்குகிற மகாசக்தி. ஒரு வகையில் காதல் ஆன்மிகம். மனிதர்கள் காதலின் பொருட்டு அனைத்தையும் துறக்கச் சித்தமாக இருக்கிறார்கள். இன்னொரு வகையில் காதல் அரசியல். காதலின் பொருட்டு உலகில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தங்கள் அணைந்திருக்கின்றன. காதல், மனித உடலில் நதியை, சமுத்திரத்தை, மலையை, பிரபஞ்சத்தை, தரிசிக்கிற ரசவாதம். நித்திய மானுட அமைதியைக் காதலால்தான் கொண்டுவர முடியும் என்கின்றன ஶ்ரீவள்ளியின் கவிதைகள். இவ்வகையில் அளவற்ற ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்குவதாக அமைந்திருக்கிறது ஶ்ரீவள்ளியின் ’பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை’.

உறைந்த சமுத்திரத்தைப் பிளக்கும் கோடரி

ஸ்ரீவள்ளி உருவாக்கும் தீவிரமான காதல் சித்திரங்கள் பிரமிப்பானவை. நமது காலம் நமக்களித்த அவநம்பிக்கைகளை, வன்முறைகளை, அழிப்பதாக அமைந்தவை. காதலின் போதாமைகளை, அபத்தங்களை, நொய்மைகளை, வாதைகளை, களிகளை அருகருகே அடுக்கிக்கொண்டே செல்கிறார். இக்கவிதைகளில் பொதிந்து கிடக்கிற தீவிரமான மன எழுச்சி நம்மைத் திகைக்க வைக்கிறது. ஃப்ரன்ஸ் காஃப்கா கூறுகிறபடி நம்முள் உறைந்து கிடக்கிற சமுத்திரத்தை ஶ்ரீவள்ளியின் கவிதைகள் கோடரிபோல பிளக்கச் செய்கின்றன.

கவிதைகளிடையே அடிக்கடி புறாக்கள் ஒரு குறியீட்டைப் போல பறந்தவாறு இருக்கின்றன. நித்திய சமாதானத்தைத் தேடும் காதலின் திசையில் இவை பறப்பதைப்போலத் தோன்றுகின்றன. இயற்கையிடமிருந்து, சிற்றுயிரிகளிடமிருந்து, கற்றுக்கொள்கிற சித்தர்களின் மனம் தென்படுகிறது ஶ்ரீவள்ளியிடம். கற்றலின் தொடக்கம் என்றொரு கவிதை. அதில் நம்மை அணிலிடமிருந்து மறதியைப் பயிலச் சொல்கிறார்.

பொதுவாக யதார்த்தத்திலிருந்து தப்பித்து, கற்பனையின் அல்லது காதலின் நிழலில் இளைப்பாற உதவக்கூடிய நிறைய கவிதைகளை இத்தொகுப்பு கொண்டிருக்கிறது. இங்கே யதார்த்தம் என்பது நாம் தற்காலத்தில் சந்திக்கும் ஏகாதிபத்தியம், இந்தியப் பெருந்தேசியம் உள்ளிட்ட அரசியல் யதார்த்தமும் ஆகும். காதல் கவிதை எவ்வாறு இத்தகைய அரசியலைப் பேசும் என ஒருவருக்குக் கேள்வி எழலாம். ஏகாதிபத்தியமும் இந்தியப் பெருந்தேசியமும் தமிழ் நிலத்தில் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவைப் பண்பாட்டுத் தளத்தினூடாக எடுத்துக்காட்டுகிற நுண்ணரசியல் முயற்சியாக இக்கவிதைகளை வாசித்தால் மேற்சொன்ன கூற்றை விளங்கிக்கொள்வது வசதியாக இருக்கும்.

மீண்டு வரும் பறவைகள்

நம்மிடம் ஐந்திணை நிலங்களிருந்தன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பன்முக அழகுடைய நிலமிது. இந்நிலங்களின் தட்பவெப்பத்துக்கேற்ற உணவு, உடை, தொழில், காதல் ஆகியவை இருந்தன. இன்று உணவு என்பது தமிழகத்தின் நெடுஞ்சாலையெங்கும் பிரியாணியாகச் சுருங்கியிருக்கிறது. சங்கப் பாடல்களில் அறுபதுக்கும் மேற்பட்ட பறவைகள் இருந்தன. இருதலைப்புள், வானம் வாழ்த்தி, வம்பநாரை, தண்பறை நாரை, வண்டினம், தாதூண் பறவை, அசை வண்டு, இருங்குயில், அன்னம் ஆண்டலை, சிதறி (சிள்வண்டு), செவ்வரி, தடந்தாள் நாரை, இராசாளிப் பறவை, எழால், சிச்சிலிப் பறவை , சிரல், கோகிலம் போன்ற வண்ணப் பறவைகள் நமது அகப் பாடல்களில் திரிந்து அழகூட்டின. இன்றைய அடையாள அழிப்பால் ஐந்திணை மரபின் சாம்பலையே நிலமென நம்பத் தொடங்கினோம். நமது முதற்பொருள், சந்தையும் சந்தையின் நிமித்தங்களாகவும் மாறிப்போனது; நமது கருப்பொருள் ரத்தமில்லாத, சதையில்லாத, ஆரிக்கிள், வென்ட்ரிக்கிள் இல்லாத ஓர் ஆர்ட்டினாக இருக்கிறது. இதையொத்தே நமது நவீன கவிதைகளின் உரிப்பொருள் தும்பி வண்ணத்தியென இரு மெய்நிகர் புட்கள் மட்டுமாக வனப்பிழந்திருக்கின்றன.

ஆனால், ஶ்ரீவள்ளியின் கவிதைகளில் நம்மால் குருகு எனப் பழந்தமிழ்ப் பறவையான நாரை போன்றவற்றைக் காண முடிகிறது. இவ்வுலகம் மனிதர்களுக்கானது மட்டுமன்று. குருகு போன்ற பறவைகளுக்கானதும்தான். நமது அகப் பாடல்களில் மான், மந்தி, குருகு இவற்றின் காதல் காட்சிகள் நிறைய கிடைக்கின்றன. அவை தலைவன் தலைவியின் காதலுக்குப் பின்னணியாக விளங்கிக் கவிதையை அழகுபடுத்துகின்றன. இத்தகைய மரபின் தொடர்ச்சியிலிருந்து பாடுவதைப் பழைமையை ஆராதிக்கும் போக்காக நாம் எண்ணத் தேவையில்லை. உலகத்தை உய்விக்க ஒரே கடவுள், ஒரே தலைவன் போதுமென்கிறது ஏகாதிபத்தியம். எல்லாருடைய பசிக்கும் ஒரே வகை கோதுமை, எல்லாருடைய தாகத்துக்கும் ஒரே கொக்கோ கோலா போதும் என்கிறது. எல்லோரையும் டாம் க்ரூஸ், ஏஞ்சலினா ஜோலியின் கண்களாலேயே கனவு காணச் சொல்கிறது. மூன்றாம் உலக வாழ்வைத் தனது நிழலாக மாற்றிக் கொண்டிருக்கிறது ஏகாதிபத்தியம். இவ்விடத்திலிருந்துதான் ஶ்ரீவள்ளியின் கவிதைகளை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

இக்கவிதைகளில் வேங்கை மரங்களில்லாத, கான மயில்களில்லாத நிலம் காட்சியாகிறது. மாங்கனிகள் கார்பைட்டில் சிவக்கின்றன. இந்நிலத்தில் திரிந்த குரங்குகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுவீதியில் வித்தை காட்டுகின்றன. இந்தத் திணையழிவின் பின்னணியில் 'உன் செவிகளின் முன் மண்டியிட்டிருந்த என்னை அப்போது வானம் ஆரத் தழுவிக்கொண்டது' என்கிறார் வள்ளி. உடல் என்பது பிரபஞ்சத்தின் அலகு. நதியை, கடலை, மலையை, ஆகாயத்தை இழந்த மனித உடல் காதலைப் பிரபஞ்சமாகத் தரிசித்து மண்டியிடுகிறது. சங்கப் பாடலின் அழகுகளைத் தொட்டுக் காதலைப் பாடும் இவரது கவிதை இயக்கத்தை, இழந்த நம் அடையாளத்தை மீட்கும் அரசியல் செயல்பாடாக எண்ண வேண்டியுள்ளது.

கவிதை வாசிப்பு சோம்பேறிகளுக்கானதில்லை என்கிறார் ஶ்ரீவள்ளி. தொகுப்பில் 'இரு வேறு உலகங்களின் அரிய கானம்' என்று ஒரு கவிதை. இதில்

நீரோரன்ன சாயல்

தீயோரன்ன மாறினதைப்போல்

என வருகிறது. இதை முழுமையாக விளங்கிக்கொள்ள நமக்குக் குறுந்தொகை தெரிந்திருந்தால் நலம்.

மால் வரை இழி தரும் தூ வெள் அருவி

கல் முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற்

சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்

நீரோரன்ன சாயல்

தீயோரன்ன என் உரன் அவித்தன்றே

பிரமிப்பூட்டும் படிமங்கள்

கவிதை நுட்பம் பேணும் கலை. அது ஒரு தேர்ந்த பொற்கொல்லன் நகை செய்வது போன்ற கலை. அதை அறிந்தவரென்பதால் இவர் உருவாக்கும் படிமங்கள் பிரமிப்பாக இருக்கின்றன. ஓரிடத்தில் நிலவொளியை ‘வெண்பட்டு மிருக ஒளி’ என்கிறார். இது விரிக்கும் கற்பனை அபரிமிதமானது.

கவிதை வாசிப்பு ஒருவித உழைப்பு. கவிதையில் ஆசிரியர் சுமையாய் அமர்ந்திருப்பதில்லை. அது முழுமையைத் தேடும் முழுமையற்ற கலை. வாசிப்பவர்களை ஒரு நல்ல கவிதை கவிஞராக மாற்றிவிடுகிறது. வள்ளியின் கவிதைகளும் அப்படிதான்.

ஒரு கவிதையில் கடற்கரையில் சிற்றில் காட்டும் காட்சி ஒன்றைக் காட்டுகிறார். சிற்றில் என்பது ஒரு மாபெரும் கனவு. கடலும் கிழவனும் நாவலில் கிழவன் ஒரு பெரிய மீனைப் பிடிக்கக் கனவு காண்கிறான். ஒருநாள் அவன் விரும்பியபடி பெரிய மீனொன்றைப் பிடிக்கிறான். ஆனால் கரைக்கு வரும்போது அந்த மீனின் கூடுதான் இருக்கிறது. நமது சிற்றில்களைக் கடவுளோ, காதலோ கலைத்தபடி இருக்கிறது. ஆனாலும் அந்தக் கிழவனைப் போல் மீனின் கூடொன்றைக் கைப்பற்றவாவது நமக்குக் கனவுகள் தேவைப்படுகின்றன.

ஶ்ரீவள்ளியின் கவிதைகளில் பெண் உடல் ஒரு சமத்துவ வெளியாக இருக்கிறது. இவரது கவிதைகளில் 'முட்டுவென்கொல்' என நள்ளிரவில் தூக்கமிழந்த ஔவையின் தீவிரமிருக்கிறது. ஆனாலும் பெண் உடலை ஆணுக்கு ஒப்புக்கொடுக்கிற பால் படிவேற்றுமைகள் இல்லை. ஒப்பீட்டளவில் பெண் உடல் பல பாலியல் மையங்களை உடையது. அது காமத்தைப் பெற்றுக்கொள்கிற பிச்சைப் பாத்திரமில்லை. பிறகு, வழங்குகிற அமுதசுரபியா அது என்றாலும் சந்தேகமே! காமம் எடுக்கவும் கொடுக்கவுமான சமத்துவ விளையாட்டு. 'இதை என் சுண்டு விரல் பற்றி நீ உறங்கிய நாளில்', 'என்னோடுதான் இருக்கிறாய்' போன்ற இவரது கவிதைகள் நிகழ்த்திக் காட்டுகின்றன. இதனால்தான், ஶ்ரீவள்ளி காதல், காமம், அன்பை நாடிச் செல்லும் ஆன்ம விழைவு அனைத்தையும் சங்கத் தொனியில் நின்று பேசினாலும் அதை நவீன கவிதைக்குரிய உரையாடலாக, சமகாலத்துக்கான சிந்தனை முறையாக மாற்ற முடிகிறது. இந்தக் கவிதைகள் முழுமையைத் தேடும் முழுமையற்ற நிலையில் வாசகப் பங்கேற்பைக் கோருவதாகவும் உள்ளன.

வள்ளியின் கவிதைகளை வாசிக்கும் ஒருவருக்கு அதைத் தனது கவிதையாக மாற்றிக்கொள்கிற அத்தனை சுதந்திரத்தையும் இத்தொகுப்பு வழங்குகிறது. வன்முறையும் குரோதமும் நிறைந்த பொழுதில் ஶ்ரீவள்ளி தன் கவிதைகளூடாக அன்பைத் தேடுபவராக இருக்கிறார். அன்பற்ற வீதிகளில் அலைந்த கமலா சுரையாவின் (I who have lost / My way and beg now at strangers' doors to / Receive love, at least in small change?) குரலை இக்கவிதைகளில் தொடர்ந்து கேட்க முடியும்.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

திங்கள் 30 ஜூலை 2018